Sunday, March 18, 2007

'இலங்கைக்கு அனைத்துலக மனித உரிமை கண்காணிப்புக்குழு தேவையற்றது'

"இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்பாளர்கள் குழு தேவையற்றது" என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க வருமாறு கடந்த திங்கட்கிழமை ஜெனீவாவில் மகிந்த சமரசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.

கொழும்பு அரசியல் கட்சிகளிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதனைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"சில நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக்கொள்வது போல ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியமற்றது. சிறிலங்காவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்பாட்டின் பிரகாரம் சிறிலங்காவே தமது பிரச்சனைகளை கையாள்வதற்குரிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மனித உரிமைகள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இந்த உடன்பாடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல உடன்பாடுகளில் ஒன்று.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி றொறி மக்கோவன் சிறிலங்காவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குகிறார். வெளிநாட்டு அதிகாரிகள், நீதிபதிகள், மனித உரிமைகள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து அவர் தனது பணியை ஆரம்பிப்பார். இந்த வேலை நடைபெறும் போது மேலதிக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அதில் இணைந்து கொள்வார்கள்.

விசாரணை ஆணைக்குழுவை அரசாங்கம் நியமனம் செய்ததும், வெளிநாட்டு நிபுணர்கள் குழுவின் மேற்பார்வையும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை தெளிவாக விளக்கியுள்ளது. எனவே அனைத்துலக கண்காணிப்பாளர்கள் தேவையில்லை" என்றார் அவர்.

கருணா குழுவினது சிறார் படைச் சேர்ப்பிலும், மனித உரிமை மீறல்களிலும் அரசாங்கப் படையினரின் பங்களிப்புக்கள் உண்டு என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி அலன் றொக்கின் அறிக்கையானது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்திருந்தது.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன விடுத்த வேண்டுகோளை ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, சுவீடன் உட்பட பல நாடுகள் ஆதரித்துள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த கூட்டத்தொடரில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதும், அங்கு மனித உரிமை மீறல்களை தடுப்பதில் எந்தவிதமான முன்னேற்றங்களும் தென்படவில்லை. எனவே அனைத்துலக கண்காணிப்புக்குழு அவசியமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.

No comments: