ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்காவின் மனித உரிமைகள் பேரனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரபட தீர்மானித்திருக்கும் தீர்மானத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளை திங்கட்கிழமை (12.03.07) ஆரம்பமாகி 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது.
இது தொடர்பாக மகிந்த சமரசிங்க தெரிவித்ததாவது:
"அங்கு சிறிலங்கா தொடர்பாக தீர்மானங்கள் விவாதிக்கப்பட மாட்டாது. ஆனால் சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்மானத்தை கொண்டுவர முன்னர் தீர்மானித்திருந்தது. எனினும் அது முன்னர் விவாதிக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் அது விவாதிக்கப்படலாம்.
நான் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர உறுப்பினர்களை சந்தித்து சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிப்பேன். சிறிலங்காவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் கடந்த வருடம் ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை விவாதத்திற்கு அது எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியாது.
மனித உரிமைகள் தொடர்பாக நாம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதனை குறிப்பாக விசாரணை ஆணைக்குழு மற்றும் அனைத்துலக நிபுணர் குழு தொடர்பாக அவர்களுக்கு நான் விளக்குவேன்.
எமக்கு எதிரான தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என நாம் நம்புகிறோம். இந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்வதற்கு இது நேரமல்ல" என்றார் அவர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தை முஸ்லிம் மாநாட்டு அமைப்பும் பல ஆசிய நாடுகளும் எதிர்த்திருந்தன.
மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனைகளை அமெரிக்கா எதிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
Sunday, March 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment