Thursday, March 08, 2007

நான்காம் கட்ட ஈழப்போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்.

நான்காம் கட்ட ஈழப் போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு தெரிவித்துள்ளார்.
எதிர்பாராது இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வினோதரனின் வீரவணக்கக் கூட்டம் மாங்குளத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாங்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

பொதுச்சுடரை தளபதி கேணல் பானு ஏற்றி வைத்தார். வித்துடலுக்கான ஈகச்சுடரை மேஜர் வினோதரனின் துணைவியார் ஏற்றி, மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து வித்துடலுக்கு மலர்மாலைகளை மேஜர் வினோதரனின் தந்தை மற்றும் தாயாரும் தளபதி கேணல் பானு, குட்டிசிறீ மோட்டார் படையணி சிறப்புத்தளபதி கோபால், தமிழீழ வைப்பக ஆளுகைப் பணிப்பாளர் வீரத்தேவன், தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் புகழ், முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மணன் ஆகியோர் அணிவித்தனர்.

வீரவணக்க உரைகளை தளபதி கேணல் பானு, சிறப்பு மருத்துவப்போராளி சோபிதா, சிறப்பு மருத்துவ தொண்டர் உமாறஞ்சனி, துணுக்காய் கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் சு.பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து வித்துடல் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பண்பாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தளபதி கேணல் பானு மேலும் தெரிவித்துள்ளதாவது:

"விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டு போராடுகின்ற ஒவ்வொரு போராளியும் மக்கள் படுகின்ற அவலங்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாவற்றையும் விரைவில் முடிவுக்குக்கொண்டு வரவேண்டும். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற இலக்கோடு தமது பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த இலக்கை இலட்சியத்தைக் கொண்ட போராளியான மேஜர் வினோதரனை நாம் இழுந்திருக்கின்றோம்.

விடுதலை என்பது சுதந்திரம் என்பது எந்த ஒரு நாட்டிலும் சும்மா கிடைக்கவில்லை. குருதி சிந்தி பல விலைகள் கொடுக்கப்பட்டு பெரும் போராட்டங்களுக்கு மத்தியில்தான் சுதந்திரத்தை மக்கள் பெற்றிருக்கின்றனர்.

எல்லோருக்கும் விடுதலைப் போராட்டத்துக்கான பங்களிப்பு இருக்கின்றது. இன்று வகை தொகையின்றி தமிழ் மக்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கொன்று ஒழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அவலங்கள் எல்லாவற்றையும் நீக்கவேண்டும் எனில் நாம் எல்லோரும் ஒன்றுதிரண்டு நிற்க வேண்டும். எதிரியைப் பொறுத்தவரை தொடர்ந்து போரின் மூலம் எங்களுடைய வலிமைகளை மழுங்கடிக்கலாம் என்று நினைக்கின்றான். இன்று எல்லோருடைய மனங்களிலும் இது பற்றிய கேள்விகள் இருக்கும்.

கடந்த கால வரலாற்றை நாம் மீட்டிப்பார்க்க வேண்டும். இரண்டரை ஆண்டுகள் மாங்குளம் வரையான பகுதிகளை எதிரி பிடித்து வைத்திருந்தான். இத்தனை காலம் பிடித்து வைத்திருந்த நிலங்களை நாம் பத்து நாட்களுக்குள் மீட்டு விட்டோம். சிங்கள ஆட்சிப்பீடத்துக்கும் இராணுவ தலைமைப் பீடத்துக்கும் மாறி, மாறி ஆட்கள் வரலாம். எங்களிடம் ஒரே தலைமைதான் இருக்கின்றது. அந்த தலைமை தன் இலட்சியம், குறிக்கோள் என்பவற்றில் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் உறுதியுடன் இருக்கின்றது.

சமாதான காலம் என்பது எமக்கு எல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஓன்றல்ல. ஆனால் எம்முடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை வெளி உலகுக்கு காட்ட வேண்டிய தேவை எமக்கு இருந்தது. இன்று அனைத்துலகம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அனைத்துலகத்துக்கு இது புரிகின்றது. அனைத்துலகத்தை எதிர்த்துக்கொண்டு சிங்கள அரசால் நிற்க இயலாது.

அமைதிக் காலத்துக்கு முன் எம்மை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அனைத்துலகத்துக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால் சமாதான காலம் எங்களை, எமது விடுதலைப் போராட்டத்தை, அதன் நியாயத்தை, நேர்மைத்தன்மையை, மக்கள் படுகின்ற அவலங்களை எம் மக்கள் ஒடுக்கப்படுகின்ற முறைமைகளை அனைத்துலக சமூகம் பார்த்திருக்கின்றது. அந்த ரீதியில் அனைத்துலகம் இதனை உணர்ந்திருக்கின்றது. அப்படி உணர்ந்த காலங்களாக, உணர்த்திய காலங்களாகத்தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

நாங்கள் விரைவில் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கின்ற எதிரிகளை விரட்டியடிக்க வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும். எதிரிகளை விரட்டியடித்து எமது நிலத்தை பாதுகாத்துக் கொள்கின்ற நிலை வரும் போது கண்டிப்பாக அனைத்துலகம் எங்களை அங்கீகரிக்கும். பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு எங்களை அங்கீகரிக்கும். எமது தனிநாட்டை அங்கீரிக்கும்.

30 ஆண்டுகளுக்கு மேலான போராட்ட காலம் பல நெருக்கடிகளைக் கொண்ட காலமாக இருக்கின்றது. அடுத்த கட்டமாக இருப்பது 4 ஆம் கட்ட ஈழப்போர். இந்தப் போரை நாம் வெல்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமக்கு வெற்றி நிச்சயம்.

பெரும் வெற்றிகளை பெற்றுத்தந்த எமது தேசியத் தலைவர் அவர்களின் கீழ்தான் நாம் இருக்கின்றோம். தேசியத்தலைவர் அவர்களின் காலத்தில் நாம் விடுதலையைப் பெறுவோம். அதற்கு நாம் அனைவரும் ஒன்று திரண்டு உழைப்போம்" என்றார் அவர்.
நன்றி>லங்காசிறீ