Friday, March 30, 2007

தமிழீழ வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை!!!




மின் அஞ்சல் ஊடாக சு.ப.தமிழ்ச்செல்வன், "ஜனசக்தி"க்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கேள்வி: விடுதலைப் புலிகள் சமீபத்தில் முதன்முறையாக விமானத்தாக்குதல் நடாத்தி இலங்கைப் படைகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் ஈழத்தமிழருக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன?

பதில்: சிறிலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, இன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டமையால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் தீவிரமடைந்தது. இப்படிப் படிப்படியாக எமது ஆயுதப்போராட்டம் வளர்ச்சியடைந்து இன்று ஒரு நடைமுறை அரசை இயக்குகின்ற அளவுக்கு வலுப்பெற்றிருக்கின்றது. பெருமளவு நிலப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற அளவுக்கும் எமது மரபுவழிக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பி எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுப்பதற்கும் தக்கவாறான பாரியளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.

இந்த வகையில் எமது படைக்கட்டுமானங்களினுடைய வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியுமே இன்று விமானப் படையின் தோற்றமாக மாறியிருக்கின்றது. எமது விமானப்படை இதுவரை பொறுமை காத்தது. இப்பொழுது சிறிலங்கா விமானப் படை எமது மண்மீது தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் அதன் மீது பதில் நடவடிக்கையொன்றை நடாத்தி அதனைச் செயலிழக்கச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அதனால் தான் எமது விமானப்படையைப் பயன்படுத்தி இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தோம். எம்மைப் பொறுத்தவரையில் எமது சுதந்திரப் போராட்டத்தில் இதுவொரு மைல்கல்லாகவே இருக்குமென நான் கருதுகின்றேன். இது ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வலிமையை அதிகரித்திருக்கிறது. இது விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு உந்துசக்தியாக அமையுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: விமானப்படைத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் என நினைக்கின்றீர்களா?
பதில்: சிறிலங்கா விமானப்படையினர் அண்மைக்காலத்தில் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசி பல நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு, பொறுமை காத்து இருப்பதென்பது எமது மக்களை ஒரு மிகப்பெரும் பேரழிவுக்குள் இட்டுச்செல்லும் என்றே நான் நினைக்கின்றேன். இந்நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்காலத்தில் இந்த இனவாத அரசின் விமானப் படையைச் செயலிழக்கச் செய்வதற்கும் நாம் எமது அனைத்து உத்திகளையும் கையாளுவோம். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும்மென்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகளின் படையிலிருப்பில் செக் விமானங்கள், ஐந்து விமானங்களுக்கு மேல் அவர்களிடம் விமானங்கள் இருக்க வாய்ப்பில்லை, இதனை ஒரு படையென்றெல்லாம் கூறமுடியாது என்பன போன்ற இலங்கை அரசின் கருத்துக்களுக்கு தங்கள் பதில் என்ன?

பதில்: விழுந்தாலும் தங்களுடைய மீசையில் மண்படவில்லை என்ற மாதிரியாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைகின்றன. நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைகளை வெளிப்படுத்தி வருவது சிறிலங்கா அரசின் வழமையாகும். எமது தாக்குதல்களும் அவற்றின் அழிவுகளுக்குப் பின்னாலுமே அவர்கள் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்கின்ற சூழல் உருவாகும்.இதற்கான பதில்களை எமது நடவடிக்கைகள் ஊடாக வெளிப்படுத்தவே நாம் விரும்புகின்றோம்.

கேள்வி: இலங்கைப் படையினர் இந்த விமானப்படைத் தாக்குதலால் கொந்தளித்திருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் மீது இது திருப்பிவிடப்படலாம். இந்நிலையில் சாதாரண சிங்கள மக்களைக் காப்பாற்ற இந்தத் தாக்குதல் உதவுமா?

பதில்: சிங்கள விமானப்படையினர் எமது மண்ணில் பொதுமக்களினுடைய இலக்குகளைத் தாக்கி அவர்களைக் கொல்வதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களினுடைய விமானப் படை வளர்ச்சியடைந்து அவர்களுடைய பாதுகாப்பு மையத்திற்குள்ளேயே புகுந்து வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு திரும்பி வந்திருக்கிறது.

இந்நிகழ்வு சிங்கள தேசத்தவருக்கும் இனவாதத் தலைவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றேன். எமது இலக்கு சாதாரண பொதுமக்கள் அல்ல. சிறிலங்கா இரணுவத்தின் இயங்கு தளங்களும் பேரினவாத செயற்பாட்டு மையங்களுமே எமது இலக்குகளாக இருக்கும். சாதாரண சிங்கள மக்களை நாம் எப்போதுமே இலக்கு வைக்கப்போவதில்லை.

கேள்வி: 2005 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அப்போதே தங்களிடம் விமானத்தளம் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது நீங்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்களே?
பதில்: ஒருபோதும் நாம் எமது விமானப் படைத்தளம், விமானங்கள் உள்ளதென்பதை மறுக்கவில்லை. எப்பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். 1998 ஆம் ஆண்டிலிருந்தே எமது விமானப் படையின் வளர்ச்சி ஆரம்பித்து விட்டது. இன்று ஒரு நல்ல நிலையில் அது இருக்கின்றது.

கேள்வி: தங்கள் விமானப்படையால் இந்தியப் பாதுகாப்பிற்கு ஆபத்து வரலாம். தென்னிந்தியாவிற்கு ஆபத்து வரலாம் என்றெல்லாம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இக்கருத்துக்கள் மிகவும் தவறானவை. எமது படைக் கட்டுமானங்கள் எப்பொழுதும் எமது மக்களைப் பாதுகாப்பதற்கும் எமது தாயகப் பிரதேசத்தை விடுவிப்பதற்குமாகவே கட்டியெழுப்பப்பட்டவையாகும். ஆகவே எமது மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு எதிராகவே அவை செயற்படுமேயன்றி ஒருபோதும் அவை இந்தியாவுக்கோ ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களினுடைய சுதந்திரம் என்பதும் அவர்களின் விடுதலை என்பதும் இந்திய தேசத்திற்கும் மிகுந்த நன்மையையும் நல்லுறவையுமே ஏற்படுத்தும். ஒருபோதும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எதிரான ஒரு போக்கை ஈழ விடுதலைப் போராட்டமோ தமிழீழ விடுதலைப் புலிகளோ கடைப்பிடிக்கமாட்டார்கள். தமிழர்களுடைய படைபலம் பெருகுவதையிட்டு எந்த அரசுமே கவலைகொள்ளத் தேவையில்லை. பதிலாக எமது படைபலம் பெருக்கி அதனூடாக சுதந்திரமடைந்தால் அதுவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பூரண அமைதியைக் கொண்டுவரும் என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அதிகாரபூர்வ போர்நிறுத்தம் என்ற நிலையில் விமானப்படைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கின்றதா? அல்லது சமரசப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு நெருக்கடி உத்தியென இதை எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: போர் நிறுத்தம் அமுலில் இருக்கின்ற போதே சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான விமானத் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்களினுடைய பெறுமதியான உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்ட போது நாம் பலமுறை இவற்றை நிறுத்தக் கோரினோம். ஆயினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை மதிக்காமல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு யுத்தத்தை தொடர்ந்து வரும் சூழலில் நாம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாத நிலையில் தான் இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். பேச்சுவார்த்தை என்பது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி ஆக்கிரமிப்புக்களை அகற்றி நேர்மையான வகையில் சிறிலங்கா அரசாங்கம் அணுகுகின்ற போதே சிந்திக்கக்கூடிய விடயமே தவிர இத்தகைய இராணுவ முனைப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற சூழலில் அது சாத்தியமற்றதொன்றே.

கேள்வி: தோள்மீது வைத்துப்பயன்படுத்தக்கூடிய ஏவுகணையின் மூலம் கூட இலங்கை விமானங்களை வீழ்த்தமுடியும். சாதாரண தமிழ் மக்களை அதன்மூலம் காப்பாற்றமுடியும். ஆனால் மக்களைக் காப்பாற்றும் அந்த தடுப்பு நடவடிக்கையினை விடுத்து தற்போது தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதற்கான நோக்கம் என்ன?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விமானப் படை விளைவிக்கின்ற மனிதப் பேரவலங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அதனால் தான் அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் படைத்தளக் கோட்டைக்குள் புகுந்து விமானப் படையின் தாளத்தில் வைத்தே அவற்றை அழித்திருப்பது எதிர்காலத்தில் அங்கிருந்து தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதென்பதைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. இன்னும் பாரிய இழப்புக்களை சிங்கள தேசத்திற்கு ஏற்படுத்த முடியும் என்பதை இத்தாக்குதல்கள் உணர்த்தி நிற்கும் என்றே நான் நினைக்கின்றேன். ஏனைய எமது மக்களை பாதுகாக்கின்ற உத்திகள் தந்திரோபாயங்கள் தொடர்பாக நான் இப்பொழுது கருத்துக்கள் கூற விரும்பவில்லை. நடைமுறைக்கு வரும் போது நீங்கள் அறிவது பொருத்தமாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இலங்கையிலுள்ள ஈழத்தமிழர் வாழும் பகுதிகளின் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிகளைக் குறைக்க செஞ்சிலுவைச் சங்கத்தின்மூலம் பொருட்கள் அனுப்ப இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விமானப்படைத் தாக்குதல் அதனைத் தடுத்து நிறுத்த வழி வகுக்காதா?

பதில்: எமது தாக்குதல்கள் என்பது சிறிலங்காப் படைகளுக்கு எதிரானதே. எந்தவிதமான சர்வதேச சமூகத்தையோ இந்தியாவையோ உதவியமைப்புக்களையோ குறிவைப்பதாக எமது தாக்குதல்கள் இருக்கப்போவதில்லை. எமது தாக்குதல்கள் எமது மக்களை பாரிய இன அழிப்புக்கு ஆளாக்குகின்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரானதாகவே அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.தமிழ் மக்களுக்கு உதவவிரும்புபவர்கள், மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வருபவர்களுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி அதற்கான வழிவகைகளை செய்யத் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி என்ற கருத்தினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டீர்கள். பின்னர் அது கைவிடப்பட்டதாகத் தெரிகின்றது. எதிர்காலத்தில் மீண்டும் இந்த அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: ஈழத்தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய முழுமையான ஒரு தீர்வையே விரும்புகிறார்கள். அது எந்த வகையில் அமையவேண்டும் என்பது பற்றி தீர்வை முன்வைக்கின்ற போதுதான் எம்மால் விமர்சனங்களை கூறக்கூடியதாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரையில் எமது மக்கள் தங்களினுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான தீர்வை எட்டுவதற்கே எப்பொழுதும் தங்களது கோரிக்கையை முன்வைத்து வந்திருக்கிறார்கள். அந்த அபிலாசைக்கேற்ற வகையிலேயே எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகிறார்கள் என்பதை அறியாது நான் கருத்துக்கூறுவது பொருத்தமில்லை என்றே நினைக்கிறேன்.

கேள்வி: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றார்கள். ஆனால் புலிகள் தாக்கியதாக பழியை உங்கள்மீது போடுகின்றார்கள். இத்தாக்குதலைத் தடுக்க இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என்ற ஒரு திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்கின்றது. அது பயனளிக்குமா?
பதில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழ் மக்களும் எப்பொழுதும் தொப்புள்கொடி உறவுகளாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.

இவ் உறவை சீர்கெடுக்கும் நோக்கோடு சிறிலங்காப் படைகள் தாங்களே தமிழக உறவுகளை சுட்டுக்கொன்றுவிட்டு அந்தப் பழியை எம்மீது சுமத்தி ஈழத்தமிழ் மக்களுடனான தமிழக மக்களின் உறவை இல்லாமல் செய்ய முனைகிறது.

இந்தச் சதிச்செயலை தமிழக உறவுகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சிறிலங்காப் படைகளினுடைய இத்தகைய அட்டூழியங்களுக்கு இதுவரையும் ஈழத்தமிழ் மக்கள் முகங்கொடுத்துவந்தார்கள். தற்போது தமிழக மக்களை நோக்கியும் தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருக்கிறார்கள். இதனைத் தமிழகத் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்பிரச்சார உத்தியை எவருமே நம்பப்போவதில்லை. அத்துடன் இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஒரு கூட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறிக்கொண்டு எமக்கும் இந்திய படைக்கும் இடையில் மோதல் நிலையை உருவாக்கி இந்திய அரசோடு முரண்பாட்டை உருவாக்கிவிட்டு அதனால் நன்மையடைய சிறிலங்கா அரசாங்கம் ஒரு சதியைச் செய்கின்றது.

நிச்சயமாக இந்தச் சதிக்குள் இந்திய அரசு விழுந்துவிடாதென்றே நாம் நம்புகின்றோம். தமிழ் மக்களின் நலன் கருதி தமிழகத் தலைவர்களும் தமிழக மக்களும் கூட இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
நன்றி>புதினம்.

No comments: