Friday, March 23, 2007

கொழும்பு அரசின் கீர்த்தி சர்வதேச ரீதியில் அம்பலம்.

மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மஹிந்தர் அரசின் "கீர்த்தி' தினசரி கொடிகட்டிப்பறக்கும் விதத்தில் அம்பலமாகிக்கொண்டிருக்கின்றது.

சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸில், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கண்காணிப்பதற்கான சர்வதேச அமையம், அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம் என்று பல்வேறு சர்வதேச அமைப்புகள் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கவலை தெரிவித்து வெளியிடும் அறிக்கைகளும், அறிவிப்புகளும் நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியுமாக வெளிவந்து, மஹிந்தர் அரசின் "மகத்துவத்தை' சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்த வரிசையில் அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம், கிழக்கில் அகதிகள் மீளக் குடியமரும் விடயம் தொடர்பாக உள்நாட்டில் இயங்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையின் சாராம்சம் நேற்று அம்பலமாகியிருக்கின்றது.
இந்தச் சுற்றறிக்கையில்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டிருப்பதை அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்த அகதிகளை மீளக்குடியமர்த்துவது தொடர்பான விடயத்தில் சில சர்வதேச நடைமுறைகள், பொதுவான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது ஐ. நாவினாலும் ஏனைய சர்வதேச அமைப்புகளினாலும் வகுக்கப்பட்ட நெறியாகும்.

இடம்பெயர்ந்த அகதிகள் மீளவும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற வேண்டுமானால் அது அவர்களின் சுயவிருப்பின்பேரில் பலவந்தம் ஏதும் பிரயோகிக்கப்படாத நிலையில் அவர்களுக்குரிய கௌரவத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய நடைமுறையாகும்.

கிழக்கில் அண்மைக்காலப் படை நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் தமிழ் அகதிகள் விடயத்திலும் இதே சர்வதேச ரீதியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றே ஐ. நா. அமைப்புகளும் ஏனைய சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன.

ஆனால், இதற்கு மாறாக கிழக்கில் ஆயிரக்கணக்கான அகதிகள் தத்தமது இடங்களில் மீளக்குடியேற்றப்படுவதற்காக அண்மையில் பலவந்தமாகக் கூட்டிச் செல்லப்பட்டமை குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தமையும், அது குறித்து இப்பத்தியிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையும் தெரிந்தவையே.

இங்கொன்றும், அங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அவை என்றும், இனி அத்தகைய சம்பவங்கள் இடம்பெறா என்றும் இலங்கை அரசுத்தரப்பில் சமாதானம் கூறப்பட்டது.

ஆனால் அந்தச் சமாதானம், செயற்பாட்டளவில் நடைமுறைக்கு வரவில்லை என்பதை அகதிகளுக்கான ஐ. நா. தூதரகத்தின் பிந்திய சுற்றறிக்கை நிரூபித்திருக்கின்றது.

கிழக்கில் மிகக் கோரமான கொடுமையான படு பயங்கரமான வகையில் இராணுவத் தாக்குதல்களை நடத்தி, அதன்மூலம் பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, இடம்பெயர வைக்கும் இலங்கை அரசுத்தரப்பு, அதே வேகத்தில் அதே மாதிரி பலவந்தமாக அந்த மக்களை மீளக் குடியமர்த்தவும் முயல்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குற்றம் சுமத்தி வருகின்றது. அதை உறுதிப்படுத்துமாற்போல அகதிகளுக்கான ஐ. நா. தூதரக சுற்றறிக்கை அமைந்துள்ளது.

அரசுத் தரப்பு பலவந்தமாக மேற்கொள்ளும் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையோடு இணைந்து செயற்படுவதன்மூலம், அந்த நடவடிக்கையை நியாயப்படுத்தவும், அதற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கவும் தான் தயாரில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ள அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம், அதன் காரணமாக, ஏற்கனவே கிழக்கில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக தனது பிந்திய அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக வந்திருக்கும் தமது பூர்வீக இடங்களுக்குத் தாங்கள் திரும்பி, மீளக் குடியமர்ந்தால், அரசுப்படைகளுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்கள், துணைப்படைகள் போன்றவற்றின் அச்சுறுத்தலுக்கும், தொந்தரவுகளுக்கும், தொல்லைகளுக்கும், கப்பம் கோரல்களுக்கும் தாங்கள் ஆளாக வேண்டி நேரும் என்ற அச்சமே, இடம்யெர்ந்த மக்களை மீளக்குடியமர விடாமல் பீதிக்குள்ளாக்கி வரும் அடிப்படை விடயம் என்பதும் இப்போது வெளியே தெரியவந்திருக்கின்றது.

மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் மஹிந்தர் அரசின் பெயர் சர்வதேச ரீதியில் தொடர்ந்து மோசமாகக் கெட்டு வருகின்றது. அரசுத் தலைமை இவ்விடயம் குறித்து அதிக சிரத்தை காட்டுவதாகத் தெரியவில்லை. அதனைவிட இராணுவ நடவடிக்கைகளிலும் யுத்த வெற்றிகளிலும் கொழும்பு அதிக முனைப்புக் காட்டுகின்றது. இதன் விளைவு கொழும்பு அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை அது புரிந்து கொள்ளாமல் புரிய எத்தனிக்காமல் இருப்பது மிகவும் விந்தையானது.
நன்றி>உதயன்.

No comments: