சிறிலங்கா கடற்கலங்களில் இந்தியப் படையினருக்கு அனுமதியில்லை: சிறிலங்கா அரசு
இந்திய கடற்படை அல்லது கரையோரக் காவல் படையினரை சிறிலங்கா கடற்படைக் கப்பல்களில் அனுமதிக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணை தூதுவர் ஹம்சா, இந்திய காவல் படையினரை சிறிலங்கா கடற்கலங்களில் அனுமதிக்க தயாராக இருப்பதாக கூறியதாக இந்திய ஊடகங்களில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்தே சிறிலங்கா அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா அரசு தமது கடற்கலங்களில் இந்தியப் படையினரையும் இணைத்து காவல் நடவடிக்கையில் ஈடுபட சம்மதித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது சிறிலங்காவின் பிரதித் தூதுவரால் தெரிவிக்கப்பட்டதாகவும் கருணாநிதி மேலும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை சிறிலங்கா அரசு நிராகரித்ததுடன் கருணாநிதியின் கூற்றுப் பொய்யானது எனவும் சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதை அவர் மறுத்துள்ளதுடன், இந்திய மீனவர்கள் சுதந்திரமாக சிறிலங்காவின் கடற்பிரதேசங்களில் மீன்பிடித்தலில் ஈடுபடுவதாகவும் அவர்களின் அதிகரித்து வரும் அழுத்தங்களை கண்டு அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை அடுத்து கடந்த திங்கட்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டதுடன், மாநில மின்சாரத்துறை அமைச்சர் என்.வீரசாமி தலைமையிலான குழுவினர் பேச்சுக்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாக்கு நீரிணையில் இந்திய - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு ரோந்தையே தாம் விரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறன சந்தர்ப்பங்களில் இந்திய அதிகாரிகளினால் சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தடுக்கமுடியும் எனவும் அது தெரிவித்துள்ளது.
இணைந்த சுற்றுக்காவல் நடவடிக்கையானது இந்திய கடற்படையினரையோ அல்லது கரையோர காவல் படையினரையோ சிறிலங்கா கடற்கலங்களில் ஏற்றிச்செல்வதாக அர்த்தப்படாது என சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment