இலங்கையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான முதற்படியாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு 2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே வழியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெய்த் வாஷ்ஷினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிளேயர், தனது நல்ல நிர்வாகத்தை பயன்படுத்தி எல்லாத் தரப்புக்களையும் 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை மீள நடைமுறைப்படுத்த வைப்பதுடன், அதன் மூலம் வன்முறைகளுக்கு முடிவு கட்டவேண்டும் என கெய்த் வாஷ் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ரொனி பிளேயர் தெரிவித்ததாவது:
சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்பாக உள்ள பிரச்சனைகளை என்னால் முற்றாக புரிந்து கொள்ள முடிகின்றது. அது ஒரு சவாலான நிலமை.
நாங்கள் அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம். ஆனால் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை கடைப்பிடிப்பது தான் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். பயங்கரவாதமும், வன்முறைகளும் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிகளல்ல என தெரிவித்தார்.
இதனிடையே, எல்லா இன மக்களிற்கும் வன்முறைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்த வாரம் பிரித்தானியாவிற்கு சென்றிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் மாக்கரட் பெக்கெற் தெரிவித்திருந்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:
தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை எமது அரசாங்கம் தீவிரமாக அவதானித்து வருகின்றது. மக்கள் பெரும் மனித அவலங்களை சந்தித்து வருகின்றனர். மனித உரிமை மீறல்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை. எனினும் அது சிறிலங்கா தொடர்பாக உலகின் அபிப்பிராயங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
இரு தரப்பும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதையே தற்போதைய நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு வழியல்ல என்பதனை நான் உறுதிபட தெரிவித்தக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் சிறிலங்காவிற்கு சென்றிருந்த பிரித்தானியாவின் உதவி வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல் விடுதலைப் புலிகளுடன் பிரித்தானியா எதிர்காலத்தில் பேச்சுக்களை நடத்தும் என தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசியல் தீர்வு என கூறிக்கொண்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மகிந்தவின் நடைமுறை அனைத்துலக ஆதரவை பெறுவதற்காக சந்திரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட சமாதானத்திற்கான போரை போன்றது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.
Wednesday, March 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment