Friday, March 09, 2007

போரின் விளைவை சிங்கள தேசமும் அனுபவிக்கும்!!!

சிறீலங்காப் படைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித அவலம் தமிழீழ மக்களுடன் மட்டும் நின்றுவிடாது, பாரிய போருக்கு வழி வகுத்து வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களுக்குள் மட்டும் 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து, பாரிய மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை அவலத்துக்குள் தள்ளும் சிறீலங்கா அரசாங்கம் அதற்குரிய விளைவினையும் சிறீலங்காவிலும் உணர நேரிடும் என, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசம் நோக்கி சிறீலங்காப் படையினர் பிற்பகல் முதல் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்ததாக இளந்திரையன் நேற்று மதியம் தெரிவித்தார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் முகாம்களைக் கைப்பற்றியதாக சிறீலங்காப் படையினர் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிகளை நோக்கி நேற்றிரவு முதல் சிறீலங்காப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்களை கைப்பற்றி இருப்பதாகவும், சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருந்தார்.

சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கு ஆதரவாக மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளிலுள்ள தமது படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும் சமரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை காலை கூறியிருந்தார்.

சிறீலங்கா இராணுவத்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இராணுவத்தினர் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக் கூறினார்.
நன்றி>பதிவு.

No comments: