Thursday, March 15, 2007

நோர்வேயில் கரும்புலிகள் பற்றிய விவரணச்சித்திரம் வெளியீடு.


கரும்புலிகள் இருவரைத் தெரிந்தெடுத்து, அவர்களை பேட்டி காணவும், அவர்களது வாழ்க்கை, பற்றுறுதி என்பன சம்பந்தமாக ஆழ்ந்து தகவல் பெறவும் வெளிநாட்டுப் படப்படிப்புக் குழு ஒன்றிற்கு முதற் தடைவையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி அளித்துள்ளனர் என My daughter the terrorist என்ற விவரணச்சித்திரத்தின் தாயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

58 நிமிடங்கள் நீடிக்கும் இவ்விவரணச் சித்திரத்தின் முதற்காட்சி கடந்த திங்கட்கிழமை நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள பாக்தியேட்டரில் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

பெண் இயக்குனரான பீற் ஆனஸ்ரட் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரு பெண் போராளிகளை மையமாக்கி இவ்விவரணச் சித்திரத்தை நெறிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் தர்சிகா, புகழ்ச்சுடர் எனற இயக்கப்பெயரையும், கத்தோலிக்க மதப்பின்னணியையும் கொண்டவர்கள். அத்துடன் தமது இளவயதுப் பருவத்திலிருந்தே விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்து, தற்போது கரும்புலிப் படையில் அங்கம் வகிப்பவர்கள்.

இவ் விவரணம் உருவாக்கப்பட்ட காலத்தில், இயக்குநரும் அவரது குழுவினரும், பெண்களை மட்டுமே கொண்ட அந்த முகாமுக்குள் இவ்விரு பெண் கரும்புலிகளினது நாளாந்த வாழ்க்கையை அவதானிக்கவும், சுதந்திரமாகப் புழங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

"இப் பெண்களிருவரையும் தாமே பேசுவதற்கு வழி செய்வதாலும், அவர்களுடைய சிந்தனைகளையும், கனவுகளையும் அறிவதனாலும், பயங்கரவாதம் பற்றி மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கும் முடியும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருந்தேன்" என இயக்குனர் பீற் ஆனஸ்ரட் ஸ்னிற் பிலிம் புரொடக்சன் தயாரிப்பாளர்களின் இணையத்தளத்தில் தெரிவித்தனர்.

இப் பெண் புலிகள் இருவரும் சமாதான பேச்சுக்கள் முன்னேற்றம் கண்ட காலத்தில், விடுதலைப் புலிகளின் சாதாரண போராளிகளாகச் சேவையாற்றிய போதே இவ் விவரணச்சித்திரம் எடுக்கப்பட்டதாகும்.

இப் போராளிகளில் ஒருவரின் தாயாரின் மூலம் இவர்களிருவரின் வாழ்க்கைப் பின்னணியையும் இவ்விவரணம் தேடிப் பதிவு செய்கின்றது.

விவரணச்சித்திரத்தின் கதாநாயகியாகிய தர்சிகா, கத்தோலிக்க மத அருட்சகோதரியாக வேண்டும் எனச் சிறு வயதில் விரும்பினாள் என்றும், அந்த சமயத்தில் தர்சிகாவின் தந்தை, வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா வான்படையினரின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார் என்றும் யுத்தத்தினால் சிதைவுற்ற சமுதாயத்தில் தனது குடும்பத்தை வளர்த்தெடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் அவளுடைய தாயார் கூறுகின்றார்.

"பிள்ளைப் பிராயத்தை உள்நாட்டு யுத்தம் ஊடுருவும்போது அதனனின்று தப்பிப்பது இயலாததொன்று. 12 வயதாக இருக்கையில் தர்சிகா தாயரிடமிருந்து காணாமற்போய், கரந்தடிப் படையினர் கைகளுள் வீழ்கின்றாள்" என தயாரிப்பாளர்கள் விவரணத்தின் சுருக்கத்தில் குறிப்பிடுகின்றனர்.

பெண் கரும்புலிகளின் வாழ்க்கை, அவர்களுடைய சிந்தனைகள் என்பவற்றையிட்டு ஆழமான தகவல்களைத் தருகின்ற ஒரு அலசல் மூலம் என இவ் விவரணச்சித்திரம் விபரிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு பொது மனிதரும் கொல்லப்படாத கட்டுநாயக்கா சிறிலங்கா விமானப்படைத் தளத்தின் மீதான யூலை 2001 தாக்குதல், மற்றும் பொதுமனிதர்கள் கொல்லப்பட்ட கொழும்பு உலக வர்த்தக மையத்தின் மீதான 1996 தாக்குதல் என்பன சம்பந்தமான ஊடக விபரங்களையும் இச்சித்திரம் உள்ளடக்கியுள்ளது.

நோர்வேயின் கருத்துச் சுதந்திரத்துக்கான அமைப்பான The jury of the Freedom of Expression Foundation (Fritt Ord) 2004 ஆம் ஆண்டு திரைச்சித்திரத் தாயாரிப்புக்கான ஆதரவு வழங்கத் தகுதியுள்ளவை எனத் தேர்ந்தெடுத்த எட்டுத் தயாரிப்புத் திட்டங்களுள் இவ் விவரணச் சித்திரமும் ஒன்றாகும். இச்சித்திரம், விவாதத்தை மேற்தொடர ஒரு அரங்காக அமையும் எனக் கருதப்பட்டதனால், தயாரிப்புக்கான உதவியைப் பெறத் தகுதி பெற்றது.

இவ் விவரணச் சித்திரத்தின் ஒளிபரப்பு உரிமையை, ரேடியா-கனடா ரெலிவிசன், டென்மார்க் ரிவி - 2, நோர்வே ரிவி - 2, துபாயில் உள்ள அல்-அரேபியா ரிவி சனல், யப்பானிய சற்றலைற் என்எச்கே-பிஎஸ்1 என்பன வாங்கியுள்ளன.

ஊடகத் தொழிற்றுறையில் 25 ஆண்டுகால அனுபவம் உள்ள இயக்குனர் பீற் ஆனஸ்ரட், குடியயேற்றக் காலத்தில், இந்தியாவிலும், இலங்கையிலும் நோர்வேயின் அதிகம் அறியப்படாத பாத்திரம் குறித்து, தனது முதலாவது விவரணச்சித்திரமாகிய Where the waves sing ஐ இயக்கியிருந்தார்.

Director: Beate Arnestad
Producer/Co-Director: Morten Daae
Cinematographer: Frank Alvegg
Production Company: Snitt Film Production

படத்தினை பார்க்க இங்கே சொடுக்கவும்.
Preview URL: http://www.snitt.no/mdtt/prints/movie.htm

தரவிறக்கி பார்க்க இங்கே சொடுக்கவும்.
http://www.snitt.no/movie/webpreview_mediumreal.mov

1 comment:

Anonymous said...

தகவலுக்கு நன்றி.