Wednesday, March 14, 2007

இந்திய - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலினால் பாதகங்களே அதிகம்: கலைஞர் கருணாநிதி.

இந்தியா - சிறிலங்கா நாடுகள் கடலில் கூட்டு சுற்றுக்காவல் பணியை மேற்கொள்வதினால் பாதகங்களே அதிகம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,

அக்கேள்வி பதில்களின் விபரமாவது:

கேள்வி: சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய பிரச்சினை என்னவாயிற்று?

பதில்: இப்பிரச்சினை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்த மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்திய மீனவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு தீவிரமாக இது பற்றி பேசி வருவதாகவும், இந்தியக் கடற்படைத் தளபதி, சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தமிழக மீனவர்களின் உயிரையும், நலனையும் பாதுகாக்க மத்திய அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கேள்வி: இந்தியா - சிறிலங்கா இராணுவத்தினர் கூட்டாகக் கடலில் சுற்றுக்காவல் நடத்துவதனை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா?

பதில்: கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் - "கூட்டாக சுற்றுக்காவல்" என்பதால் நாம் நினைத்துப் பார்க்கும் சாதகமான விடயத்தை விடப்பாதகம்தான் அதிகமிருக்கும் என்று அனுபவ ரீதியாக உணரப்படுகிறது - எனவே தவளையும் எலியும் கூட்டுச் சேர்ந்து கால்களைக் கட்டிக்கொண்ட கதையாகி விடக்கூடாதே அன்று கவலையுடன் பலரும் கருதுகிறார்கள்.

நன்றி>புதினம்.

No comments: