Tuesday, March 13, 2007

நாதியற்ற நிலையில் தமிழ்ச்சாதி இல்லை!!!

தமிழர் தம் தேச இறைமையை மீட்டு தமிழீழம் எய்தும் வரலாற்றின் காலப்பகுதி தற்போது நடைபெறுகிறது எனறே தமிழினம் உணர்கிறது.

ஆபத்தான ‘சமாதானம்’ எனும் நெருப்பாற்றை வெற்றியோடு கடந்து புடம்போட்ட புதிய புலிகளாக தமிழினமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எழுந்து நிற்கும் இக்காலப்பகுதி, தமிழரின் வீரம் செறிந்த, குருதியாலும் சதைகளாலும் வெல்லப்பட்ட விடுதலைவேள்வியை முடித்துவைக்கும் கணங்கள் என்றே எம் உளங்களும் உயிர்களும் கருதுகின்றன.

புதிய தேசத்தை பிரசவிக்க பிரசவவேதனை தொடங்கிய உணர்வு உலகத்தமிழரை ஆட்கொள்ள தொடங்கிவிட்டது. இவை ஆவேச வார்த்தைகள் அல்ல(rhetoric) அது களயதார்த்தமாகும். ( ground reality).

நீண்டபோராட்டத்தினதும் சமாதானப் பயணத்தினதும் இறுதியில் தமிழரின் அரசியல் நிலைப்பாடும் யதார்த்தமும் அனைத்துலகிற்கு மீளவலியுறுத்தப்பட்ட நிலையில், அமையப்போகும் தேசத்தை உள்ளடக்க (Accomodate) சிலநாடுகள் தயாராவது போன்ற தோற்றம் கூடதெரிகிறது.

இக்கணங்களில் தமிழ்தேசிய நிலைப்பாட்டுடன் செயற்படும் தமிழ் ஊடகங்களின் பங்கு மகத்தானது. வெற்றிக்கு மக்களை தயார்படுத்தும் அதேவேளை எதிரியின் உளவியற்போரை முறியடிக்கும் வல்லமையும் கடமையும் தமிழ் ஊடகங்களையே சாரும்.

அண்மையில் கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாழிதளில் ‘நாதியற்ற நிலையிலா தமிழ் சாதி?’ என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது.

சிறீலங்கா தேசம் தோல்வியுற்ற கேடுகெட்ட நாடாகிவிட்ட (failed & rogue state) நிலையில் தீவெங்கும் நிகழும் அரச படைகளினதும் ஒட்டுக்குழுக்களினதும் கடத்தல், காணாமல் போதல் சித்திரவதைகள், கோரப்படுகொலைகள் அன்றாடம் நிகழும் நிலையில் விரக்கியுற்ற நிலையில் எழுதிய ஆசிரியரின் சிலகருத்துக்கள் தமிழ்மக்களை கவலையுறச் செய்தும் உள்ளன.

நாட்டின் கோர நிலமையை சிறப்பாக வர்ணித்த வீரகேசரி ஆசிரியர் "தமிழ் மக்களின் இரட்சகர் யார் என்பது தான் இதுவரை தெரியவில்லை சிலர் இரட்சகர்களாக காட்சி தருகின்றனர். ஆனால், நடைமுறையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற அவலங்களுக்கு தீர்வு கிடைப்பதாக இல்லை. அப்படியானால் தமிழ் சாதி நாதியற்ற நிலையில் இருக்கின்றதா?"

என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ மக்களின் இரட்சரககள் யார் என்று தெரியாத நிலையில் அவர் (வீரகேசரி ஆசிரியர்) இருந்தாரா என்பதே இங்குள்ள கேள்வி.

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிறீலங்கா அரச பயங்கரவாத கொடுமையை நிறுத்த தமிழ்சமூகமும் அதேவழிமுறையை கையாளமுடியாது. வேறுவழிமுறைகளையே கையாள முடியும். மிகக்கவனமாக நகர்த்தப்பட்ட புலிகளின் இராணுவ அரசியல் வியூகமே தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற பல அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமானது.

மிகக்கவனமாக கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத்தின் இராஜதந்திர இருப்பை நாம் உணர்ச்சி வயப்பட்டு உடைக்கமுடியாது. எமது விரக்கியை வெளிக்காட்டும் எழுத்துக்கள் ‘விடுதலை வாசலில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்’ என்ற இலட்சோப இலட்சம் தமிழ் மக்களின் உளங்களை பாதித்து நம்பிக்கையிழக்கச் செய்யக் கூடாது என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி>பதிவு

No comments: