Friday, March 16, 2007

'சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கா ஆதரவளிக்கிறது'

"தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருவதையும், கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதனையும் சில கட்சிகள் மறந்துவிட்டன" என்று கொழும்பு ஊடகம் தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருக்கும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"அமெரிக்காவின் முன்னாள் கரையோர சுற்றுக்காவல் கப்பல் யுஎஸ்எஸ் கோஸ்ற் கட்டர் கறேஜியஸ் முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. இந்த கப்பலானது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு செப்ரம்பரில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்றதாக கூறி அடையாளம் தெரியாத கப்பலின் மீது கற்பிட்டிக் கடலில் தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த கப்பலின் பங்கு முக்கியமானது.

அண்மையில் மகிந்தவின் அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பொருட்கள் வேவைகள் வழங்குதல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது பல நெருக்கடிகளை தோற்றுவித்தாலும், அமெரிக்காவினதும், சிறிலங்காவினதும் உறவின் வளர்ச்சியின் அடையாளம் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் 5 ஆம் நாள் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் பொருட்களையும், சேவைகளையும் இலகுவாக பரிமாறிக்கொள்ள முடியும். அமெரிக்கா 89 நாடுகளுடன் இதே போன்ற ஒப்பந்தங்களை செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கண்டனங்களையும், ஜே.வி.பி தனது கவலையையும் இது தொடர்பாக தெரிவித்திருந்தன ஆனால் அவற்றை மூத்த அரசாங்க அதிகாரி நிராகரித்திருந்தார்.

பொருட்கள் வேவைகள் வழங்குதல் ஒப்பந்தமானது கடந்த வாரம் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை ரணிலின் காலத்திலேயே அமெரிக்கா ஆரம்பித்திருந்தது. அன்றைய ரணிலின் ஐக்கிய தேசிய முன்னனி அரசு அதனை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் அது நிறைவு செய்யப்படவில்லை. அன்று இந்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என முன்னாள் ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் யுஎஸ்எஸ் கோஸ்ற் கட்டர் கறேஜியஸ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டதுடன் அதன் பெயர் எஸ்.எல்.என்.எஸ் சமுத்ரா என மாற்றப்பட்டது.

இது சிறிலங்காவினால் வாங்கப்பட்ட இரண்டாவது கரையோர சுற்றுக்காவல் ரோந்துக் கப்பலாகும். முதலாவது கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுரா இந்தியாவிடம் இருந்து 19 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டது. மேலும் ஈகுரேபிள் கப்பல் கட்டும் இடத்தில் கட்டப்பட்ட ரினிற்றி மரைன் வகையை சேர்ந்த ஏழு அதிவேக தாக்குதல் படகுகளும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒரு மைல் கல்லாகும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் வேளை, ஐக்கிய தேசியக் கட்சி அதனை சாடியுள்ளது. அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள இரகசிய உடன்பாடு அது விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டைப் போன்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அடுத்த அமர்வின் போது தன்னால் சமர்ப்பிக்க முடியும் எனவும், இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் நாள் கூடவுள்ளது.

ரணிலின் காலத்தில் இரு நாடுகளின் குடியுரிமையாளர்களை அனைத்துலக குற்ற நீதிமன்னறத்தில் ஒப்படைப்பதில்லை என்ற உடன்பாடு அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் எட்டப்பட்டதாகவும். சந்திரிக்காவின் காலத்தில் அமெரிக்க பசுபிக் பிராந்திய சிறப்பு நடவடிக்கைப் பிரிவினால் நடத்தப்படும் இணைந்த கூட்டுப் பயிற்சி நடவடிக்கை திட்டம் அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மகிந்த அரசாங்கத்தினால் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் அண்மைக்காலமாக அதிகரித்து வந்த அமெரிக்க - இந்திய உறவில் ஏற்பட்ட பின்னடைவாகும். அண்மைக்காலமாக ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பொருளாதார நண்பர்களாக உறவைப் மேம்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிறிலங்காவின் சில அரசியல் கட்சிகள் உண்மைத்தன்மையை அறியத் தவறிவிட்டன. தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருவதனையும் கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதனையம் சில கட்சிகள் மறந்துவிட்டன.

மேலும் ஈராக்கின் மீது போர் தொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படின் தமது கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்புவதற்கு அமெரிக்கா சிறிலங்காவின் உதவியை நாடும் என 2002 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க தூதுவர் அஸ்லி வில்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படா விட்டாலும், இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவின் பங்களிப்பு உண்டு. ஏனெனில் சிறப்பு படையணிகளின் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்காவும் அமெரிக்காவும் தமது உறவைப் பேணி வருகின்றன.

1996 ஆம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து கிபீர் போர் விமானங்களை வாங்கும் போதும் அமெரிக்கா சிறிலங்காவிற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன் பின்னர் அமெரிக்கா பல முக்கிய உதவிகளை செய்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் மோதல்களில் படையினரின் சுடுவலுவையும் அதிகரிக்க அது உதவியுள்ளது."

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி>புதினம்.

No comments: