Saturday, March 10, 2007

அதிகாரப்பகிர்வு அவசியம், இல்லாது போனால் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்துபவர்களின் நோக்கங்களை அது இலகுவாக்கி விடும்: அமெரிக்கா.

"சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனது கவலையை தெரிவிப்பதுடன், நீண்டகால தேசியப் பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு காணப்பட வேண்டும்" என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

"சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கடுமையான நிலைப்பாட்டை" அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தாக சிறிலங்காவிற்கு சென்றிருக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் ஆசியப் பிராந்திய பிரதி அதிகாரியான ஷ்ரீவன் மான் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சந்தித்த பின்னர் ஊடகத்துறையினருக்கு கருத்து தெரிவிக்கையில் ஷ்ரீவன் மான் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:

"அமைதி வழிகளில் அரசியல் தீர்வை காணுமாறு நான் கேட்டுக்கொள்வது, சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உறுதியான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்பதற்கான ஒரு மிக முக்கிய செய்தியாகும்.

இது சிறிலங்கா அரசிற்கு முன்னுள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அதிகார பரவலாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் முன்வருவார்கள் என்பது அமெரிக்காவின் நம்பிக்கையாகும்.
இப்படியான ஒரு தீர்வை காணாது போனால் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்துபவர்களின் நோக்கங்களை அது இலகுவாக்கி விடும். மேலும் மனித உரிமை மீறல்கள், மனித அவலங்களுக்கும் அது வழிவகுத்து விடும்.

மனித உரிமைகள் விவகாரம் அமெரிக்காவிற்கு முக்கியமானது. மனித உரிமைகளை மதிப்பது சிறிலங்காவில் வெற்றிகரமான அமைதித்தீர்வுக்கு வழிவகுக்கும் என்பது எமக்கு தெளிவு.

விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றமில்லை எனினும் விடுதலைப் புலிகள் மீதான எல்லா அணுகுமுறைகளும் அவர்களை அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கான அழுத்தங்கள் ஆகும்.

தரவுகள் மற்றும் நிறுவனங்களின் கணிப்புக்களின் படி நடைபெற்று வரும் மோதல்கள் சிறிலங்காவின் பொருளாதாரத்தை 2-3 விகித வருட ளர்ச்சியாக மந்தப்படுத்தியுள்ளது. இதனால் இரு சகாப்தங்களில் பெருமளவான பொருளாதாரம் இழக்கப்பட்டுள்ளது. இது எல்லா மக்களினது நன்மைகளையும் பாதித்துள்ளது.

வடக்கு - கிழக்கில் அதிகளவான பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டு, எல்லா இன மக்களும் அதன் பலன்களை பெறுவார்களானால் அது தீர்வுக்கான தடைகளை அகற்றுவதுடன், வர்த்தகத்துறையையும் முதலீட்டாளர்களையும் சிறிலங்காவை நோக்கி அதிகளவில் நாட்டம் கொள்ள வைக்கும்.

அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமா என கேட்கப்பட்டபோது. போர் நிறுத்த கண்காணிப்புக்குழு, அரச தலைவர் விசாரணைக்குழு போன்றவற்றுடன் இந்தக்குழு எவ்வாறு தொழிற்படும் என்பதில் தனக்கு தெளிவில்லை" என தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

No comments: