Wednesday, November 01, 2006

இராணுவ நடவடிக்கைகாகவே பாதை திறக்க மறுப்பு.

தமிழர் தாயகத்தின் மீதான இராணுவ நடவடிக்கைக்காகவே ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறக்க மறுத்து நிபந்தனைகளை விதிக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏ-9 பாதையைத் திறக்க வேண்டுமாயின் புலிகள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெனீவா பேச்சுக் குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஜெனீவாவிலிருந்து இன்று புதன்கிழமை தாயகம் திரும்பிய அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
நாம் இம்முறை ஜெனீவா சென்றதை ஒரு வெற்றிகரமான நிகழ்வாகத்தான் பார்க்கிறோம். ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்கு விரோதமானவர்கள்- பேச்சுக்கு வர மறுக்கிறார்கள்- விடுதலைப் புலிகள்தான் யுத்தத்தைத் திணிக்கிறார்கள் என்று பாரிய அளவில் சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்த முற்பட்டனர். ஆனால் இப்போது சிறிலங்கா அரசாங்கத்தின் நேர்மையற்ற- உண்மையற்ற போக்கு தெட்டத் தெளிவாகியிருக்கிறது.
இம்முறை பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நோர்வே அனுசரணையாளர்களே மிகத் தெளிவாக, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள சரத்தான ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறக்க மறுத்துவிட்டதாலும் இந்தப் பேச்சுக்கள் வெற்றியடையாமைக்கு ஒரு காரணம் என்று பகிரங்கமாக கூறினர். இதன்மூலம் எமது தரப்பின் மீது சர்வதேச சமூகம் இனி அழுத்தங்கள்- குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது. இருநாட்கள் பேச்சுக்களிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெனீவாப் பேச்சுக்கு செல்லும் முன்பாகவே நாம் இந்தப் பேச்சுவார்த்தையில் எமக்கு துளிகூட நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தோம். சர்வதேச சமூகத்தின் அழைப்பை ஏற்றுத்தான் செல்கின்றோம் என்றும் கூறியிருந்தோம். கிளிநொச்சியிலிருந்து மனிதாபிமான பிரச்சனைகளை பேசுவதை விட சர்வதேச அரங்கத்திலே நின்று எமது மக்களினது மனித அவலங்களை எடுத்துக் கூறுமாறு சர்வதேச சமூகம் கேட்டுக் கொண்டது. அதனை ஏற்று சர்வதேச அரங்கத்தில் நின்று எமது மக்களினது மனித அவலங்கள் பற்றியும், சிறிலங்காவின் அரச பயங்கரவாதங்க, படுகொலைகள், ஆட்கடத்தல்கள், எமது மக்கள் மீதான பொருளாதாரத் தடைகள் ஆகிய விடயங்களை தெளிவாக முன்வைத்துள்ளோம். இந்த விடயங்கள் சர்வதேச சமூகத்தினது கவனத்தை தொட்டிருக்கும் என்று நம்புகிறேன்.
ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுக்களின் முடிவில் சர்வதேச சமூகமானது ஆச்சரியமும் வியப்பும் கவலையுமடைந்திருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும் ஏ-9 பாதையை திறக்க மறுத்து சிறிலங்கா அரசாங்கக் குழு பிடிவாதமாக இருந்த காரணத்தால் பேச்சுக்களில் முன்னேற்றங்களைக் காண முடியலை.
6 இலட்சம் யாழ். குடா நாட்டு மக்களுக்கான ஒரே ஒரு தரைவழிப்பாதையான ஏ-9 பாதை திறப்பின் அவசியத்தை சர்வதேச சமூகம் வலியுறுத்துகிறது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏ-9 பாதை திறப்பு என்பது மனிதாபிமான பிரச்சனை. அதனை இராணுவ விவகாரமாக்குவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. கொழும்பில் நாம் திரும்பி வருகின்றபோது இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை நாம் சந்தித்து ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பாகவும் எமது நிலைப்பாடுகள் தொடர்பாகவும் விவரித்துள்ளோம். ஏ-9 பாதை தொடர்பில் இராணுவ விவகாரமாக்குவதை விரும்பவில்லை என்பதாகத்தான் அவர்களின் கருத்தும் இருந்தது.
ஏ-9 பாதை திறப்பு என்பது ஒரு மிகச் சிறிய விடயம். ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் மறுத்து பெரிய விவகாரமாக்கி இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று ஜெனீவாவில் சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நாம் தெரிவித்திருந்தோம். ஒரு பாரிய இராணுவ நடவடிக்கைக்காகத்தான் இப்படியான செயற்பாடுகளை காட்டியிருப்பதாக நாம் பகிரங்கமாக சர்வதேச சமூகத்துக்கு தெரிவித்திருக்கிறோம்.
ஏ-9 பாதை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் உத்திரவாதங்களைக் கோருவதும் நிபந்தனைகளை விதிப்பதும் போலியானது. இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே ஏ-9 பாதையை திறக்க மறுக்கின்றனர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்த ஏ-9 பாதையை மூடிவிட்டு பேச்சுக்கள் வாருங்கள் என்றனர். எமது மக்களுக்கான ஒரே தரைவழிப்பாதையை திறக்கமறுத்துவிட்ட நிலையில்- நோர்வேக்கு நாம் செல்ல இருந்த பயணத்தை இரத்துச் செய்துவிட்டோம். எமக்கு அத்தகைய பயணத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இல்லை. எமது தலைமைப்பீடம் உடனே வருமாறு அழைத்ததற்கு இணங்க நாம் பேச்சுக்கள் முடிந்த உடனே தாயகம் திரும்பியுள்ளோம்.
இனி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நோர்வே, இணைத் தலைமை நாடுகள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பர். நாமும் எமது தேசியத் தலைவருடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்டத் தீர்மானங்களை மேற்கொள்வோம்.
பேச்சு மேசைக்கு வந்த சிறிலங்கா அரசாங்கக் குழுவினருக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எதுவித அக்கறையுமே இல்லை. சர்வதேச சமூகத்தினது உதவி ஏதேனையும் சுரண்டிக் கொண்டு போகலாம் என்பதாகத்தான் இருந்தனர். ஆனால் அவர்களது நேர்மையற்ற போக்கு இம்முறை பகிரங்கமாக வெளிப்பட்டுவிட்டது. பேச்சுக்கள் முடிந்த பின்னரும் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலும் இராஜதந்திரிகளை சந்திக்கின்ற போதும் இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டோம். இனிவரும் காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கான அழுத்தங்களே அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
நாங்கள் பேச்சுக்கு போக மறுத்திருந்தால் எங்கள் மீதே முழுப் பழியை சுமத்தியிருப்பர். பேச்சுக்கு சென்றபடியால் சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான யுத்த வெறிப் போக்கு மற்றும் மனிதாபிமானமற்ற படுகொலை என்பவற்றை முழு அளவில் பகிரங்கப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களைச் செலுத்துவதில் இனி நியாயமே இல்லை. பேச்சுக்களின் முடிவில் அரசும் இணங்கி வராததால்தான் பேச்சுக்கள் தோல்வியடைந்தது என்று சர்வதேச சமூகம் கூறிவிட்டது.
தாக்குதல்களை நிறுத்துவதற்கும்- யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கும் நாம் தயார் என்று தெரிவித்துள்ளோம். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின்போது நாம் கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அது சர்வதேச சமூகத்தின் கையில் உள்ளது. புலிகள் பதில் தாக்குதல் நடத்துகின்றபோது புலிகள் மீது சர்வதேச சமூகம் குற்றம் சுமத்தினால் அது அர்த்தமற்றது என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

No comments: