Saturday, November 18, 2006

வைகோவுக்கு, இந்தியப் பிரதமர் கடிதம்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான இராணுவ தளபாடங்களை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் உறுதியளித்துள்ளார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.11.06) திகதியிடப்பட்ட பிரதமரின் கடிதத்தை இன்று சனிக்கிழமை சென்னையில் ஊடகவியலாளர்களிடம் வழங்கினார்.
மன்மோகன் சிங்க் கடிதம் வருமாறு:
புதுடில்லி
நவம்பர் 12, 2006
அன்புள்ள வைக்கோஜி

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்களில் பல அப்பாவிகள் குறிப்பாகத் தமிழர்கள் பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தது அதி முக்கிய கவனத்துக்குரியது, நம் அனைவருக்கும் கவலை அளிக்கிறது.
இதுபோன்ற வன்முறைச் செயலில் எவ்வித நியாயமும் இல்லை என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அப்பாவிகளைக் கொல்வது, குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது ஏற்கத் தக்கதல்ல.
அண்மை உயிரிழிப்புகள் குறித்தும் அப்பாவித் தமிழ்த் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன், உரிய நிலையில் பேசவுள்ளோம். அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் தந்திரோபாயங்களை பின்பற்றுவதற்குப் பதிலாக, தமிழ் மக்களுக்கு உண்மையான சட்டரீதியான உரிமைகளை அளிக்கக்கூடிய அரசியல் தீர்வை வழங்க சிறிலங்கா அரசாங்கம் வழி காண வேண்டும் என இந்தியா, சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தும்.
சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கிடையே ஒக்ரோபரில் நடைபெற்ற ஜெனீவாப் பேச்சு தோல்வியடைந்ததை நான் அறிவேன். இது இருதரப்பினரது போக்குகளையும் கடுமையாக்கியிருக்கலாம். இதை துரதிஷ்டவசமானதாக நாம் கருதுகிறோம். இதன் எதிரொலியே அண்மைய வன்முறைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
ஏ-9 பாதை மூடப்பட்டிருப்பது யாழ்ப்பாணத்துக்கும் சுற்றுப்பகுதிகளுக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மிக மோசமான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருப்பது குறித்த நாமும் கவலையடைகிறோம்.
இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான உதவியாக குறிப்பிடத்தக்க அளவு அரிசி, சீனி, பால்மா ஆகியவற்றை நாங்கள் அனுப்பியுள்ளோம். இது போதாமல் இருக்கலாம் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதேவேளையில் சிறிலங்கா அரசு கடல்வழியாக யாழ்ப்பாணத்துக்கு உதவிப்பொருட்களை அனுப்ப முயற்சி செய்கிறது என்றும் அறிகிறேன்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கும் நிலவும் சிக்கல்கள் குறித்தும் தமிழர்கள், முஸ்லிம்களினது இக்கட்டான நிலைமையையும் நாம் முழுமையாக அறிவோம். அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான இராணுவத் தளவாடங்களை சிறிலங்கா அரசுக்கு வழங்காமல் இருப்பதில் இந்தியா மிகுந்த கவனத்துடன் இருப்பது உங்களுக்குத் தெரியும்.
அதேநேரத்தில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் குடிமக்களாக இலங்கைத் தமிழ் மக்களுக்குரிய உரிமைகளையும் அங்கீகாரத்தையும் வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்திடம் இது மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். அப்பாவி உயிர்கள் பலியாவைத் தடுப்பதற்கு அரச தந்திர உறவு மூலமாக எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

உங்கள் உண்மையுள்ள
மன்மோகன் சிங்க்
நன்றி>புதினம்.

No comments: