-பாஸ்டன் குளோப் இதழ் எச்சரிக்கை-
தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் பாஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம் வருமாறு:
இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது.
இருதரப்பிலும் இரத்தகளறியை ஏற்படுத்திய இந்த யுத்தமானது 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோது முடிவுக்கு வந்தது. அதே நேரம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் ஆயுதங்களைக் கையளிப்பதால் தமிழர்களுக்கு இந்தியா ஆயுதம் அளிக்கும்போது இலங்கையின் உள்நாட்டு யுத்தமானது தெற்காசியாவின் இரு முதன்மையாக பகைமை நாடுகளிடையேயான நிழல் யுத்தமாக மாற்றமடையும்.
ஆகையால் இலங்கைத் தீவின் உள்நாட்டு யுத்தத்துக்கு அரசியல் வழியில் தீர்வு காண அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சரை புஷ் நிர்வாகம் கடந்த வாரம் அனுப்பி வைத்தது.
கடந்த சூலை மாத பயணத்தின் போது, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுவதை முதன்மையாக கருதுவதாக தெரிவித்திருந்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சிறுபான்மை இன தமிழர்கள், தங்களது சொந்தத் தாயகத்தில் சுயாட்சி அரசாங்கத்தைப் பெறுவது அவசியம் என நம்புகிறது. இராணுவ வழித் தீர்வைவிட இந்துத் தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் அமைதியாக இணைந்து வாழ இத்தகைய ஒரு நிச்சயமற்ற திட்டமானது ஒரு அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்.
ஆனால் பெளச்சரின் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பயணமானது சில உறுதியான செயற்பாடுகளுக்கான நடைமுறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழ்ப் புலிகள் இருப்பதால் அமெரிக்க அதிகாரிகள் தமிழ்ப் புலிகளுடன் தொடர்பேற்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இம்மாத இறுதியில் தமிழ்ப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள அமைதிப் பேச்சுக்களுக்கு முழு மனதுடன் புஷ் நிர்வாகம் பின்நிற்க வேண்டும்.
நிரந்தமான அமைதியில் வாசிங்டனின் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்த கூட்டாட்சி அமைப்பு கொண்ட இலங்கையில் தமிழர்களுக்கான சுய அரசாங்கமும் மனித உரிமைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசாங்கத்தின் (சிறிலங்கா) இராணுவத்தை வடபகுதியில் உள்ள தமிழர் பிரதேசங்களிலிருந்து விலகச் செய்வது அவசியமானதாகும். மனிதாபிமான ரீதியாக செயற்படுவதாக கூறும் சிறிலங்கா அரசாங்கமானது, நாட்டின் இதர பகுதிகளுடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் பாதையை திறக்க வேண்டும்.
இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதின் மூலமாகத்தான் இலங்கையில் அமைதி ஏற்படும். ஆசியாவின் பாதுகாப்புக் கட்டமைப்புக்கான தளங்களாக தமிழர்களுக்கான நீதியும் அமைதியும் இருப்பதால் அமெரிக்காவுக்கு மிக மிக முக்கியமானதாக அது அமையும் என்று பாஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
நன்றி>தென்செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment