Saturday, November 25, 2006

தமிழக போராட்டங்கள் உடலுக்கு புத்துணர்வை தருகின்றது!!!

தனது இந்திய வருகையை எதிர்த்து தமிழ்நாட்டில் நடத்தும் போராட்டங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய பயணம் மேற்கொள்ளும் முன்பாக கொழும்பில் இந்திய ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது:

35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் பல ஊர்வலங்களையும் முழக்கங்களையும் முன்நின்று நடத்தியிருக்கிறேன். இந்த ஊர்வலங்கள் ஒருவகையில் உண்மையிலேயே சில வேளைகளில் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தருகின்றன.
ஆகவே தமிழ்நாட்டில் நடைபெறும் ஊர்வலங்களில் கலந்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் இலங்கையின் நிலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய-சிறிலங்கா பொது கடற்பரப்பில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்களை தடுப்பது குறித்தும் இந்தியப் பிரதமரிடம் பேச உள்ளேன்.
இருதரப்பு கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையால் இருநாட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

இந்திய மீனவர்களின் படகுகளை இலக்கு வைத்து கடத்திச் செல்லும் புலிகள் அவற்றை கடத்தலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

புலிகளும் அரசாங்கப் படைகளும் மீனவர்களைத் தாக்குவதாக இருநாட்டு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மீனவர்களைத் தாக்கவில்லை என்று இராணுவம் மறுத்துள்ளது. மீனவர்களை பயன்படுத்தி கடற்படைக்கு எதிராக புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
வடக்கு-கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேறுமாறு புலிகள் வற்புறுத்துகின்றனர். இந்தியாவில் எதிர்வினை நடக்கும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கையை புலிகள் மேற்கொள்கின்றனர்.

தென்னிந்தியாவில் அகதிகள் பிரச்சனையை பாரிய விடயமாக்க புலிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் இருநாடுகளுக்கு இடையே இந்த விடயத்தில் புரிதல் உள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் மத்தியிலிருந்து வர்த்தகர்கள் நிறுவனங்களை மூட வேண்டும் என்று புலிகள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் இராணுவத்தின் முயற்சியில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை. விநியோகத்தில்தான் பிரச்சனை உள்ளது.

இந்தியா எமது அண்டை நாடு மட்டும் அல்ல. நட்பு நாடும் கூட. 7 ஆயிரம் தொன் உணவுப் பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளது என்றார் மகிந்த ராஜபக்ச.
நன்றி>புதினம்.

No comments: