வடக்கு கிழக்கைப் பிரிக்கும்படி 1992ம் ஆண்டிலேயே, தான் கோரிக்கை விடுத்திருந்ததாக, எச்.எல்.டி சில்வா தெரிவித்தார்.
ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் 1988 செப்ரம்பர் 8ம் திகதி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை, மீண்டும் பிரிப்பதற்கு 18 வருடங்கள் எடுத்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், 1992ல் இதைப் பிரிக்கும்படி முதலில் கோரியது நான் தான் என்று அவர் கூறினார்.
எனினும், இறுதியில் தன்னிடமே இதற்கான தீர்ப்பு வழங்கும்படி தரப்பட்டதால், இதை சாத்தியமாக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு பிரிப்பை ஆராய்ந்த மூன்று உச்ச நீதிபதிகளில் எச்.எல்.டி சில்வாவும் ஒருவர். இவர்கள் மூவருக்கும், பி.எம்.ஐ.சி.எச். மண்டபத்தில், விசேட பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
வடக்கு கிழக்கைப் பிரித்ததன் மூலம், தமிழர்களுக்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியொன்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறோம் என்று, இந்த விழாவில் பேசிய விமல் வீரவன்ச சூளுரைத்தார்.
தற்போதுள்ள யுத்தநிறுத்த உடன்படிக்கை, விடுதலைப் புலிகளுக்கு சட்டாPதியான சர்வதேச அந்தஸ்தை வழங்குகிறது. இதன்மூலம் விடுதலைப் புலிகள் பலதரப்பட்ட முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டனர். இருப்பினும், பி-ரொம்ஸ் என்ற சுனாமி நிவாரண திட்டம் உட்பட, அனைத்தையும் நாம் நீதிமன்றத்தைப் பயன்படுத்தி முறியடித்து விட்டோம்.
விரைவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் விமல் வீரவன்ச கோஷமிட்டார். இத்தகைய ஒப்பந்தங்கள் ஊடாக, விடுதலைப் புலிகள் ஆக்கிரமித்துள்ள அத்தனை பகுதிகளையும் நாம் மீளவும் கைப்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் சர்வதேச தொடர்பு உள்ளது. அந்த ஒப்பந்தத்தை விரைவாக நாம் முறியடிக்க வேண்டும். அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான சர்வதேச படைகள், சிறீலங்காவிற்குள் நுழைவதற்கு அது இடமளிக்கும் என்றார் அவர்.
பின்னர் உரையாற்றிய வண.ஒமல்ப்பே சோபித தேரர், வடக்கு கிழக்கை பிரித்து வழங்கிய மூன்று வழங்கறிஞர்களையும் தேசிய வீரர்களாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். வண.சம்பிக்க ரணவக்க, எஸ்.எல்.குணசேகர உட்பட, தேசிய இனவாதக் கொள்கைகொண்ட பல்வேறு கட்சியினரும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment