Sunday, November 26, 2006

இன்றுடன் ராஜபக்சாவுக்குகான காலஅவகாசம் முடிகிறது.

-ஜுனியர் விகடனுக்கு தமிழ்செல்வன் பேட்டி-

இலங்கையில் இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்த விவரமான அறிவிப்புக்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையில் இடம்பெறும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை ஏடான ஜுனியர் விகடனுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

கேள்வி: நீங்கள் நடத்தப்போகிற மாவீரர் தினத்தில் சிறிலங்கா அரசுக்கெதிரான உச்சகட்டப் போர் அறிவிப்பு இருக்கும் என்பதை மனதில் கொண்டு தான் சிறிலங்கா அரசு ஏ-9 பாதையைத் திறந்தது என்று சொல்லப்படுகிறதே?

பதில்: நாங்கள் இந்தப் பிரச்சனையை வேறு மாதிரியாகப் பார்க்கிறோம். நீங்கள் சொன்ன காரணங்களுக்காக சிறிலங்கா அரசு அந்தப் பாதையைத் திறக்கவில்லை. அந்தப் பாதை திறக்கப்பட்ட நாளன்று அமெரிக்கத் தலைநகர் வாசிங்ரனில், இலங்கையின் புனர்வாழ்வுக்கு நிதி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடங்கியது. இதில், ஏன் ஏ-9 பாதையை மூடிவிட்டு, பட்டினிச் சாவுகளுக்கு வழி திறக்கிறீர்கள்? என்ற கேள்வியைத்தான் சிறிலங்கா அரசிடம் அவர்கள் முதலில் கேட்பதாக இருந்தார்கள். இதற்குப் பதில் சொல்ல சிறிலங்கா அரசிடம் எந்தக் காரணமும் இல்லை.

பாதுகாப்பு, போரைத் தடுக்க என சிறிலங்கா அரசு தனக்குத்தானே சொல்லிக் கொண்டு ஊர், உலகத்தை ஏமாற்றிய விடயங்கள், அந்த மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் எடுபடாது. அதனால்தான் பெயரளவுக்கு அந்தப் பாதையைத் திறந்து விட்டது. இப்போதும் அந்தப் பாதை முழுவதுமாகத் திறந்து விடப்பட்டுள்ளது என்றுதான் சர்வதேச சமூகம் நினைக்கிறது.
ஆனால், உண்மையில் உணவுப் பொருட்களை ஏற்றிய ஒன்று அல்லது இரண்டு வாகனங்களை மட்டுமே அந்தப் பாதை வழியாக அரசு அனுமதித்தது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், உணவுப் பொருட்களை ஏற்றிய ஒரே ஒரு லொறியை மட்டுமே அனுமதித்தது.

இந்த லொறி வாகரைக்கு போனது. அங்கோ இரண்டு வாரங்களாக எந்த உணவும் கிடைக்காமல் அறுபதாயிரம் பேர் பட்டினிச்சாவை நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு லொறியில் வந்த உணவு போதுமா? இவர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாணம் முழுவதும் ஆறு லட்சம் பேர் உணவு, மருந்துப் பொருட்கள் இல்லாமல் கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, ஏ-9 பாதை முறைப்படியும் திறக்கப்படவில்லை.

ஏற்கெனவே நாங்களும், சிறிலங்கா அரசும் செய்து கொண்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏ-9 பாதையை மூடுவது, திறப்பது குறித்த விவரங்கள், அறிவிப்புகள் செஞ்சிலுவைச் சங்கம் வாயிலாகவோ, போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் வாயிலாகவோதான் கையாளப்பட வேண்டும். ஆனால், இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் சிறிலங்கா அரசு எந்த அறிவிப்பும் தரவில்லை. எங்களுக்கே ஊடகங்களைப் பார்த்துதான் விடயம் தெரிந்தது.

கேள்வி: உலக நாடுகள் மதிக்கும் இடத்தில் இருக்கும் சிறிலங்கா அரசுடன் நீங்கள் தொடர்ந்து மோதுவது, போருக்கு அரசுதான் காரணம் என்று சொல்வது போன்றவற்றை எப்படி ஏற்பது?
பதில்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் சம்மதித்த பிறகும், போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகும் போரை நீட்டித்துக்கொண்டிருந்தது, சிறிலங்கா அரசின் படைகள்தான். இதைப் பல உதாரணங்கள் மூலம் சர்வதேச அமைப்புக்களுக்கு சொல்லியிருக்கிறோம்.

ராஜபக்ச, பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இந்த ஒருவருட காலத்தில் நீங்கள் சொல்வது போல் உலக நாடுகள் மதிக்கும் இடத்தில் சிறிலங்கா இருந்திருந்தால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை மக்கள் ஏன் புலம்பெயர வேண்டும்?
1,154 பேர் சிறிலங்கா அரசாலும், துணை இராணுவத்தினராலும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகத்தில் மிகக் கொடுமையான பட்டினிச் சாவுகள் 1952 ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவின் தான்சானியாவில் ஏற்பட்டது.

யாழ். பகுதியிலும் அதைப்போல் சாவுகள் அரங்கேறப் போவதை சர்வதேச அமைப்புக்கள் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ராஜபக்ச ஏ-9 பாதையை மூடி அப்பகுதியில் குண்டு வீசாமல், விமானத் தாக்குதல் நடத்தாமல் தமிழர்கள் பட்டினியால் செத்து மடியட்டும் என்று முடிவு செய்திருப்பதை எப்படி நல்ல விடயம் என்று சொல்ல முடியும்? தனது இராணுவத்தில் இளம் சிறார்களை ராஜபக்சவின் அரசு வலுக்கட்டாயமாகச் சேர்த்துக் கொண்டிருப்பதை ஐ.நா. சபையே சுட்டிக்காட்டி அரசுக்கு நோட்டீசும் அனுப்பியிருக்கிறதே. இதெல்லாம் இலங்கையில் நல்லாட்சி நடைபெறுவதற்கு அடையாளங்களா? இந்த யதார்த்தங்களைப் பார்த்துதான் தமிழகத் தலைவர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள்களை விடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

கேள்வி: மாவீரர் தினத்தில் உங்கள் தலைவர் உரையில் அனல் தெறிக்கும் என்ற பேச்சிருக்கிறதே?

பதில்: ஈழ விடுதலைக்காக மாண்ட வீரர்களின் நினைவாக நாங்கள் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சிதான் மாவீரர் தினம். இலங்கையில் இப்போதே போர்ச் சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு சூழல் நிலவுவதைத்தான் சிறிலங்கா இராணுவம் விரும்புகிறது. இதுகுறித்த விவரமான அறிவிப்புகள் எங்கள் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையில் இருக்கும் என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

2 comments:

thiru said...

ஈளபாரதி,
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு சேர்க்கும் விதமாக ஈழம் சார்ந்த வலைப்பதிவாளர்களின் ஆலோசனைகளள தாருங்களேன்! இது பற்றி எனது ஆலமரம் பதிவில் தகவல் தாருங்களேன்!

ஈழபாரதி said...

என்ன செய்வது என்பதுதான் புரியாமல் விழிக்கிறோம் அய்யா!!! உலகமே பாத்துகொண்டிருக்கிறது வாய்மூடி மைளனமாக, உங்களைப்போன்ற எத்தனையோ நல் உறவுகள், தமிழ்நாட்டில் இயன்றளவு போராடுகிறார்கள். மானில அரசு சொல்லியே கேளாத மத்திய அரசு, எமது தமிழக உறவுகள் சொல்லியா கேட்கபோகிறது. ஜக்கியநாடுகள் சொல்லியே சிங்கள அரசு கேட்கவில்லை. ஒருவேளை கஞ்சி ஊத்திய, புலம்பெயர் தமிழரின் வியர்வையில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுகழகத்தின் கணக்குகளையே முடக்கிவிட்டது. பணம் இருந்தால் கூட வாங்கிகொடுக்க அனுமதியுமில்லை, வாங்க உணவும் இல்லை யாழ்ப்பானத்தில்.
நாளைய தலைவரின் பேச்சுக்காக காத்திருக்கிறோம். இலங்கை அரசின் மூலம் உணவு அனுப்புவதை விட, அனுப்பாமல் இருப்பது எமது தமிழக உறவுகளின் வரிப்பணத்தையாவது மீதப்படுத்த உதவும், தாங்களாக் முன்வந்து உதவுபவர்கள் இதன் மூலம் ஒரு ரூபா கொடுத்தாலும். அங்கு கஸ்ரப்படும் உறவுகளை போய்சேரும். அதற்கான இணைப்பு இங்கே.
[url=http://www.troonline.org/volunteer.htm]தமிழர் புனர்வாழு கழகம்[/url]