Thursday, November 30, 2006

இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்:

இலங்கையில் மிகவும் மோசமாக நசுக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சட்ட நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டின் மனித உரிமையை முழுமையாக நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள அக்குழு, இக்கோரிக்கையை ஐ.நா மனித உரிமை மன்றம் தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளும் மனிதாபிமான சட்டங்களும் மிக மோசமாக மீறப்படுவதை நிறுத்துவதிலும் மேலும் சிதைவுறாமல் தடுப்பதிலும் மனித உரிமை மன்றம் ஆக்கபூர்வமான பணியைச் செய்ய முடியும், செய்ய வேண்டும் என்று அது கூறியுள்ளது.
பொதுமக்கள் கொல்லப்படுவது, கடத்தப்படுவது, சித்திரவதைப்படுத்தப்படுவது போன்ற கொடுமைகளுடன் மக்கள் இடம்பெயர கட்டாயப்படுத்தப்படுவது, சிறார்களை பலவந்தப்படுத்தி படையில் சேர்க்கப்படுவது குறித்து தொடர்ந்து அறிக்கைகளைத் தாம் பெற்று வருவதாக தெரிவித்த குழு, இவை யுத்தகால குற்றங்கள் எனவும் சாடியது.

பொதுமக்களையும் இராணுவ இலக்குகளையும் பிரித்து பார்க்க வேண்டிய அடிப்படையைக் கூட மதிக்காமல் சிறிலங்காப் படைகள் தாக்குதல்களை நடத்துகின்றன. இதனால் இராணுவத் தாக்குதல்களின்போது அநாவசியமான உயிர்ச்சேதக்களும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் நிகழ்கின்றன.

பாகுபாடற்ற, முறையான, கடுமையான விசாரணைகள் செய்யப்படவேண்டும். உதாரணமாக கடந்த 8 ஆம் நாள் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என அக்குழு கேட்டுள்ளது.

முன்னைய வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய அரச தலைவர் விசாரணைக் குழுவை அறிவித்த பின்னர் மனித உரிமைகளை நசுக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன என்பதையும் அக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

விசாரணையோடு அனைத்துக் குழுக்களாலும் மனித உரிமைகள் சிதைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் மேலும் நிகழாமல் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவசியம் என அது வலியுறுத்தியுள்ளது.

இவ்வேளையில் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் உரையின்போது, ஐ.நா உறுப்பு நாட்டின் பிரதிநிதி ஒருவர், இலங்கையில் சீரழிந்து வரும் மனித உரிமைகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் செயல்பாடு குறித்தும், தண்டனை அளிக்கும் உரிமை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய பின்லாந்து நாட்டுப் பிரதிநிதி, இலங்கையில் மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பெரும் கவலை கொண்டுள்ளது என்றார்.
அண்மையில் நிறுவப்பட்ட விசாரணைக் குழுவின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறினார் சுவிற்சர்லாந்துப் பிரதிநிதி.

அரசாங்கத்தின் விசாரணைக் குழுவை வெறும் பொதுத் தொடர்பு பயிற்சி என்று கூறி, அதனை மனித உரிமைக் குழு நிராகரித்தது.

இன்றைய நிலையில் இராணுவத்தினதோ, காவல்துறையினதோ மனநிலை எந்த வகையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மனித உரிமை மீறல்கள் குறித்து எவ்விதமான ஆழமான விசாரணைகளையும் நடக்காமல் தடுப்பதே அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை எனத் தாம் அறிய வந்திருப்பதாக ஆசிய மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியது.
இந்நிலையில் ஆட்கடத்தல், காணமல்போதல், கொலை செய்யப்படுதல் போன்றவை குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைத்திருப்பது, ஒரு பொதுத் தொடர்பு பயிற்சி மட்டுமே. தீவிர விசாரணை எதுவும் இல்லை என்றது.

இலங்கையில் அனைத்து சட்டவிதிமுறைகளும் முடங்கிக் கிடக்கின்றன என்றும் குழு கூறியது.
இவ்வேளையில் கனடா, பிரிட்டனுக்கான ஐ.நா பிரிதிநிகளும் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்துக் கவலை தெரிவித்தனர்.
நன்றி>புதினம்.

No comments: