Thursday, November 02, 2006

கிளிநொச்சி பொது மருத்துவமனைமீது விமானக்குண்டு வீச்சு.


சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானங்கள் இன்று கிளிநொச்சி நகரின் மீதும் பூநகரிப்பகுதியிலும் நடத்திய வான்குண்டுத் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலால் கிளிநொச்சி பொது மருத்துவமனையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
பூநகரிப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.
கிளிநொச்சி நகரின் மீது பிற்பகல் 2 மணியளவில் கிபீர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும் ரொக்கட் குண்டுகளையும் வீசின.
திருவையாற்றுப் பகுதியில் வீடு ஒன்றின்மீது வான்குண்டு வீழ்ந்து வெடித்ததையடுத்து நால்வர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பொது மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் 500 மீற்றர் தொலைவில் மூன்று குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. பிற்பகல் உணவை நோயாளிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இக்குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. இதனையடுத்து மருத்துவமனையிலிருந்த பிறந்த குழந்தைகளுடன் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனையின் ஜன்னல்களும் மின்விசிறிகளும் சேதமடைந்தன. மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் அருகே தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நிலைகள் எதுவும் இல்லாத நிலையில் சிறிலங்கா விமானப் படையினர் இத்தாக்குதலை நடத்தியிருப்பது அதிர்ச்சியளித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சிறிலங்கா விமானப் படையின் வேவு விமானம் கிளிநொச்சி நகர்மீது நீண்டநேரம் பறப்பில் ஈடுபட்டது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

சிங்களம் இப்போது டிரைலர்தான் போடத்தொடங்கி இருக்கு, படம் மிகவும் கோரமாக இருக்கும்.