தமிழ் மக்களின் கல்விப் பாதையை சிறிலங்கா அரசு மூடிவிட்டது. நாளுக்கு நாள் இலங்கை நிலை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று இந்திய தொலைக்காட்சியான என்டிரிவி செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்புக் தளம் என சிறிலங்கா அரசினால் முத்திரை குத்தப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்று வந்த என்டிரிவி தொலைக்காட்சி நிறுவனம் அங்குள்ள நிலைமை குறித்து சோகமான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் ஓகஸ்ட் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டு விட்டது. ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி, மக்களுக்கான கல்விப் பாதையை அடைத்து விட்டார்கள். கிளிநோச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வழி இல்லாமல் அரசாங்கம் செய்து விட்டது.
விடுதலைப் புலிகளின் முக்கிய ஆட்சேர்ப்புக் களமாக பல்கலைக்கழகம் திகழ்கிறது என அரசாங்கம் நம்புவதால், ஓகஸ்ட் 11 ஆம் திகதி மீண்டும் தாக்குதல்கள் உக்கிரமடைந்ததில் இருந்து, 1,300 மாணவர்கள் பல்கலைக்கழகம் வருவதை நிறுத்திவிட்டார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து 6,000 மாணவர்களை விடுதலைப் புலிகள் தங்கள் அமைப்பில் சேர்த்து பயிற்சி அளிக்கப்போகிறார்கள் என எங்களுக்குத் தகவல் கிடைத்ததன் பேரில் ஏ-9 பாதை மூடப்பட்டது என்றார் சிறிலங்கா அரசின் சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன.
யாழ்ப்பாணத்துக்கான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஏ.சந்திரசிறியும் பல்கலைக்கழகத்தை ஆபத்தான பகுதியாகக் கருதுகிறார்.
பல்கலைக்கழகத்தைச் சோதனையிட்ட போது குண்டுகள், செய்மதி தொலைபேசிகள், விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்கள் போன்றவற்றைக் கைப்பற்றினோம். பல்கலைக்கழகத்தில் தீவிர விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது நிலைமை வேறாக இருந்தது. தீவிர விடுதலைப் புலி என சொல்லப்படுவர் கூட காமிராவுக்கு முகத்தைக் காட்டப் பயப்படுகிறார். அண்மையில் இராணுவத்தால் ஒரு மாணவர் கொடுமையாகக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பெரும் பீதியில் இருக்கிறார்கள். அடுத்தது தாங்களோ என்று அச்சப்படுகிறார்கள்.
இங்கு உண்மை செத்து விட்டது. உண்மை பேசுபவர் குறிவைக்கப்படுகிறார். அதனால்தான் நாங்கள் உண்மையைப் பேசவோ காமிராவுக்கு முகத்தைக் காட்டவோ பயப்படுகிறோம் என்கிறார் ஒரு மாணவர்.
அரசாங்கத்தின் கருத்தை மறுத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இரா.குமாரவடிவேல், பல்கலைக்கழகத்தில் மொத்தம் இருப்பதே 5,300 மாணவர்கள்தான். அப்படியிருக்க 6,000 மாணவர்களை எங்கிருந்து பிடிப்பது என்றார்.
மேலும் இந்த மாணவர்கள் 75 விழுக்காட்டினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இயக்கத்தில் சேர்வதாக இருந்தால் அங்கேயே சேர்ந்திருப்பார்கள். இயக்கத்தில் சேர இங்கு வரவேண்டிய தேவை இல்லை என்று மேலும் கூறினார்.
நோர்வேயிலிருந்து அவுஸ்திரேலியா வரை உலகெங்கும் பரவி வாழும் ஒரு சமூகத்தின், அதன் மக்கள் தொகை பாதியாகக் குறைந்த விட்ட நிலையில் இந்த மாணவர்கள் தனித்து நிற்கிறார்கள்.
இவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது பற்றிப் பேசுகிறார்கள். சிங்களப் பகுதிக்கும் தமிழ்ப் பகுதிக்கும் உள்ள பிளவு பற்றிப் பேசுகிறார்கள். தனித்தமிழீழம் என்ற தங்களது இலக்கில் உறுதியாக இருக்கிறார்கள்
தமிழீழம் என்பது விடுதலைப் புலிகள் இயக்கத கூறியதல்ல. தந்தை செல்வநாயகத்தால் 1977 இல் கூறப்பட்டது. எங்கள் கோரிக்கையானது- தேவையானது. எங்களுக்கென்று ஒரு தாய்நாட்டை நாங்கள் கேட்கிறோம். எங்களது போராட்டத்தில் விடுதலைப் புலிகளும் பங்கெடுத்துள்ளனர் என்றார் ஒரு மாணவர்.
மேலும் இவர்கள் தங்களைத் தனிச்சிறபபு மிக்கவர்களாகக் கருதுகிறார்கள். போரால் சீரழிந்த ஒரு சமுதாயத்தின் படித்த சமூகம் - தனித்தமிழ் நாடு என்ற கனவை அடைவதில் வரலாற்று ரீதியாக முக்கிய பங்கை வகிக்கும் சமூகம் எனக் கருதுகிறார்கள் என்று தெரிவிக்கிறது என்டிரிவியின் கட்டுரை.
நன்றி>புதினம்.
Wednesday, November 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment