Wednesday, November 29, 2006

அமெரிக்காவில் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படுமா?

விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தொடர்பில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்துள்ளார். புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்ரனைத் தளமாகக்கொண்டு இயங்கி வரும் Humanitarian Law Project என்ற சட்ட நிறுவனம் இந்த வழக்கினை வாதாடியது.

இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் கோல் இந்த வழக்கின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி புஷ், தனது அதிகாரத்தின் வாயிலாக இந்தத் தடையை பிரயோகித்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பின் மூலம் பட்டியலிடப்பட்ட ஏனைய குழுக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்று எனத் தெரிவித்த டேவிட் கோல், ஆனால் இந்த பட்டியல் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விடுதலைப்புலிகள் மற்றும் குர்டிஸ்தான விடுதலை அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க நீதிநிர்வாக அமைச்சின் பேச்சாளர் சாள்ஸ் மில்லர் கருத்து தெரிவிக்கும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகவும், அமெரிக்க அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தீர்ப்புக் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
நன்றி< பதிவு.

13 comments:

வன்னியன் said...

செய்திக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
வரவர எங்கட ஊடகங்கள் சினிமாக்கிசுகிசு எழுதிற பாணிக்கு போய்க்கொண்டிருக்கினம்.

வன்னியன் said...

அடடா.... தலைப்பு உங்கட கைங்கர்யமா?
நானும் விசயம் தெரியாமல் பதிவுக்காரரில பிழைபிடிச்சிட்டன்.
தொடரட்டும் உங்கள் "பாணி".

________________________
தலைப்பு வைச்சது நீங்கள் எண்டதையாவது கீழ ஒரு வரியில எழுதிவைச்சா நல்லதெண்டு நினைக்கிறன்.
வாசகர்கள், பதிவு தளம்தான் இந்தத் தலைப்பில் செய்தி போட்டது எண்டு நினைக்கிறதைத் தவிர்க்கிறதோட, அந்தத் தளங்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச நம்பகத்தன்மையாவது தப்பிப்பிழைக்கும்.

ஈழபாரதி said...

செய்திகள் இங்கும் வந்திருக்கிறது.
http://www.blick.ch/news/ausland/artikel50274

ஈழபாரதி said...

"விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்துள்ளார்."

அப்ப இதன் பொருள் என்ன?

ஈழபாரதி said...

Die Entscheidung bedeutet, dass die US-Regierung nicht länger Vermögenswerte der LTTE und der PKK blockieren darf.

http://www.blick.ch/news/ausland/artikel50274

வன்னியன் said...

அண்ணோய்/அக்கோய்,
'தடை நீக்கப்பட்டது' எண்டு எழுந்தமானத்தில எப்பிடி சொல்ல முடியுது உங்களால?
யார் தடையை நீக்கியது?
எப்ப நீக்கினது?
தடை நீக்கப்பட்டது எண்டதுக்கு நீங்கள் போட்டிருக்கிற செய்தியிலயோ அல்லது வேறெங்கும் வந்த சுயாதீனச் செய்தியிலயோ ஏதாவது ஒரு வரி இருக்கா?
முதலில 'நீக்கப்பட்டது' எண்டு பிழையான தலைப்பபைப் போட்டியள். பிறகு இப்ப ஒரு கேள்விக்குறியைப் போட்டுச் சமாளிக்கிறியள்.
கேள்விக்குறி கூடப் போடக்கூடிய நிலைக்கு இன்னும் வரவேயில்லை.

ஈழபாரதி said...

"வன்னியன் said...
செய்திக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
வரவர எங்கட ஊடகங்கள் சினிமாக்கிசுகிசு எழுதிற பாணிக்கு போய்க்கொண்டிருக்கினம்.
அண்ணோய்/அக்கோய்,
'தடை நீக்கப்பட்டது' எண்டு எழுந்தமானத்தில எப்பிடி சொல்ல முடியுது உங்களால?
யார் தடையை நீக்கியது?
எப்ப நீக்கினது?
தடை நீக்கப்பட்டது எண்டதுக்கு நீங்கள் போட்டிருக்கிற செய்தியிலயோ அல்லது வேறெங்கும் வந்த சுயாதீனச் செய்தியிலயோ ஏதாவது ஒரு வரி இருக்கா?
முதலில 'நீக்கப்பட்டது' எண்டு பிழையான தலைப்பபைப் போட்டியள். பிறகு இப்ப ஒரு கேள்விக்குறியைப் போட்டுச் சமாளிக்கிறியள்.
கேள்விக்குறி கூடப் போடக்கூடிய நிலைக்கு இன்னும் வரவேயில்லை."

வன்னியன் இந்த செய்தியை எப்படி கிசுகிசு என்று கூறமுடியும்? கிசுகிசு என்பது புனைவது, இந்த செய்தி மூல புனைவு அல்ல,செய்திமூலம் ஊடகங்களில் வந்ததுதானே. அதற்கான நன்றி ஊடகத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தலைப்பு எதிர்வு கூறப்பட்டிருக்கிறது, இப்படி நடந்தால் இப்படித்தான் நடக்கும் என்று,
உதாரணத்துக்கு வடக்கு கிழக்கை பிரிப்பதாக நீதிமன்று தீர்பு வழங்கியது, ஒரு நாட்டின் உச்ச நீதிபரிபால சபை நீதிமன்றுதான், ஜனாதிபதியும் வரும் வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டை பிரித்தே அறிவித்திருக்கிறார்.
நான் சொல்ல வரும் செய்தி ஈழத்தமிழருக்கு அமெரிக்காவில் நீதி மறுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திதான். இது அனைத்து தமிழூனர்வாளருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.

"இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் கோல் இந்த வழக்கின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி புஷ், தனது அதிகாரத்தின் வாயிலாக இந்தத் தடையை பிரயோகித்திருந்ததாகக் குறிப்பிட்டார்."

இது ஒரு தனிப்பட்டவரின் அதிகாரத்தின் பேரில் வழங்கப்பட்ட தடை, அவர்தான் கட்டாயத்தின் பேரில் கனாடாவையும்,ஜரோப்பாவையும் தடை விதிக்க தூண்டியவர், இந்த தடை நீதியின் படி நடைபெறவில்லை என்பதுதான், அமெரிக்க நீதிமன்று இன்று கூறப்பட்டிருக்கும் தீர்ப்பு செப்பி நிற்கிறது.

"வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விடுதலைப்புலிகள் மற்றும் குர்டிஸ்தான விடுதலை அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது."

நடக்காத ஒன்றுக்கும், நடக்கமுடியாத ஒன்றுக்கு இவர்கள் ஏன் மகிழ்ச்சி தெரிவிக்கவேண்டும்?

தடை செய்தது தவறு என்றால், தடை நீக்கப்படும், சொத்துக்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும்.

"இதேவேளை, இந்தத் தீர்ப்புக் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன."

வெள்ளை மாளிகை கருத்து கூற மறுத்திருக்கும் நிலையில், அரச அதிபர் நேரடியாக கூறுவார் என்று எதிர்பார்க முடியாது.

தடை என்பது நீதிக்குப்புறம்பானது என்பது எம்மை பொறுத்தவரைக்கு, மகிழ்சியான செய்திதான்.
ஈழசெய்திகள் மறுக்கப்படும் உறவுகளுக்கு இச்செய்தி தெரிவிக்கப்படவேண்டும், ஈழத்தமிழரை ஆதரித்தால் எங்கே தம்தேசியத்துக்கு எதிரானவர்களாக, சித்தரிக்கப்பட்டு விடுவோமோ என தயங்கும், உறவுகளுக்கு இது ஒரு ஊக்க சக்திதான்.

இருப்பினும் உங்கள் ஆதங்கத்தை ஏற்றுக்கொள்கிறேன், வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

நட்புடன் ஈழபாரதி.

வன்னியன் said...

நீங்கள் செய்தியைத் தெரிவியுங்கள், அதற்காக ஏன் மாயையில் மிதக்க விடுகிறீர்கள்?
நான் கேட்டது, தவறான தலைப்புப் பற்றி, செய்தியைப் பற்றியன்று.
தடை நீக்கப்படவில்லை, அது இப்போதைக்கு நீக்கப்படவும் மாட்டாது.

தடை தவறானதென்றும், அதை விமர்சித்தும் ஒரு மாவட்ட நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது. அவ்வளவுதான். அதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது ஏற்புடையதுதான். ஆனால் அதை அப்படியே தெரிவிப்பதைவிட்டு இடையில் 'தடை நீக்ப்பட்டதாக' ஒரு மாயையை உருவாக்கவேண்டிய தேவை என்ன?
அதைத்தான் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இதைக் கிசுகிசு பாணி என்று சொல்லாமல் வேறு என்னவென்பது?

மேலும் நான் கேள்வி எழுப்பியபின்தான் நீங்கள் தலைப்பில் கேள்விக்குறியைச் சேர்ந்தீர்கள்.
தடை நீக்கப்படவில்லை என்பது வெளிப்படையாக இருக்கும்போது கேள்விக்குறியைச் சேர்க்கக்கூடிய தேவையே இல்லை.

செய்தகளை அளிப்பதில் பொறுப்புணர்வு வேண்டும்.

வன்னியன் said...

//ஈழசெய்திகள் மறுக்கப்படும் உறவுகளுக்கு இச்செய்தி தெரிவிக்கப்படவேண்டும், ஈழத்தமிழரை ஆதரித்தால் எங்கே தம்தேசியத்துக்கு எதிரானவர்களாக, சித்தரிக்கப்பட்டு விடுவோமோ என தயங்கும், உறவுகளுக்கு இது ஒரு ஊக்க சக்திதான்.
//

இதற்கும் 'புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதற்கும்' என்ன சம்பந்தம்?
கருத்துச் சுதந்திரத்துக்கு அனுமதியளித்தால் புலிகள் மீதான தடை நீங்கிவிட்டதா?
தடை செய்ப்பட்ட நாடுகள் பலவற்றில் மாவீரர்நாள் அனுட்டிக்கப்படுகிறது. அதற்காக அந்நாடுகளில் புலிகள்மீதான தடை நீக்கப்பட்டுவிட்டதென்று செய்தி போட்டுவிட்டீர்களா?

இவன் said...

ஈழதமிழரை ஆதரிப்பது தவறானது என்று எமது தேசியம் எப்பொழதும் கூறியது இல்லை, ஈழதமிழர் அனைவரையும் எமது தேசியம் தடைபடுத்தப்பட்ட இயக்கங்களாகவும் கூறியதுகிடையாது. எம் உறவுகளுக்கு நல்லது நடக்கும்மாயின் எமக்கும் மகிழ்ச்சி தான்

-இவன்.

வெற்றி said...

ஈழபாரதி,
நானும் வன்னியன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன். தயவு செய்து பொறுப்புணர்வோடு செயற்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

ஈழபாரதி said...

"At 11:17 PM, வெற்றி said...
ஈழபாரதி,
நானும் வன்னியன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன். தயவு செய்து பொறுப்புணர்வோடு செயற்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி."

நண்பர்கள் வன்னியன், வெற்றியின் கருத்துக்கள் ஏற்கப்பட்டு தலைப்பு மாற்றப்படுகிறது, இதுபோன்ற தவறுகள் ஏற்படும்போது, சுட்டிக்காட்டி எம்மை மேலும் செம்மை படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படிகிறீர்கள், தங்கள் வரவுக்கும் மேலான கருத்துக்கும் நன்றிகள்.

நட்புடன் ஈழபாரதி.

hosuronline.com said...

As of now, no chance