Monday, November 06, 2006

புலிகளின் கோரிக்கை நியாயமானது : ரோகித போகொல்லாகம

ஏ-9 வீதி திறப்பது குறித்து விடுதலைப் புலிகளின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனை நாங்கள் உணர்கின்றோம் என்று சிறிலங்கா பேச்சுக்குழுவில் அங்கம் வகித்தவரும் அமைச்சருமான ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளேட்டுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:
ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளமையினால் யாழ்ப்பாணத்தில் மனிதாபிமான பிரச்சினைகள் தோன்றியுள்ளன என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் யாழ். மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அரசாங்கம் வான் மற்றும் தரை வழியாக அனுப்பிக்கொண்டிருக்கின்றது. சில குறைபாடுகள் ஏற்படலாம். இருப்பினும் மனிதாபிமான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் இயன்றளவில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஏ-9 வீதி திறக்கப்படவேண்டும் என்று புலிகள் கோருவது நியாயமான கோரிக்கையாகும். ஏனெனில் வீதி மூடப்பட்டுள்ளமையினால் சில சிக்கல்கள் தோன்றியுள்ளன என்பது தெளிவான விடயமாகும். ஜெனிவாவில் வைத்து புலிகள் இந்தக்கோரிக்கையை விடுத்தமையும் தவறு என்று எம்மால் கூறிவிட முடியாது. புலிகள் சம்பூர் விவகாரத்தைப்பற்றி ஒருவிடயத்தையும் முன்வைக்கவில்லை.
ஆனால் ஏ-9 வீதி குறித்து அதிக அக்கறையுடன் இருந்தனர். எனவே புலிகளின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனை நாங்கள் உணர்கின்றோம். புலிகள் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இதனை நாம் குறை கூறமுடியாது. இருப்பினும் புலிகளின் கோரிக்கைக்கு உடனடியாக பதில் கூற முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கின்றது.
புலிகள் முகமாலை பகுதியில் வன்முறைகளை மேற்கொண்டு வருகின்றமையே அராங்கம் ஏ9 வீதியை திறக்க மறுப்பதன் காரணமாகும். புலிகள் வன்முறைகளை கைவிட்டால் அரசாங்கம் வீதியை திறப்பதற்கு தயாராகவே இருக்கின்றது என்பதனை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏ9 வீதியை திறப்பதற்கான சூழல் உருவாக வேண்டும். அதற்கான அத்திபாரத்தை புலிகளால் மட்டுமே இடமுடியும். எனவே அனைத்து விடயங்களும் புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளன என்றே கூறலாம்.
பிரச்சினைகளை பேசித்தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன என்று கூற முடியாது. காரணம் ஜெனிவாவில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என்பதனை எம்மால் மறுக்க முடியாது. ஆனால் பேச்சுக்கள் இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்தன என்பதனை ஏற்கவேண்டும். இதனை தோல்வி என்று கூற முடியாது. பல வருடகால பிரச்சினையை ஒருசில பேச்சுக்கள் மூலம் தீர்த்துவிட முடியாது.
ஏ-9 வீதியை திறந்தால் அரசியல் தீர்வு தொடர்பாக பேத்தயார் என்பதனை புலிகளும் அறிவித்துள்ளனர். எனவே இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் இருக்கின்றது. புலிகள் அரசியல் தீர்வு தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதாக அரசாங்கம் கருதுகின்றது என்றார்.
நன்றி>புதினம்.

No comments: