Wednesday, November 15, 2006

சர்வதேசமே கண்களை திற- சுயநிர்ணய உரிமையை அங்கீகரி.

சர்வதேசமே கண்களை திறந்து தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாகரையில் 47 அகதிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலையைக் கண்டித்தும் சுவிஸ் வாழ் தமிழர்களினால் ஜெனீவா தொடரூந்து நிலையத்திலிருந்து ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைமைக் காரியாலயத்தை நோக்கி இன்று புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடம் சுவிஸ் தமிழர் பேரவையினரால் மனு கையளிக்கப்படவுள்ளது.

அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேன்மைமிகு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு,

ஐக்கியம், சமத்துவம், சமாதானம், மனிதநேயம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என எண்ணற்ற திட்டங்களை ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகத்தின் வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்குமாக வரிந்து நிற்கும் ஐரோப்பிய பெரும் சபைக்கு தமிழர் பேரவை முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது.

ஐக்கியமாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்ற அவாவுடன் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இன விடுதலைக்காக அயராது உழைத்து சாவிற்குள் வாழ்வைத்தேடும் இலங்கைத் தமிழர்களின் குரலாகவும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பரந்து வாழும் உங்கள் நாட்டு குடிவாசிகளாகவும் விளங்கும் தமிழர்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் முகமாகவும் இம்மனுவை தமிழர் பேரவை உங்கள் முன்வைக்கின்றது.

தமிழர் பேரவை, சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஒருங்கிணைப்புச் சபையாக தோற்றம் பெற்று, அம்மக்களது அரசியல் அபிலாசைகளை சுவிஸ் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொணரும் ஒரு அமைப்பாக இயங்குகின்றது.

இலங்கையில் இன்னலுறும் தமிழர்கள் ஐரோப்பாவில் பரந்து வாழும் தமிழர்களின் உடன்பிறப்புக்கள் என்ற வகையில் அவர்களது வாழ்வின் அனர்த்தங்கள் அனைத்தும் இங்கு வாழும் சகல தமிழர்களையும் ஆக்கிரமித்து நிற்கின்றன. இதனால் இங்கு ஏற்படும் உளவியல் துன்பமும் ஆவேசமும் சொல்லில் அடங்காதவை. இதன் பிரதிபலிப்புக்களாகவே இங்கு தமிழர்கள் பேரணிகளாக வீதிகளில் இறங்கி உரிமைக்குரலை எழுப்பி வருகின்றனர்.

இந்த வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் அபிலாசைகள் எவ்வளவு தூரம் ஐரோப்பிய மன்றிலே பிரதிபலிப்பதாக தமிழர்கள் உணர்கின்றார்கள் என்பதை எடுத்துரைக்கும் நோக்குடனும் ஐரோப்பிய தமிழர்களின் அவா என்னவென்பதை தெளிவுபடுத்தும் முயற்சியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகள் எத்தகைய தாக்கத்தை தமிழர்களது சுதந்திர வாழ்வில் ஏற்படுத்தி நிற்கின்றது என்பதை மேற்கோள் காட்டும் முகமாகவும் சமகாலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் வகையிலும் இம்மனு வரையப்படுகின்றது.

இலங்கையில் தமிழர்கள் தமது பூர்வீக தாயகமான இலங்கையின் வடகிழக்கில் தமது வாழ்வுரிமை பறிபோனதாலும் தமது உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தோன்றியதாலும் வாழ்வுரிமைக்கானதோர் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆரம்பத்தில் சாத்வீக வழியில் பரிணமித்த இம்மக்கள் போராட்டமானது காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாக வளர்ச்சியடைந்து நிற்கின்றது. உண்ணா நோன்பெனவும் ஊர்வலமெனவும் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து தேர்தல்களில் தமிழர்களின் தனிநாட்டுக்கான முழு அங்கீகாரத்தை பெற்று நாடாளுமன்றம் சென்றும் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு சிங்கள பௌத்த பேரினவாதிகளால் தமிழர்களின் அனைத்து முயற்சிகளும் உதாசீனம் செய்யப்பட்ட பின்னரே தமிழர்கள் ஆயுத வழியிலான தமது வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இன்று உள்நாட்டில் தீர்க்கமுடியாத அளவிற்கு இனச்சிக்கல் கூர்மையடைந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்து நிற்பதுடன் அவர்களது அனுசரணையையும் நாடி நிற்கின்றது. சர்வதேசத்தின் அனுசரணை என்பது இனச்சிக்கலை நிரந்தரமாக தீர்த்து வைக்க இன்றியமையாத ஒன்றாக இருப்பதுடன் இனச்சிக்கலின் விபரீதத்தை ஏற்படுத்தும் காரணியாகவும் இருப்பதை தமிழர்கள் தமது அனுபவத்தினூடு கண்டு நிற்கின்றனர். அதனால் தான் சர்வதேசத்தின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதில் தமிழர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்.

உதாரணமாக 1987-களில் இனச்சிக்கலை தீர்க்கவென வந்த அனுசரணையாளரான இந்திய அரசினது படைகளாலேயே தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு தமிழர்களின் விடுதலைப் படையினர் இறுதியில் அனுசரணையாளர்களுக்கெதிராக போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். சிங்கள அரசு எந்தவொரு நகர்வையும் தமிழர்களை கொன்றொழிப்பதற்கான வழிமுறையாகவே கையாண்டு வருகின்றதென்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறையின் விளைவுகளை இந்திய அரசின் அணுகுமுறையினால் ஏற்பட்ட விளைவுகளுடன் தமிழர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இந்திய அரசு 1987 இல் ஏற்படுத்திய வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பானது 20 ஆண்டுகள் கழித்து இவ்வருட ஐப்பசி மாத இறுதியில் ஜெனீவாப் பேச்சுக்களிற்கு முன்னராக சிறிலங்கா உயர்நீதிமன்றினால் இரத்துசெய்யப்பட்டிருந்தமை மிகவும் கனவத்தில் கொள்ள வேண்டிய தமிழர்விரோத நடவடிக்கையாகும். இதைக்கண்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது கவலை மட்டும் தெரிவித்திருந்தது. இதையொத்ததாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசீர்வாதத்துடன் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தமும் சிறிலங்கா அரசினால் பகிரங்கமாக சமகாலத்திலேயே மீறப்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியமும் இதையிட்டு கவலை மட்டும் தெரிவித்து வருகின்றது. இதனால் சிறிலங்கா அரசிடம் தாம் தமிழினத்திற்கெதிராக எதைச் செய்தாலும் தம்மை யாரும் தட்டிக்கேட்ட மாட்டார்கள் என்ற மனோபாவம் மேலோங்கி நிற்கின்றது. இந்த நடவடிக்கைகள் சிங்கள அரசியல்வாதிகளின் தமிழர்கள் சார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்துவதுடன் சிறிலங்காவின் அரசியல் யாப்பும் நீதித்துறையும் தமிழர் விரோத போக்கை கொண்டிருப்பதை காட்டுகின்றது.

சிறிலங்காவின் அன்றைய அரச தலைவர் இந்திய அரசை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட வைப்பதற்கான யுக்தியாக ஆயுதக்களைவு எனும் விடயத்தை இந்திய அரசிடம் பொறுப்பித்திருந்தார். இதை ஒத்ததாகவே தற்போதைய சிறிலங்கா அரச தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தை பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும்படி கோரி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இதன்மூலம் அனுசரணையாளர்களாக வருபவர்களை தமிழர்களுடன் முரண்பட வைத்து அனுசரணையாளர்களை விரோதிகளாக மாற்றி தமிழின படுகொலைகளை தொடர்ந்து முன்னெடுத்தலே சிறிலங்கா அரசின் நோக்கமாகும். இத்தகைய சிங்கள அரசின் அரசியல் கபட நோக்கங்களை புரிந்துகொள்ளாத ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் தமிழர்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க வலுவிருந்தும் இயலாதவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதை ஐரோப்பிய ஒன்றியம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றே தமிழர்கள் விரும்புகின்றனர்.

இதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அனுசரணையாளர்கள் நடுநிலைமையாளர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். உண்மையிலேயே சமாதானத்தையும் சகல மக்களின் சுதந்திர வாழ்வையும் விரும்பி இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட விரும்பும் சகல சக்திகளும் இரு தரப்பிற்குமிடையில் சமத்துவத்தைப் பேணுதல் அவசியமானதாகும். அழுத்தம், உதவி என பல அணுகுமுறைகளும் சமமானதாக இருந்தாலே இலக்கை எட்ட முடியம். இல்லையேல் அணுசரணை துஸ்ப்பிரயோகத்திற்கு ஆளாகிவிடும்.

இதற்கு உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதை குறிப்பிடலாம். இத்தடையின் பின்னர் சிறிலங்கா அரசினால் எழக்கூடிய மனித அவலத்தை கடந்த மே மாதமளவில் ஐரோப்பியத் தமிழர்கள் மிகத்தெளிவாக தமது கண்டனப் பேரணிகள் மூலம் தெளிவாக கட்டியம் கூறியிருந்தனர். இத்தடையினால் சிறிலங்கா அரசானது ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக சமூகமானது தனது தமிழின படுகொலைக்கு இடையூறாக இல்லை என்ற சிந்தனையில் தனது தமிழின படுகொலைகளை கடந்த மாதங்களில் விரைவுபடுத்தியிருந்தமையை உலகமே கண்டு நிற்கின்றது.

யாழ். குடாவில் ஆறு இலட்சம் மக்கள், திறந்தவெளிச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மரணத்தின் வாசலில் நின்றபோதும், அங்கே இளைஞர், யுவதிகள், வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் என சகல தரத்தினரும் பாகுபாடின்றி கொலை செய்யப்பட்டபோதும், பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோதும், சிறுவர்கள் கயிற்றிலே தொங்கவிடப்பட்டபோதும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட முழு உலகும் மெளனம் காத்து நிற்கின்றது.

சிறுவர் இல்லங்கள் மீது குண்டுபோட்டு இளம்வயதினர் கொல்லப்பட்டபோதும், இடம்பெயர்ந்தோர் குண்டுமழையில் சிதறியபோதும் உலகம் கைகட்டி பார்த்துகொண்டு தான் நின்றது. இதைவிட மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள் என சகல ஐக்கிய நாடுகள் சபையினால் போர் தவிர்ப்பு இடங்களாக பிரகடனப்படுத்தப்பட இடங்கள் சிறிலங்கா அரச படைகளின் தாக்குதலில் இடிந்தபோதும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகமும் அமைதி காத்தனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் சிறிலங்கா அரச படைகள் நிகழ்த்தி வரும் தமிழின படுகொலைகள் ஐக்கிய நாடுகள் சாசனங்களுக்கு முரணாணதாக இருந்தும் அப்பட்டமான போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களாக இருந்தபோதும் மனித நேயத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது வெறும் கவலையை மட்டும் அவ்வப்போது வெளியிட்டு வருவதானது தமிழர்களை சினம்கொள்ள வைத்துள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியதுடன் தமிழின அழிப்புக்கு துணை போவதாகவும் எண்ண வைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழர் பிரதிநிதிகள் மீதான தடையானது உலகத்தமிழரின் விருப்பத்திற்கு மாறான நடவடிக்கை என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்த வகையில் இங்கு வாழும் தமிழ் மக்கள் இங்கே பெரிதென போற்றப்படும் ஐனநாயக விழுமியங்களுக்கு கட்டுப்பட்டு பேரணிகளையும் எழுச்சி நிகழ்வுகளையும் நடத்தி ஊர்வலங்களை நடத்தி தமது மனுக்களை கையளித்து தமது உறவுகளின் உயிராபத்தை வெளிப்படுத்தியிருந்த போதும் அவை உரிய முறையில் இன்றுவரை ஐரோப்பிய ஒன்றியத்தினால் செவிமடுக்கப்படாதது உழைக்கும் வர்க்கமான ஐரோப்பிய தமிழர்களை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது. இல்லையேல் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பக்கசார்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதித்திருக்க வேண்டியதில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையினால், இலங்கையில் தமிழ் மக்கள் படும் இன்னல்களை ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் கொண்டு இனி வருங்காலங்களில் இரு தரப்பினரையும் சமமாக கையாள வேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றனர்.

தமிழர் தரப்பை தடைசெய்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தித்த ஐரோப்பிய ஒன்றியம், இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் சிறிலங்கா அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர இன்று வரை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காதது தமிழர்களை உலகளாவிய ரீதியில் ஏமாற்றத்திற்குள்ளாக்குகின்றது. இதனால் அவர்களது ஐரோப்பிய ஒன்றியம் மீதான கண்டனங்களும் அதிருப்திகளும் அதிகரித்துச் செல்கின்றது.

உண்மையான சமாதான முன்னெடுப்புக்கும் உடனடியான வன்முறை நிறுத்தத்திற்கும் சிறிலங்கா அரசையும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட சர்வதேச சமூகத்தினர் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவதன் மூலமும் பொருளாதார தடைகளை இடுவதன் மூலமும் சிறிலங்கா அரசை உண்மையான சமாதானத்தின் பால் இட்டுச்செல்ல முடியும். இதை விடுத்து வெறும் வார்த்தைகளால் கவலை அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தமிழின படுகொலைகளையோ நில ஆக்கிரமிப்புக்களையோ நிறுத்த முடியாது.

கடந்த கால தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகள் தமிழர்களுக்கு சிறிலங்கா அரசின் நிர்வாகத்தின் கீழ் பாதுகாப்பு இல்லை என்பதை தெட்டத்தெளிவாக உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன. இந்த யதார்த்தத்தை ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் கட்டாயம் உணரவேண்டிய காலம் இது. ஒரிரு சம்பவங்கள் அல்லாது தொடர்ச்சியாக தமிழின பொதுமக்களை குறிவைத்து சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்படும் கொலை நடவடிக்கையானது ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகும். இதனால் இது ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்பட வேண்டும்.

குறிப்பாக கடந்த சில மாதங்களில் இலங்கையின் வடகிழக்கில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட வன்முறைகளை பட்டியலிட்டால் சிறிலங்கா அரசின் உள்நோக்கம் புரியும். கடந்த 01.11.2006 இல் சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் கிளிநொச்சி மருத்துவமனை பாதிப்புக்குள்ளாகி நோயாளிகள் பீதியடைந்து வெளியேறியதுடன் அருகில் இருந்த வீடொன்றில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதன் பின்னர் 08.11.2006 இல் சிறிலங்கா அரசபடையினர் மேற்கொண்ட எறிகணைவீச்சில் தென் தமிழீழத்தின் வாகரை எனுமிடத்தில் அகதிகள் முகாம் ஒன்று தாக்கப்பட்டு அங்கிருந்த பொதுமக்களில் 45 பேர் உடல் சிதறி இறந்ததுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாது இராணுவத்தினர் 3 மணித்தியாலங்கள் தடைகளை போட்டனர்.

இச்சம்பவத்தை கண்டித்து தமிழர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தநாள் தலைநகர் கொழும்பிலுள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக கண்டனப் பேரணியொன்றை நடத்தி மனுவொன்றை கையளித்திருந்தனர். இந்த பேரணியை முன்னின்று நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அடுத்தநாள் காலை 10.11.2006 அன்று காலை 8:30 மணியளவில் சிறிலங்கா அரசின் உளவுத்துறையினரால் அவரது வீட்டுக்கு அண்மையில் சுட்டுப்படுகொல செய்யப்பட்டார்.

நடராஜா ரவிராஜ், சிறிலங்கா அரசை ஏ-9 பாதையை திறந்து யாழ்ப்பாண மக்களின் அவலநிலையை போக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சகாக்களான சந்திரநேரு, யோசப் பரராஐசிங்கம், விக்னேஸ்வரன் வன்னியசிங்கம் சிவமகராஜா போன்ற அரசியல் தலைவர்களும் இதற்கு முன்னர் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடுகள் சிறிலங்கா அரசின் ஐனநாயக வழிமுறைகளுக்கெதிரான செயற்பாடுகளை கோடிட்டுக் காட்டுகின்றன.

இதை ஒத்ததாகவே கடந்த காலங்களில் தொண்டர் நிறுவன பணியாளர்கள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இதேபோன்று ஊடகவியலாளர்களும் கொலை செய்யப்பட்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் வருகின்றனர். இந்த காரணத்தினால் தற்சமயம் யாழ். குடாநாட்டிலிருந்து ஊடகவியலாளர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்கின்றனர். இதே நிலைமை தென் தமிழீழத்திலும் நிலவுகின்றது.

தொடரும் மருத்துவ உணவுத்தட்டுப்பாட்டினால் யாழ். குடாநாட்டில் மக்கள் இறக்க தொடங்கியுள்ளதாக உள்ளுர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தும் சிறிலங்கா அரசு, இராணுவ நலன்களுக்காக சொந்த மக்களையே பகடைக்காய்காளாகவும் மக்களை போராயுதமாகவும் பயன்படுத்துகின்றது. இன்றும் தென் தமிழீழத்தில் தொடரும் எறிகணை வீச்சுக்களால் ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர். இடம்பெயர்ந்தோருக்கு எந்தவித மனிதாபிமானா உதவிகளும் சென்றடையாமல் அரசு, தொண்டர் நிறுவனங்களுக்கு தடைகளை விதித்தும் கட்டுபாடுகளை இட்டும் அவர்களது பணிகளை முடக்கி வருகின்றது. ஒரு நாட்டின் ஒரு பகுதியினரை இப்படி துன்புறுத்தும் அரசு எப்படி அவர்களது அரசாக இருக்க முடியும் என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழுகின்றது.

இத்தகைய சகல நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பையே எடுத்துக்காட்டுகின்றது. இதை சர்வதேச சமூகமும் ஐரோப்பிய ஒன்றியமும் உணர வேண்டுமென தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தமிழர்கள் தங்களை பாதுகாப்பதற்கு தங்களைத் தாங்களே பாதுகாக்க கூடிய வகையில் சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்து சென்று தமிழீழ தனியரசை நிறுவுவதை தவிர வேறு வழியில்லை.

இந்த யதார்த்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதற்கான தனது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழர்கள் வேண்டி நிற்கின்றனர். இதுவரை காலமும் எட்டப்பட்ட உடன்படிக்கைகள் எவையும் சிறிலங்காவின் இதுவரையிலான எந்தவொரு அரசினாலும் நிறைவேற்றப்படவில்லை என்ற உண்மையை சர்வதேசம் உணர மறுப்பது எமக்கு வேதனையளிக்கின்றது.

சிறிலங்காவின் அரச பீடத்தினது மனோபாவத்தை உணர தமிழர்களின் வரலாறே சான்றாகும். இனியும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேசமும் காலம் தாழ்த்தாது தமிழர்களிடையே ஒரு சர்வஐன வாக்கெடுப்பை நடத்தி தமிழர்களின் அபிலாசைகளை அறிந்து அவர்களை பிரிந்து சென்று வாழவிட வழிசமைக்க வேண்டியது உலகில் அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் ஐரோப்பாவின் தலையாய கடமையாகும்.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஊடகங்களும் தமிழர்களின் மனித அவலத்தை தெரிந்தோ தெரியாமலோ இருட்டடிப்பச் செய்வதும் திரிபுபடுத்துவதும் செய்திகளை தவிர்த்து வருவதும் ஐரோப்பா வாழ் தமிழர்களை மேன்மேலும் வேதனைக்குள்ளாக்கும் நடவடிக்கைகளாக உள்ளன. ஊடகங்களும் எதிர்காலத்தில் தமிழர்களின் மனித அவலங்களை சரியான முறையில் வெளிக்கொணரவேண்டும் என வேண்டுகின்றோம்.

இறுதியாக

- யாழ். குடாநாட்டிற்கான ஏ-9 பாதையை திறக்க சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுங்கள்!

- தமிழர் பிரதேசங்களில் உள்ள மருந்து மற்றும் உணவுபற்றாக்குறையை நீக்க வழிசெய்யுங்கள்!

- தமிழர் பிரதேசங்களில் இருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக விலக சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுங்கள்!

- சிறிலங்கா அரசின் வன்முறைகளை நிறுத்த அதற்கு பொருளாதார தடையை விதியுங்கள்! சிறிலங்கா அரசின் இராணுவத் தளபாட கொள்வனவிற்கு தடை விதியுங்கள்!

- தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்!

- தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை அறிய சர்வஐன வாக்கெடுப்பை நடத்துங்கள்!

- தமிழர் தரப்பையும் சிங்களவர் தரப்பையும் சமமாக அணுகுங்கள்!

- தமிழர் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தடைகளை அகற்றுங்கள்!

- தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவுங்கள்!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இம்மனுவை கையளிககின்றோம்.
நன்றி>புதினம்.

No comments: