Sunday, November 19, 2006

பாதுகாப்பு சீர்குலைவு: வெளியேறுகிறது மலேசியநிறுவனம்.

சிறிலங்காவில் அதிகரித்து வரும் விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு நிலைமை சீர்குலைவினால் பிரபல சமையல் எரிவாயு நிறுவனமான ஈ-காஸ் அந்நாட்டிலிருந்து வெளியேற உள்ளது.

ஈ-காஸ் நிறுவனமானது மலேசிய முதலீட்டாளரைக் கொண்டது. சிறிலங்காவின் சமையல் எரிவாயு துறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

சிறிலங்கா நிலைமைகள் தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஸ்லன் சா மொகமெட் சா கூறியுள்ளதாவது:

எங்கள் நிறுவனம் இங்கு தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் உள்ளது. கடந்த 2003-2004 ஆம் ஆண்டைப் போலவே உள்நாட்டு பங்குதாரர் ஒருவரை நாம் தேடுகிறோம்.

ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் எமது விற்பனையில் 40 விழுக்காடு பாதிப்படைந்துள்ளது. மாதந்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் எரிவாயு கலன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏ-9 பாதை மூடப்பட்டமையால் 4 ஆயிரம் வரையிலான கலன்கள் விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது.

துறைமுக பணியாளர்கள் வேலை நிறுத்தம், சுங்கத்துறை வேலை நிறுத்தம், பெற்றோலியத்துறை வேலை நிறுத்தம், பணவீக்க விகிதம் என பல பிரச்சனைகள் உருவாகி உள்ளன. மக்களின் வாங்கு சக்தியும் சிறிலங்காவில் குறைந்துவிட்டது.

சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகளால் சில கப்பல்கள் கொழும்பை புறக்கணித்துவிட்டு துபாய்க்கும் மும்பாய்க்கும் செல்கின்றன.

கடந்த 10 மாத கால மோசமான பாதுகாப்பு நிலைமைகளால் நாம் வளைந்து கொடுக்க வேண்டியதாக உள்ளது. ஆகையால் நாங்கள் சில முக்கியமான முடிவுகளை அதாவது வளைந்து கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: