Thursday, November 30, 2006

கலைஞர் அவர்களே உங்களுக்கு ஒரு வரலாற்று கடமை இருக்கிறது.

- ஆனந்த விகடன்-
ஈழத்தமிழரின் பிரச்சனையில் கலைஞரின் அணுகுமுறை தொடர்பாக பதிலளிக்கையிலேயே கலைஞர் அவர்களே உங்களுக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் இதழிற்கு வழங்கிய நேர்காணலில் பழநெடுமாறன் தெரிவித்துள்ளார்.


விரிவான நேர்காணல்:

முல்லை பெரியாறு அணைப்பிரச்சனையில் கேரள, தமிழக மாநில முதல்வர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதாக அறிவித்து இருக்கிறீர்களே என்ன காரணம்?

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு சொன்னது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு திடீரென்று வழங்கப்பட்ட ஒன்றல்ல. இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு கடைசியில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அணையையும் பார்வையிட்டு இருதரப்பையும் கலந்து பேசி ஒரு அறிக்கை தாக்கல் செய்யச்சொன்னது உச்சநீதிமன்றம்.

அந்த நிபுணர் குழுவிற்கு முன்னால் கேரளம் 12 காரணங்களைச் சொல்லி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று வாதிட்டது. காலம் கடத்துவதற்காக காரணங்களை அடுக்குகிறது கேரளம். இந்த காரணங்களில் நியாயமில்லை, என்று சொல்லி தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது நிபுணர் குழு. அதன் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா அந்த தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

என்ன காரணம் என்றால் கேரளத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. முல்லை பெரியாரில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தினால் கேரள தேர்தலில் தன் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் நலனுக்காக நாட்டு நலன் பலியிடப்பட்டதேயொழிய வேறில்லை.

பெரியாறு அணை தொடர்பாக கலைஞரை தாக்கி ஜெயலலிதா விடுகிற அறிக்கைகளைப் பார்க்கும் போது நகைப்புக்கிடமாக இருக்கிறது. சரி கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகாவது பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அவரும் செய்யவில்லை. மீண்டும் அமைக்கப்பட்ட மறு ஆய்வுக்குழுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து மீண்டும் தன் தீர்ப்பை உறுதி செய்தது. உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை அமல்படுத்த தவறியதன் மூலம் முதல்வர் கலைஞரும் உச்சநீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். கேரள முதல்வர் அச்சுதானந்தன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசினார். ஆகவே இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன்.

டில்லியில் நடைபாதை கடைகளை மத்திய அரசின் விருப்பத்தையும் மீறி சீல் வைக்கிற நீதிமன்றம் அதுபோல பெரியாறு அணையிலும் உச்சநீதிமன்றமே முன்நின்று செயல்படுத்தலாம் இல்லயா?

ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் சொல்கிற போது அதை செயல்படுத்துகிற உரிமை இரண்டு மாநில அரசுகளுக்கும் இருக்கிறது. கேரளத்தை விட கூடுதலான பொறுப்பு தமிழகத்துக்கு இருக்கிறது. தமிழக அரசு தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அப்படி எடுக்கும் போது கேரளம் அதை தடுத்தால் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.

ஒன்பது மாதகாலமாக ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் என்ன செய்யும். பெரியாறு அணை விவகாரத்தில் மாநில அரசு தூங்கிக்கொண்டிருப்பதன் விளைவு இப்போ சட்டப்படி ஆறு போலிசார் இருக்க வேண்டிய இடத்தில் முப்பது போலிசாரை கேரளம் நிறுத்தி வைத்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆதிவாசிகளை "லஸ்க்கர்" என்கிற பெயரில் பாதுகாப்பின் பெயரில் நிறுத்தி வத்திருக்கிறார்கள். இதெல்லாம் சட்டவிரோதமானது. தீர்ப்பு வந்தவுடன் தமிழக போலிசார் நூறு பேரை கொண்டு போய் பெரியாறு அணயில் நிறுத்தி அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டுமா? இல்லயா? எதையுமே செய்யவில்லயே செயலற்று போய்வீட்டீர்களே பின்னர் எப்படி கேரளத்தை குறை சொல்ல முடியும். அணயில் அதிகப்படியாக வரும் நீரை குழாய்கள் மூலமாகவோ குகைபாதை வழியாகவோ கொண்டு வந்து வைகை அணயிலும் பெரியார் பாசன ஐந்து மாவட்ட ஏரி கண்மாய்களையும் தூர் வாரி அதில் சேமித்திருக்க வேண்டும் அதற்கும் திட்டமில்லை. இப்படி திட்டமிடாததன் விளைவு இப்போது தறிகெட்டு ஒடிய தண்ணீர் குமுளி பாலத்தை அடித்துச் சென்றுவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் சிறு வெள்ளத்தை தாங்கும் அளவுக்குக் கூட இல்லாமல் அந்த பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது.

இந்நிலையில் வருகிற 29 ஆம் தேதி மத்திய அரசின் முன்னிலையில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக சொல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு போவதற்கு முன்பே கேரள முதல்வர் அச்சுதானந்தன் சொல்கிறார் 136 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றி பேசமாட்டோம் என்கிறார். இப்போ புதிய அணை கட்டுவதைப் பற்றி பேசுகிறார்கள். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனோ அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது பற்றி பேசுவோம் என்கிறார்.

இருவரும் சேர்ந்து போகாத ஊருக்கு புரியாத வழி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள
. பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்துகிற மோசடி வலையை கேரளம் விரித்திருக்கிறது. அந்த வலையில் தமிழகம் விழுந்து விட்டது. முதலில் தமிழகம் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். கேரளத்தை தீர்ப்பை செயல்படுத்தினால்தான் பேச்சு என்று நிபந்தனை விதித்திருக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒன்றை நினவுபடுத்த விரும்புகிறேன். 1952ல் ராஜாஜி முதல்வராக இருந்த போது பெரியார் அணையில் இருந்து பாசனத்துக்கு எடுக்கிற தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற ஒரு திட்டத்தை ராஜாஜி முன்வைத்தபோது அப்போதைய திருவிதாங்கூர், கொச்சி முதல்வர் பட்டந்தாணுப்பிள்ளை சம்மதிக்கவில்லை.

கம்யூனிஸ்ட்கள்தான் என்னுடைய முதல் எதிரி என்று சொன்ன ராஜாஜி அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கம்யூனிஸ்ட்டான பி.ராமமூர்த்தி அவர்களை பட்டந்தாணுப்பிள்ளயிடம் பேச அனுப்பினார். திட்டம் நிறைவேறியது. கட்சியாலும் கொள்கையாலும் ராமமூர்த்தியும் ராஜாஜியும் எதிரிகள். ஆனால் மக்கள் நலன் என்று வந்த போது பேதங்கள மறந்து ஒன்றிணைந்து பணியாற்றினார்கள். ஆனால் அந்த பக்குவம் கலைஞருக்கும் இல்லை ஜெயலலிதாவுக்கும் இல்லை. பெரியாறு அணை விவகாரத்தில் ஒருவர் இன்னொருவரை குற்றம் சாட்ட தகுதியற்றவர்கள். காரணம் இருவருமே குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள். இவர்களின் போட்டா போட்டியால் மொத்த தமிழர் நலனும் பாழாகப்போகிறது புதுடில்லியும் நம்மை மதிக்கவில்லை.

பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகமும் மக்களும் சமூக அமைப்புக்களும் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

1980ல் நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தேன். அப்போது முதன் முதலாக "மலையாள மனோரமா" என்கிற மலையாள பத்திரிகைதான் முதன் முதலாக இந்த பிரச்சனை பற்றி எழுதியது. அப்போதே இந்த பிரச்சன பற்றி சட்டமன்றத்தில் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினேன். எதிர்காலத்தில் உரிமைகள் பறிபோவதற்கான வாய்ப்புகளும், பிரச்சனைகள் தோன்றுவதற்கான அறிகுறிகளும் இருந்ததை அப்போதே சுட்டிக்காட்டினேன். அப்போ எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். யாரும் நான் சொன்னதை கண்டு கொள்ளவில்ல. ஒரு கொடிய நோய்க்கான அறிகுறியாக தெரிந்தது.

அன்றைக்கே தமிழகம் விழித்திருந்தால் இன்றைக்கு பெரியாற்றில் தமிழர்களின் உரிமை பறிபோயிருக்காது. ஒரு கிலோ அரிசியை விளைவிக்க நாம் 2000 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறோம். தமிழக அமைச்சர் நேரு அவர்கள் சமீபத்தில் பேசும் போது பாலக்காடு கணவாய் வழியாக மட்டும் மாதம் ஒன்றுக்கு இருபது லட்சம் டன் அரிசி கேரளாவுக்கு போகிறது என்று சொன்னார். ஒரு கிலோ அரிசிக்கு 2000 லிட்டர் தண்ணீர் என்றால் இருபது லட்சம் டன்னுக்கு நான்காயிரம் மில்லியன் கன மீட்டர் தண்ணீரையும் சேர்த்தல்லவா அரிசியோடு நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பெரியாற்றில் வெறும் 82 மில்லியன் கன மீட்டர் தண்ணீரைத்தானே கேட்கிறோம். இது தவிர கோழி, ஆடு, மாடு என்று கறிவேப்பிலையில் தொடங்கி சகலமும் இங்கிருந்துதான் கேரளத்துக்கு போகிறது. போதாக்குறைக்கு நெய்வேலியிலிருந்து 20% மின்சாரம் கேரளத்துக்கு போகிறது. நீங்கள் நியாயமாக எங்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் கொடுங்கள் இல்லை என்றால் இதை எல்லாம் தடுப்போம் என்று சொல்ல எவளவு நேரம் ஆகும்? கம்யூனிஸ்டுகள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதற்கு அச்சுதானந்தன் தான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலம் அவர் கேரள மக்களை உசுப்பி விட்டு குளிர்காய நினைக்கிறார். இவர்களுடைய மரியாதைக்குரிய மூத்த தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்களுடைய அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார் வீ.ஆர்.கிருஷ்ணய்யர். (இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசாங்கம் ஈ.எம்.எஸ் உடையது). அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜரும் கிருஷ்ணய்யரும் இணந்து மேற்கே பாயும் நதிகளை கிழக்கே திருப்பிவிடுவதற்கான திட்டம் ஒன்றை வகுத்தார்கள். இதற்கு பிரதி பலனாக வருடம் தோறும் குறைந்த விலையில் இவ்வளவு டன் அரிசி கொடுப்பது என்றும் ஆரம்ப நிலயில் பேசப்பட்டது.

இருவரும் நேருவிடம் போய் நிதி உதவி கேட்க அவரும் பாராட்டிவிட்டு உதவுவதாக சொல்லியிருக்கிறார். திட்டத்தின் ஆயத்த பணிகள் நடந்த போது வீ.ஆர்.கிருஷ்ணய்யர் நீதிபதியாக உச்சநீதிமன்றத்க்கு போய்விட்டார். நேரு மரணமடைய காமராஜர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக போய்விட்டார். பின்னர் வந்தவர்காளால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 1980ல் கிருஷ்ணய்யரை நான் சந்தித்த போது திட்டம் ஆரம்ப நிலயில் பேச்சுவார்த்தை கட்டத்தில் இருந்ததை ஒத்துக்கொண்டார். கட்சி நலனை விட மக்கள் நலன் பெரிது என்று நினத்த கிருஷ்ணய்யர், காமராஜர், நேரு மாதிரியான தலைவர்களுக்கு பக்குவம் இருந்ததால் அவர்களுக்குள் ஒற்றுமையும் இருந்தது. ஆனால் ஒரே மாநிலத்தில் இருக்கிற அதிமுக, திமுக என்கிற இரண்டு கட்சிகளுக்கிடயிலான போட்டி அரசியல் மொத்த மாநில நலனையும் பாழடித்துக்கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் விஷயத்திலும் பெரியாறு, காவிரி விஷயத்திலும் மத்திய அரசு நம்மை ஏளனமாக நடத்துவதற்கு இந்த இரண்டு கட்சிகளுக்கிடயிலான போட்டா போட்டிதான் காரணம். விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் பெரியாற்றில் தண்ணீர் கொடுக்காத கேரளத்துக்கு நாம் நிபந்தனை விதிக்க வேண்டும். எதிர்ப்பு காட்டாமல் நாம் காரியம் சாதிக்க முடியாது.

யாழ். குடாநாட்டில் ஆறு இலட்சம் மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்திருக்கிறதே? இதில் இந்தியாவுக்கு என்ன பொறுப்பு இருக்க முடியும்?

ஈழத் தமிழரின் தாயகப்பகுதிகளான வடக்கு-கிழக்கில் 70% பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 30% பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் யாழ். குடாநாட்டில் உள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகளுக்கு எதிரான குழுக்களும் இயங்குகின்றன. இந்த குழுக்களின் உதவியோடு இராணுவம் படுகொலைலகளை செய்கிறது. போர் நிறுத்த காலத்தில் மட்டும் 3,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு கிடயாது. ரவிராஜ் என்கிற நாடாளுமன்ற உறுப்பினரை பாதுகாக்கப்பட்ட பகுதியான கொழும்பு நகரில் வைத்து படுகொலை செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். சிங்கள அரசின் உதவியில்லாமல் இந்த கொலைகள் நிகழ வாய்ப்பில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் சாதாரண தமிழர்களுக்கு அங்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். சிங்கள அரசு தமிழர்கள் மீது பொருளாதார தடை விதித்து, ஏ-9 யாழ்ப்பாண நெடுஞ்சாலையை மூடி தாக்குதல் நடத்துவதற்கான தைரியம் ஏன் வந்ததென்றால். இலங்கையில் இருந்து தன்னை பார்க்க வந்த தமிழ் எம்.பிக்களை சந்திப்பதற்கு நேரமும் தேதியும் ஒக்கப்பட்ட பிறகும் சந்திக்க மறுத்விட்டார் பிரதமர்.

காரணம் தமிழக முதல்வர்.அவர்கள் டில்லிக்கு போவதற்கு முன்னால் தமிழக முதலவரை சந்திக்க சென்னயில் பத்து நாட்கள் காத்திருந்தார்கள் கடிதம் எழுதி முதல்வரை சந்திக்க நேரம் கேட்டார்கள். முதல்வரின் அலுவலகத்துக்கு போய் சந்திக்க முயன்றார்கள். கலைஞரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. முதல்வரை சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு பிரதமரை சந்திக்க டில்லி போன போது பிரதமரும் சந்திக்க மறுத்விட்டார்.

தமிழக முதல்வரே தமிழ் எம்.பிக்களை சந்திக்கவில்லை. அவர் சந்திக்காதவர்கள நாம் எப்படி சந்திக்க முடியும் என்று பிரதமரும் அவர்களை சந்திக்கவில்லை. வந்த தமிழ் எம்பிக்கள் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து விட்டு இலங்கைக்கு போன போது. இந்தியாவிலும் தமிழகத்திலும் இவர்களுக்கு ஆதரவில்லை அதனால்தான் தமிழக முதல்வரும் இந்திய பிரதமரும் இவர்களை சந்திக்கவில்லை என்று ராஜபக்ச தவறாக புரிந்து கொண்டு...தமிழர்களை கொன்றால் கேட்பதற்கு ஆளில்லை என்று தன் கொடூர தாக்குதலை தொடங்கிவிட்டார்.

இந்தியா ஈழத்தமிழரை ஆதரிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றுவதற்கு காரணம் தமிழக முதல்வர்தான். இவர் அவர்களை சந்தித்திருந்தால் பிரதமர் அவர்கள சந்தித்திருக்கக்கூடும். இதனுடய முதல் பலிதான் ரவிராஜ் படுகொலை. 1983 ஜூலை கலவரங்களில் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கேபினட் அந்தஸ்துள்ள மூத்த ராஜதந்திரி ஜி.பார்த்தசாரதியையும் அப்போதைய வெளிவிவகாரத்துறை அமச்சர் பி.வி.நரசிம்மராவயும் அனுப்பி வைத்தார் இந்திராகாந்தி. "தனது கொல்லைப்புறத்தில் நடக்கும் படுகொலைகளை இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது" என்று ஜெயவர்த்தனாவிடம் கண்டிப்பான முறையில் சொன்னார் இந்திரா.

இலங்கை, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட பகுதி என்பதிலும் ஈழத்தமிழர் ஆதரவிலும் உறுதியாக இருந்தார் இந்திரா காந்தி. திருகோணமலை கடற்பகுதியில் அமெரிக்காவின் கடற்படைத்தளம் வருவதை அனுமதிக்க முடியாது என்றார் இந்திரா. அன்று அவர் விடுத்த எச்சரிக்கை இலங்கைக்கு மட்டுமல்ல மொத்த உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சேர்த்தே சொல்லப்பட்டது.

ஆனால் இன்று அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் என எல்லா நாடுகளும் இலங்கையில் இறங்கியிருக்கிறார்கள். எல்லோரும் ஆயுதங்கள் கொடுக்கிறார்கள் இதனால் ஈழத்தமிழருக்கு நேரும் ஆபத்தை விட இந்தியாவுக்கு நேரும் ஆபத்துதான் அதிகம். இந்தியா இதை கண்டுகொள்ளாமல் கண் இருந்தும் குருடாக இருக்கிறது.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டால் தமிழகம் கொந்தளித்தால் உடனே கண்துடைப்புக்காக சிவசங்கரமேனன் என்கிற ஒரு அதிகாரியை இலங்கைக்கு அனுப்புகிறார்கள். ஜி.பார்த்தசாரதி அப்போது ஈழத்தமிழர் குறித்து பேச இலங்கைக்கு போனால் போவதற்கு முன்னால் தமிழகத்துக்கு வந்து முதல்வர் எம்ஜிஆரை பார்த்து பேசிவிட்டு போவார். ஆனால் இப்போது சிவசங்கர்மேனன் போய் தமிழர் பிரச்சனையை கொழும்பில் பேசிவிட்டு வருகிறார். அப்புறம் டில்லியில் இருந்து எம்.கே.நாராயணன் என்கிற அதிகாரியை அனுப்பி கலைஞருக்கு இலங்கைக்கு போய் வந்த தகவல் சொல்கிறார்கள்.

இந்தியாவிலேயே மூத்த முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கிற மரியாதை இவ்வளவுதானா? உங்களுக்கு 40 எம்பிக்கள் கொடுத்து முதுகெலும்பாக இருக்கிறாரே. அவரை இலங்கை பிரச்சனை தொடர்பாக பேச இராணுவ அமைச்சரையோ வெளிவிவகார அமைச்சரையோ அனுப்பலாமே? அவரையே நீங்கள் மதிக்கவில்லயே.

ஈழத்தமிழரின் பிரச்சனையை மதிக்காமல் ஏனோ தானோவென்று மத்திய அரசு கையாள்கிறது. ஒரு பக்கம் இலங்கைக்கு உணவுப்பொருட்கள் அனுப்புகிறோம் என்று சொல்லி விட்டு தமிழகத்தின் கோவையிலும், வட இந்தியாவிலும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். இங்கு கொடுக்கப்படுகிற பயிற்சி ஈழத்தில் தமிழர்கள கொல்லத்தான் பயன்படும் என்பது இந்தியாவுக்கு தெரியும். தெரிந்தேதான் இதை செய்கிறார்கள். தமிழகம் திரண்டெழுந்து மொத்த எதிர்ப்பை காட்டாமல் புதுடில்லி பணியாது. கலைஞர் தன் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த தவறுவதாலும். எதிர்ப்பு காட்டப்படாததாலும் மத்திய அரசு நம்மை மதிக்கத்தவறுகிறது. இப்படியான பழக்க வழக்கங்கள்தான் சிங்கள ராணுவத்துக்கு துணிச்சலை கொடுக்கிறது.

ஈழத்தமிழரின் பிரச்சனையில் கலைஞரின் அணுகுமுறை எப்படியிருக்கிறது?

தமிழக முதல்வர் தன்னுடய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை. அதனால்தான் இந்த அலட்சியம் ஈழத்தமிழருக்கு இழைக்கப்படுகிறது. நமது அண்டை நாடான வங்காள தேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையில் பராக்கா அணை பிரச்சனை நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது.

மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு திடீரென்று வங்காளதேச தலைநகரான டாக்காவுக்கு போனார். போய் குடியரசு தலைவரை பார்த்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்தார். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஜோதிபாசு கையெழுத்திட முடியாது. காரணம் அவர் ஒரு மாநில முதல்வர். அவர் புதுடில்லிக்கு போய் அப்போது பிரதமராக இருந்த தேவகௌடாவை சந்தித்து இதுதான் எங்கள் மாநில நலனுக்காக நாங்கள் போட்டிருக்கும் திட்டம் இதில் கையெழுத்திடுங்கள் என்றார். அவரும் கையெழுத்திட்டார் பிரச்சனை தீர்ந்தது.

மேற்குவங்க மக்களின் நலனை பேணும் உரிமை ஜோதிபாசுவுக்கு உண்டு. அவர் அதை நிலைநாட்டினார். நம்மோட முதல்வர் கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சனையில் டில்லியின் முடிவுதான் என் முடிவு என்கிறார். நான் எடுக்கிற முடிவை டில்லி செயல்படுத்த வேண்டும் என்றல்லவா முதல்வர் கருணாநிதி சொல்ல வேண்டும். டில்லி என்ன சொல்கிறதோ அதை நான் கேட்கிறேன் என்று சொல்லும் போதே நீங்கள் உங்களின் அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிட்டீர்கள
என்றுதானே அர்த்தம். நீங்கள் உங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுத்ததன் விளைவு டில்லி உங்களின் அதிகாரத்தை மதிக்க மறுக்கிறது.

சிவசங்கர்மேனன் இலங்கைக்கு போவதற்கு முன்னால உங்களைப் பார்த்தால்தானே மரியாதை. போய் பார்த்விட்டு வந்து ஒரு சுருக்கமான தகவலை உங்களுக்கு சொன்னால் அதற்கு என்ன அர்த்தம். எல்லா காலத்திலும் கலைஞருக்கு ஈழத்தமிழரின் பிரச்சனை சோற்றுக்கு ஊறுகாய் தொடுகிற மாதிரிதான். தேவைப்படும் போது தொடுவார்.

கலைஞரே ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு வரலாற்று கடமை என்ற ஒன்று இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்து உலக நாடுகள் சோவியத் ரஷ்யாவின் தலைமையில் ஒரு அணியாகவும், அமெரிக்காவின் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்த போது நாங்கள் இந்த பக்கமும் இல்லை, உங்கள் பக்கமும் இல்லை என்று மூன்றாவது அணியொன்றை உருவாக்கினார் நேரு.

அது "அணிசேரா நாடுகள்" என்றானது. இந்த உலகம் மூன்றாவது உலகப்போரை சந்திக்காமல் போனதற்கு நேரு உருவாக்கிய அணிசேரா நாடுகள் அமைப்பும் அதன் கொள்கையும் மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வரலாற்றுக்கடமை நேருவை சாரும். அது போல நேருவின் மறைவுக்கு பிறகு காமராஜருக்கு ஒரு வரலாற்று கடமை இருந்தது. முடிந்தால் காமராஜரே பிரதமராக ஆயிருக்க முடியும். ஆனால் நேருவுக்கு பிறகு சாஸ்திரியையும் அவருக்கு பிறகு இந்திரா காந்தியையும் ஜனநாயக வழியில் அமைதியான முறையின் இவர்களை பிரதமராக்கி இன்றைக்கும் வரலாற்றில் நிற்கிறார் காமராஜர். அதுபோல கலைஞர் அவர்களே உங்களுக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது. உங்கள் காலத்தில் ஈழத்தமிழர்கள் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள். அந்த போராட்டத்திற்கு உறுதுணயாக இருந்து ஈழத்தமிழர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க நீங்கள் உதவினால் வரலாறு உங்களை வாழ்த்தும். ஒதுங்கி நின்றால் ஒரு தமிழ் தலைமுறையின் பழியை சுமக்க நேரிடும். அது அழியாத பழியாக இருக்கும்.

இப்போது இந்திய அரசு இலங்கைக்கு உணவுப்பொருட்களை அனுப்புவதாக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறதே? இன்னொரு பக்கம் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் டேராடூனில் நடைபெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டை துவங்கி வைக்கிறாரே?

இந்தியா அனுப்புகிற பொருட்கள் ஒரு போதும் ஈழத்தமிழருக்கு போய் சேராது. ஏற்கனவே சுனாமி வந்து அங்கு தமிழர்கள் பேரழிவை சந்தித்த போது உலக நாடுகள் ஏராளமான நிதிகளை கொடுத்தது. அந்த நிதிகளோ உதவிகளோ துளியும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

அதுபோல இதுவும் போய்ச் சேராது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம்தான் இந்தியா உதவ வேண்டும். இந்திய அரசு ஈழத்தமிழருக்கு கொடுக்க வேண்டியதில்லை. தமிழக மக்களே ஈழத்தமிழருக்கு அள்ளிக்கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்குமான முயற்சியையும் கலைஞர்தான் செய்ய வேண்டும். ஆனால் 26 ஆம் தேதி ஆசிய மேயர்கள் மாநாட்டை துவங்கி வைக்க இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.

ஆசியாவில் இந்த மேயர் மாநாட்டை தொடங்கிவைக்க வேறெந்த தலைவரும் கிடைக்கவில்லயா? தென் ஆப்ரிக்காவில் ஸ்மெட்ஸ் என்கிற தலைவர் நிறவெறி பிடித்தவர் என்பதால் அவருடன் கைகுலுக்க மறுத்தார் நேரு. அவருடைய வாரிசுகளான இந்திய ஆட்சியாளர்கள் இனவெறி பிடித்த ரத்த கறைபடிந்த கையோடு இந்தியாவுக்கு வருகிற ராஜபக்சவுக்கு கைகுலுக்கி சிகப்பு கம்பளம் விரிப்பது தமிழர்களுக்கு செய்கிற துரோகம் என்று நினக்கிறேன். ஆகவே தமிழகத்திலிருந்து அந்த மாநாட்டுக்கு போகிற மேயர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு தங்களின் எதிர்ப்பை காட்ட வேண்டும். அல்லது அந்த மாநாட்டை புறக்கணித்து மானத்தை காப்பாற்ற வேண்டும்.

ஈழப்பிரச்சனையை ராஜீவ் கொலைக்கு முன் ராஜீவ் கொலைக்கு பின் என்று பிரித்து பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே?

ராஜீவை மையப்படுத்தி ஈழத்தமிழரின் பிரச்சனையை அணுகுவது போன்ற வேறு முட்டாள்தனம் இருக்க முடியாது. இந்திரா காந்தி ஆட்சியில் என்ன நடந்தது? அதற்கு பிறகு என்ன நடந்தது என்றுதான் பார்க்க வேண்டும். இலங்கை இனப் பிரச்சனையை பொறுத்த வரையில் இந்திராவின் அணுகுமுறை சிங்கள இனவெறியை கண்டிப்பதாக இருந்தது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்தது. இரண்டாவது தனது பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட பகுதியில் அந்நிய ஊடுருவலை அனுமதிக்கவில்ல. ஆனால் இன்று இந்தியாவின் தெற்கு எல்லை ஆபத்தான பகுதியாக மாறி வருகிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள அமெரிக்காவின் ஏஜெண்டுகள்தான் ஈழத்தமிழரின் பிரச்சனையை இவ்விதமாக திசை திருப்புகிறார்கள்.

நளினியின் விடுதலை பற்றிய கோரிக்கைகள் என்னவானது?

அவர்களது மட்டுமல்ல ஆயுள்தண்டனை பெற்று தண்டனைக் காலத்தை முடித்தவர்கள் அனைவரையுமே விடுதலை செய்யத்தான் கோருகிறோம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்திலோ உயர்நீதிமன்றத்திலோ முறையிட்டால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. சிலருக்கு இது வாய்க்கிறது சிலருக்கு வாய்க்காமல் போகிறது.

ஆயுள் தண்டனை பெற்றவர்கள் எவ்வளவு காலம் சிறையில் இருக்க வேண்டும் ஆயுள் தண்டனையின் காலம் எவ்வளவு என்கிற வாதம் இந்தியாவில் ஒரு சர்ச்சையாக இன்று நடக்கிறது. என்னுடைய வாதம் முதலாவது மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். உலகம் முழுக்க உள்ள 127 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. புத்தரும், மஹாவீரரும். காந்தியும் பிறந்த நாட்டில் மரண தண்டனை இன்னும் இருக்கிறது.

மரண தண்டனை விதிப்பதால் நடபெறும் கொலைகளை தடுத்துவிட முடியாது என்பதை புள்ளி விபரங்கள் நமக்கு காட்டுகின்றன. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல ஆயுள் தண்டனை காலமும் எத்தனை ஆண்டுகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

சிறைக்கைதிகளின் நடத்தை பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு ஒன்றிருக்கிறது. ஒரு ஆயுள் தண்டனை கைதி பத்து ஆண்டுகள் நன்நடத்தையாக இருந்தால் அந்த குழு அவருக்காக பரிந்துரைத்தால் கைதி விடுதலை செய்யப்படுவார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த குழு கூடவே இல்லை. தமிழக சிறைகளில் இருபது ஆண்டுகளாக இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகளும் இருக்கிறார்கள்.

சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாற வேண்டும் என்று சொல்கிறது மணிமேகலைக் காப்பியம். ஆந்திராவில் சட்டம் இருக்கிறது. முதல் மூன்று மாதம் கைதி ஒழுங்காக நடந்து கொண்டால் ஆண்டு தோறும் ஒரு மாதம் விடுப்பு கொடுத்து கைதியை குடும்பத்தோடு இருக்க அனுமதிப்பார்கள்.

வருடத்தில் ஒரு மாதம் இப்படி இருந்து கொண்டு பத்து வருடம் ஆனதும் தானாகவே அவர் விடுதலயாகி விடுவார். இப்படி விடுதலை ஆகிறவர்கள் கொடுஞ்செயல் எதையும் புரிந்ததாக சொல்ல முடியாது. நானும் சிறையில் இருந்திருக்கிறேன். தான் செய்த குற்றத்தை எண்ணி எண்ணி வருந்துபவர்களாகவே கைதிகள் இருக்கிறார்கள். தான் செய்த கொலையால் கொலையானவரின் குடும்பம் எவளவு சிரமப்படுகிறதோ அது போல தனது குடும்பமும் சிரமப்படுவதை நினைத்து வருந்துகிறார்கள்.

நான் பல ஆயுள் தண்டனை கைதிகளை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாராவது அடித்தால் கூட அவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள். காரணம் சிறை அவர்களை மாற்றியிருக்கிறது அவர்கள் மனந்திருந்தியிருக்கிறார்கள
. இப்படி மனந்திருந்தியவர்கள சிறையில் வைத்திருப்பது அவர்களை மீண்டும் உஷ்ணப்படுத்தும் செயல். ஆனால் பதினைந்தாண்டுகள் நளினி சிறையில் இருந்துவிட்டார். ஆனால் மற்ற கைதிகளுக்கு கிடைக்கும் வசதி நளினிக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு சிறையில் இருக்கும் இரு வேறு கைதிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவது நியாயமாகாது.

தமிழகத்தில் உருப்படியான ஒரு எதிர்க்கட்சி இல்லாமல் போனது பல்வேறு பிரச்சனகளுக்கும் காரணமாகிறதா? எதிர்க்கட்சியின் இடம் நிரப்பப்படுமா?

அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறதே தவிர அது தன்னுடைய உண்மயான ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். சென்று முறையாக தன் கடமையை செய்ய வேண்டும். ஆளும் கட்சியான திமுகவும் தோழமை கட்சிகளையே எதிர்க்கட்சிகளாக பார்க்கிறது.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவின் தோழமை கட்சியினரே பாதிக்கப்பட்டார்கள் தாக்கப்பட்டார்கள். சென்னயில் சி.பி.எம் கட்சியை சேர்ந்த தேவி என்கிற பெண்மணி படுமோசமாக தாக்கப்பட்டார். முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் நடந்த ஒழுங்கீனங்களை எல்லா கட்சியினரும் கண்டிக்கிறார்கள். பத்திரிகைகளும் கண்டிக்கின்றன. இதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார் என்றால் இவரது மதிப்பு உயர்ந்திருக்கும். இதை விமர்சித்த பழுத்த நாடாளுமன்ற உறுப்பினரான இரா.செழியனை தரம்தாழ்ந்த முறையில் விமர்சிக்கிறார். இது அவர் வகிக்கிற பதவிக்கு அழகல்ல. இத்தனைக்கும் செழியன் அவரது முன்னாள் தோழன். முன்னாள் தோழனிடம் முதல்வரே இப்படி நடந்து கொண்டால் கட்சி தொண்டர்கள் எப்படி நடந்து கொள்வார்கள். இந்தியாவின் மூத்த முதல்வர், செழியனைப் பற்றி சொல்லி இருக்கிற வார்த்தைகள் எனக்கு வேதனையை ஏற்படுத்கிறது.

1963ல் பாராளுமன்றத்தில் டாக்டர் லோகியா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். லோகியா முதன் முதலாக பாராளுமன்றத்துக்கு போனதும் செய்த முதல் வேலை இதுதான். நம்பிக்கயில்லா தீர்மானம் கொண்டு வந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பேசினார். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை லோகியா சொன்னார். அந்த மூன்று மணிநேரமும் நேரு அமைதியாக அவரது பேச்சைக் கேட்டார்.

கடைசியில் வாதங்கள் முடிந்த பிறகு லோகியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொன்ன நேரு "இருபது ஆண்டுகளுக்கு பிறகு லோகியாவின் பேச்சைக் கேட்கிறேன்.அவர் கொஞ்சமும் மாறவில்லை என்பது எனக்கு தெரிகிறது" என்று மட்டும் பதில் சொன்னார். வேறு எதுவும் பேசவில்லை. இருபது வருடமாகிறது இன்னும் நீங்கள் வளரவில்ல என்பதை நாகரீகமாக சொன்னார் நேரு.

அதே போல கலைஞரின் தலைவரான அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.விநாயகம் அண்ணாவை பார்த்து சொன்னார் "Mr Annadurai your days are Numbered" என்று சொன்னார். அனவரும் விநாயகம் மீது கோபப்பட்டார்கள் அவர் அப்படி சொல்லியிருக்கக்கூடாது காரணம் அண்ணா அப்போது உடல் நலம் குன்றியிருந்தார். விநாயகத்தின் பேச்சு அண்ணாவின் உயிருக்கும் பொருந்தும் பதவிக்கும் பொருந்தும் படியான இரண்டு பொருளோடு இருந்தது. அனவரும் கோபப்பட்ட போது அண்ணா விநாயகத்துக்கு சொன்னார். ''Yes my friend vinayakam, but my steps are measured’’ இதுதான் பண்பாடு. இதுமாதிரி பழக்க வழக்கங்கள்தான் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உதவும்.

விஜயகாந்தின் வளர்ச்சியை பற்றி என்ன நினக்கிறீர்கள்? அவர் தேறிவிட்டார் ஆனால் ஆட்சியை பிடிப்பாரா?

திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் செல்வாக்கு இழந்து வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சியினரும் ஒரு தொகுதிக்கு ஒரு கோடிக்கு மேல் செலவு செய்தார்கள். இரண்டு கட்சிகளுக்குமே கூட்டணி இருந்தது. ஆனாலும் கூட திமுக தொண்ணூறு இடங்களிலும் அதிமுக அறுபது இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இரண்டு பேரின் செல்வாக்கும் சரிந்து கொண்டிருப்பதை சட்டமன்ற தேர்தல் காட்டுகிறது.

இருவரின் மீதும் வளர்ந்து வந்திருக்கிற அதிருப்தியை விஜயகாந்த் அறுவடை செய்திருக்கிறார். ஒரு நல்ல மூன்றாவது அணி உருவாகுமானால் நிலைமை வேறுவிதமாக மாறும். மற்றபடி தமிழகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கிற தமிழர்களை பாதிக்கிற தேசிய பிரச்சனைகள் பற்றிய அவரது கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை விஜயகாந்த் இன்னும் வெளியிடவில்லை. வெளியிட்டால் அது பற்றி பேசலாம். அதுதான் அவருடைய நிரந்தரமான வளர்சிக்கு துணையாக இருக்கும் இல்லை பிரமாண்டமாக வளர்ந்த பிறகு கூட விழலுக்கு இறைத்த நீராக போகவும் வாய்பிருக்கிறது.

முன் எல்லா காலத்தையும் விட இலவச திட்டங்களும் கவர்ச்சிகரமான சலுகைகளும் இன்னும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறதே?

நமது மக்களை இன்னும் இலவசங்களை நாடி ஒடும் பிச்சைக்காரர்களாக மாற்றக்கூடாது. அரசாங்கத்தின் வேலை அதுவல்ல. அரசாங்கம் தனது குடிமக்களுக்கு வேலை வாய்ப்பையும் கல்வியையும் அழித்தால் அவரவர் தேவையை அவரவர் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால் இலவச திட்டங்களாலோ காசு கொடுத்தோ மக்கள ஒட்டுப்போடும் மந்தைகளாக இனியும் நடத்த முடியாது என்று கடந்த தேர்தலில் நிரூபித்துவிட்டார்கள். இரண்டு சாராரும் காசு கொடுத்தார்கள் இரண்டு பக்கமும் மக்கள் காசை வாங்கிக்கொண்டு ஒட்டு யாருக்கு போட வேண்டுமோ அவர்களுக்குத்தான் போட்டார்கள். பெரும்பாலான மக்களை இனி இலவச திட்டங்களால் ஏமாற்ற முடியாது.

நன்றி: ஆனந்த விகடன்
நேர்காணல்: டி.அருள்எழிலன்

1 comment:

Anonymous said...

பதிப்பிற்க்கு நன்றி....ஆனால் நெடுமாறன் இன்னும் தெளியவில்லை என்பது இந்த நேர்காணலில் தெளிவாக தெரிகிறது.

//நம்மோட முதல்வர் கலைஞர் ஈழத்தமிழர் பிரச்சனையில் டில்லியின் முடிவுதான் என் முடிவு என்கிறார். நான் எடுக்கிற முடிவை டில்லி செயல்படுத்த வேண்டும் என்றல்லவா முதல்வர் கருணாநிதி சொல்ல வேண்டும்//

இப்படி சொல்வதால் கருணாநிதிக்கு என்ன லாபம்?, பெயர் கிடைக்கும், மக்கள் வாழ்த்துவார்கள் என்றெல்லாம் சொன்னால் அதனால் என்ன பெரிய அனுகூலம்....20ஆவது (ஆசிய பணக்காரரிகளில் இவரது குடும்பத்தின் நிலை) நிலையிலிருந்து 10-15ஆவது நிலைக்கு வர முடியுமா?. அப்படி இருந்தால் சொல்லுங்கள், அவர் எதுவும் செய்வார்.