தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து கொழும்பில் இன்று முழு அடைப்புப் போராட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
இது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு சிறிலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரட்ண கூறியதாவது:
வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற பாலமாக ரவிராஜ் செயற்பட்டார். அமைதிக்காக குரல் கொடுப்போருக்கு விடுக்கப்பட்ட சவால்தான் ரவிராஜ் படுகொலை. தென்னிலங்கை மக்களின் பிரச்சனைக்க்கும் முகம் கொடுத்து போராடியவர் ரவிராஜ். அவருக்கு சிங்கள நண்பர்கள் உண்டு. எஸ்.பி.திசநாயக்க விடுதலைக்காக எம்மோடு இணைந்து போராடியவர். விஜய குமாரதுங்க இழப்பைப் போல் ரவிராஜின் இழப்பை நாம் பார்க்கிறோம். ரவிராஜின் படுகொலையான சிறிலங்காவுக்கு ஒரு கறுப்புப் புள்ளியாக அமைந்துவிட்டது. இந்தப் படுகொலையின் மூலம் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிடுவதற்கான பாதை அமைத்து தரப்பட்டுள்ளது என்றார்.
"ஜனநாயகத்துக்காகப் போராடியவர் ரவிராஜ். தமிழ்த் தேசத்துக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தமையால் தீவிரவாத சக்திகளால் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்" என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
"தமிழ் மக்களின் அபிலாசைகளை சிங்களவர்களுக்கு சிங்கள மொழியில் தெரிவித்து போராடிய எமது சமூகத்தின் ஒரு தலைவரை நாம் இழந்துவிட்டோம்" என்று பிரதி அமைச்சரான மலையக மக்கள் முன்னணியின் பி. ராதாகிருஸ்ணன் கூறினார்.
"குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் என வடக்கு - கிழக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். பொறுப்புள்ள விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்" என்றார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஆர்.யோகராஜன்.
"தீவிரவாத சக்திகளுடனான உறவை மகிந்த ராஜபக்ச துண்டித்துக் கொள்ள வேண்டும்" என்று புதிய இடது முன்னணி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தி.மகேஸ்வரன் (ஐக்கிய தேசியக் கட்சி), சுரேஸ் பிரேமச்சந்திரன், கே.ஏ.பைஸ் (முஸ்லிம் காங்கிரஸ்), போருக்கு எதிரான முன்னணியின் குமார் ரூபசிங்க உள்ளிட்டோர் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றனர்.
பொரளை றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ள மாமனிதர் ரவிராஜின் உடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு நகர சபை மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட அமைப்புகள், தொழிற்சங்கத்தினர் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
கொழும்பில் இன்று பிற்பகல் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
கொழும்பில் முழு அடைப்பை நடத்த அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் என்றும் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்றும் போருக்கு எதிரான முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
ரவிராஜாவின் உடல் நாளை செவ்வாய்க்கிழமை யாழ். சாவகச்சேரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்களின் இறுதி வணக்கத்துக்குப் பின்னர் நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாக ரவிராஜ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நன்றி>புதினம்.
Monday, November 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment