Tuesday, November 21, 2006

மக்களையும் புலிகளையும் பிரித்துப் பார்தலாகாது.

-ஜூனியர் விகடன்-குல்தீப் நாயர்.

இலங்கைத் தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிரித்துப் பார்ப்பது யதார்த்தத்துக்கு ஒத்துவராது என்று மூத்த இந்திய ஊடகவியலாளர் குல்தீப் நாயர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

தமிழகத்துக்குப் பொருளாதார ரீதியில் நிறைய பெற்றுக் கொடுத்திருக்கிறது தி.மு.க. ஆனால், இலங்கைப் பிரச்னை போன்ற மிக முக்கிய பிரச்னைகளில் மாநில அரசால் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. மத்திய அமைச்சரவையில் அவர்கள் அங்கம் வகிப்பது ஒரு காரணம். அடுத்து தாங்கள் எடுக்கும் முடிவுகள் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகி விடுமோ என்கிற பயம். இலங்கைப் பிரச்னையில் தைரியமாக முடிவெடுக்காத வரையில் அது தமிழகத்துக்கு பெரும் பின்னடைவாகத்தான் இருக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அங்கிருக்கும் மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். இலங்கை அரசு சிங்களவர்கள், தமிழர்கள் என்று இனவிரோதத்தை ஊட்டி வளர்க்கக்கூடாது. பலவிடயங்களிலும் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்ததன் விளைவுதான் தமிழர்கள் ஆயுதமேந்த வேண்டியதாகி விட்டது. சிறிலங்கா அரச பிரதிநிதிகளைச் சந்தித்தபோது மிகத் தெளிவாக நான் இதை எடுத்துக் கூறினேன்.

தீவிரவாத இயக்கமாகத்தான் புலிகளை இந்திய அரசாங்கம் பார்க்கிறது. ஆனால் அப்படி பார்க்க வேண்டியதில்லை. காரணம், இலங்கைப் பிரச்னையில் இருந்து இந்தியா ஒதுங்கியிருப்பது இந்தியாவுக்கு பிராந்திய ரீதியிலான பிரச்னையாக உருவெடுக்கும். விடுதலைப் புலிகளின் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும். இலங்கையில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இந்தியா எடுத்து வைக்கிற முதல் அடியாக அது இருக்கும். தமிழ் மக்களையும் புலிகளையும் பிரித்துப் பார்ப்பது யதார்த்தத்துக்கு ஒத்துவராது என்றார் அவர்.
நன்றி>புதினம்.

1 comment:

மாசிலா said...

நல்ல பதிவு.
சரியான கருத்து.
இந்திய அரசாங்கம் இப்போதாவது செவிசாய்க்கும் என நம்புவோம்.
எவ்வளவு விரைவில் இது சாத்தியமோ, அவ்வளவுக்கும் தமிழர்கள் உயிர் பாதுகாக்கப்படும்.
நம்பிக்கை வீண்போகாது.
இலங்கை தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என்றென்றுன் எங்களது ஆதரவு.