Saturday, November 25, 2006

சிறிலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானம் ஒத்திவைப்பு.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஐ.நாவின் மனித உரிமை சபையில் ஐரோப்பிய ஓன்றியத்தால் கொண்டுவரப்படவிருந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மனித உரிமை மீறல்களை கட்டுப்படுப்படுத்துவதற்கும் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கும் மார்ச் மாதம் வரை சிறிலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பிய ஒன்றிய தலைமை பொறுப்பை வகிக்கும் பின்லாந்து தான் இந்த தீர்மானத்தை ஐ.நாவில் சமர்ப்பிக்க முயற்சித்து வருகிறது.

கடந்த செப்ரெம்பர் மாதம் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற, பின்லாந்து முயன்றபோது சில ஆசிய நாடுகளும், அரபு நாடுகளின் கூட்டமைப்பும் சிறிலங்கா அரசுக்கு சார்பாக இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையால் அன்று இந்த தீர்மானம் பிற்போடப்பட்டிருந்தது.

படுகொலைகள், காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தமக்கு சிறிது கால அவகாசம் தரும்படி அண்மையில் சிறிலங்கா அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: