Monday, November 27, 2006

தமிழீழத் தனியரசுதான் தீர்வு-தேசியத் தலைவர் பிரபாகரன்.


தமிழீழத் தனியரசுதான் தீர்வு- சர்வதேசம் ஆதரிக்க வேண்டும்- தமிழ்நாட்டு ஆதரவு தொடர வேண்டும்: தேசியத் தலைவர் பிரபாகரன்.

அமைதி போதித்த நாடுகள் தங்களது மௌனத்திற்குள் தம் மனச்சாட்சியினைப் புதைத்திருக்கும் வேளையில் தமிழர் தாயகத்தின் மீது பாரிய அவலம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. பிரதான பாதைகளை மூடி தமிழ் மக்களை அவர்களது சொந்த நிலத்திலேயே சிறையிட்டு வைத்திருக்கின்றது சிங்கள அரசு. அம்மக்களது நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி, இதன் மூலம் அவர்களது சமூக வாழ்வினைக் கட்டுப்படுத்தி அவர்களது சுதந்திரத்தினை இல்லாமற்செய்து அவர்களை அதற்குள் கொடுமைப்படுத்தி வருகின்றது. சிங்கள அரசாங்கம் தமிழர் தாயகத்தினைத் துண்டாடி, இராணுவ முகாம்களை அமைத்து, முட்கம்பிகள் மூலம் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, அதனையொரு மாபெரும் மனித வதைமுகாமாக மாற்றியிருக்கின்றது.

சிங்கள அரசாங்கம் இராணுவ மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு முனைகளிலும் எம்மக்கள்மீது போரினைத் திணித்திருக்கின்றது. முன்னொருபோதுமே நிகழ்ந்திராத வகையில் எங்களது மக்கள் அவர்களது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்: எண்ணுக்கணக்கற்ற கைதுகள், சிறைவைப்புக்கள், அடித்துத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குதல், பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் கொடுமைகள், படுகொலைகள், காணாமற் போதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் என்பன தங்குதடையின்றி நடந்துகொண்டிருக்கின்றன. மறுமுனையில் எமது மக்கள் பொருளாதாரத் தடை, உணவு, மருத்துவம், போக்குவரத்து மற்றும் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களுக்குமான தடை ஆகியவற்றுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தநிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள், மற்றும் பொறுமையுடன் அமைதி காத்த ஐந்து ஆண்டுகள் ஆகியவற்றிற்குப் பின்னரும் சமாதானத்தின் பலன்கள் எமது மக்களுக்குக் கிட்டவில்லை. தாங்கமுடியாத சுமைகளை எம் மக்கள் அவர்களது நாளாந்த வாழ்வில் எதிர்கொள்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு, பிணிகளுடனும், பசியுடனும் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களது மக்களுக்கு உணவையும் மருந்தையும் மறுத்து, அவர்களைப் பட்டினிச் சாவு நிலைக்குகள் கொண்டுசெல்லும் சிங்கள அரசாங்கம் எமது மக்களுக்கு இரக்கத்தினைக் காட்டி அவர்களது அரசியல் உரிமைகள் வழங்கும் என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனமேயன்றி, வேறொன்றுமல்ல.

அறிவியலில் ஏற்பட்டுவரும் அதீத வளர்ச்சியும், அதனால் ஏற்பட்ட உலகப் பார்வையும் புதிய யுகத்திற்குள் மனித இனத்தினைக் கொண்டுசெல்கின்றது. அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப சிந்தனையும், கருத்துக்களும், சித்தாந்தங்களும் மாற்றங்களுக்கு உள்ளாகி, சமூகப் புறநிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆயினும், சிங்கள தேசத்திலோ அதன் சிந்தனைகள், சித்தாந்தங்களிலும் சரி, அல்லது அதன் சமூக உலகிலும் சரி எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சிங்கள தேசம் புதிய காற்றைச் சுவாசித்து, புதிதாகச் சிந்திப்பதற்கு மறுத்துக்கொண்டிருக்கின்றது.

சிங்கள தேசம் அதன் பண்டைய இதிகாசமான மகாவம்சக் கருத்துக்களின் தவறான பிரயோகங்களால் தொடர்ந்தும் வழிதவறிச்சென்று, அதனால் உருவாக்கப்பட்ட பேரினவாத கருத்துக்களுக்குள் மூழ்கிக்கிடக்கின்றது. இந்தப் பொறிக்குள் இருந்த தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல், சிங்கள பௌத்த பேரினவாதப் போதனைகளை அதன் பிரதான தேசிய சித்தாந்தமாகப் பின்பற்றி வருகின்றது. இந்தப் போதனைகள் அதன் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், இன்னும் ஏன் அதன் ஊடகங்களிலும் கூடப் பரவியிருக்கின்றது. சிங்கள பௌத்த பேரினவாதப் போதனைகளின் இந்த ஆதிக்கம் அதன் மாணவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என்போரை அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக சிந்திக்கவிடாமல் செய்திருக்கின்றது. துரதிஸ்டவசமாக தமிழர்களின் தேசியப் பிரச்சினையினை நாகரீகமான முறையில் தீர்ப்பதற்கு சிங்களத் தலைவர்கள் உண்மையான முயற்சிகள் எடுப்பதை இது தடுத்துவருகின்றது.

எமது விடுதலை அமைப்பும் சரி, எமது மக்களும் சரி ஒருபோதுமே போரை விரும்பியதில்லை. எமது மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அமைதிவழி அணுகுமுறையினையே எப்போதும் விரும்பினோம். அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் எப்போதும் தயங்கியதில்லை. இதனால்தான் திம்புவில் ஆரம்பித்து ஜெனீவா வரை பல்வேறு தடவைகள், பல்வேறு நேரங்களில், பல்வேறு நாடுகளில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம். நோர்வேயின் அனுசரணையோடும், சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்தோடும் பல்வேறு நாட்டுத் தலைநகரங்களில் நடைபெற்றுவரும் தற்போதைய அமைதி முயற்சிகள் முற்றிலும் வித்தியாசமானவை.

ஒக்ரோபர் 31, 2000 இல் அப்போதைய நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் வன்னிக்கு விஜயம் செய்து, எங்களைச் சந்தித்ததுடன் இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகியது. முற்றிலும் வித்தியாசமான காலகட்டத்தில், வித்தியாசமான வரலாற்றுச் சூழலில், வித்தியாசமான வடிவத்தில் வித்தியாசமான பாதையில் இந்த அமைதிப் பயணம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சமாதானத்தை நோக்கிய முயற்சிகள், சிங்கள அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புப்போர் என இரண்டு முனைகளில் இது நகர்ந்துகொண்டிருக்கின்றது.
நாங்கள் அமைதி காத்த ஆறு ஆண்டுகளில், எங்களது முயற்சிகளில் நாங்கள் நேர்மையாகச் செயற்பட்டோம். உண்மையில், அமைதி முயற்சிகளை நாங்களே ஆரம்பித்தோம்.

ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தினைப் பிரகடனப்படுத்தி அமைதி முயற்சிகளுக்கான வலுவான அடித்தளத்தினை நாங்கள் அமைத்தோம். அமைதிப் பேச்சுக்களுக்கு நாம் எவ்வித நிபந்தனைகளையோ காலக்கெடுக்களையோ விதிக்கவில்லை. இந்த முயற்சிகளை பலவீனமான நிலையிலிருந்துகொண்டு நாங்கள் மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பினையும், இயக்கச்சி-ஆனையிறவு இராணுவக் கூட்டுப்படைத் தளத்தினையும் நாங்கள் மீளக் கைப்பற்றினோம். சிங்கள இராணுவத்தின் அக்கினிக் சுவாலை படைநடவடிக்கையினை நாங்கள் தோற்கடித்தோம். எங்களது போராட்ட வரலாற்றில் பாரிய இராணுவ சாதனைகளை நாங்கள் ஈட்டினோம். இந்தப் பலமான நிலையில் இருந்துகொண்டுதான் நாங்கள் இந்தச் சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம்.

தென்னிலங்கையின் நிலைமையோ முற்றிலும் மாறானதாக இருந்தது. அடுத்தடுத்துத் தோல்விகளை எதிர்கொண்ட தென்னிலங்கை போரை எதிர்கொள்வதற்கான மனோதிடத்தினை இழந்துகொண்டிருந்தது. இராணுவத்தின் முதுகெலும்பு முறிந்திருந்தது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமானதாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் சிங்கள தேசம் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டது. அமைதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு வந்த இந்த ஐந்து ஆண்டுகளில், விக்கிரமசிங்க, பண்டாரநாயக்கா, ராஜபக்ச என மூன்று அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தடவையும் அரசாங்கம் கூண்டில் அடைக்கப்பட்ட அமைதிப் புறாவினை ஒரு கூண்டுக்குள் இருந்து மற்றொன்றுக்கு மாற்றியதேயொழிய சுதந்திரமாகப் பறந்துசெல்ல அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. கூண்டில் அடைக்கப்பட்டு பலமுறை குத்தப்பட்ட அமைதிப் புறா தற்போது தன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றது.

விக்கிரமசிங்கவுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டபின்னர் அவரது அரசாங்கத்துடன் ஆறு மாதங்களாக நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். முன்னைய சிங்கள அரசுகள் அனைத்தையும் போலவே, விக்கிரமசிங்க அரசாங்கமும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களையும், பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளையும் நடைமுறைப்படுத்தாமல் நேரத்தினை இழுத்தடித்து வந்தது. மக்களது வாழ்விடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறுவதற்கு அதன் இராணுவம் மறுத்தது, அப்பெரிய நிலப்பரப்புக்களை இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து, எமது மக்களிடம் அவர்களது நிலத்தினைத் திருப்பிக் கொடுப்பதற்கு நிரந்தரமாக மறுத்தது. போர் நெருக்கடியினைக் குறைத்து, இயல்பு நிலையினைக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட உபகுழுவும் செயலிழந்து போனது. மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட உபகுழுவும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளால் பலமிழந்துபோனது.

எமது மக்களது மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மறுத்த விக்கிரசிங்க அரசாங்கம் எமது அமைப்பினை உலகின் அரங்கில் ஓரங்கட்டுவதற்கு இரகசியமான முறையில் செயற்பட்டது. தமிழர் தாயத்தில் முறையான நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னரே தென்னிலங்கையில் செலவுசெய்வதற்கான நிதியினைப் பெற்றக்கொள்வதற்கென நன்கொடையாளர் மாநாடுகளை அது நடாத்தியது. வோசிங்டனில் நடாத்தப்பட்ட நன்கொடையாளர் மாநாட்டில் நாம் பங்குபற்றுவதற்கான வழிவகைகளைச் செய்யத் தவறிய விக்கிரமசிங்க அரசாங்கம் எமது அமைப்பை ஓரங்கட்டி, அவமானப்படுத்தியது. இதன்காரணமாக ரோக்கியோ மாநாட்டினைத் தவிர்ப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். விக்கிரமசிங்க அரசாங்கம் இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சர்வதேச பாதுகாப்பு வலைக்குள் எமது விடுதலை அமைப்பினைச் சிக்கவைத்து, எங்களை அழிப்பதற்கு அது சதி செய்தது.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை நாம் முன்வைத்தபோது, தென்னிலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. குமாரதுங்கா அரசாங்கம் கடிவாளத்தினை எடுத்துக்கொண்டது. எங்களது வரைபின் அடிப்படையில் பேச்சுக்களை நடாத்துவதற்கு மறுத்த அதேவேளையில், அவரது அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி எம்மீது நிழல் யுத்தத்தினைத் தீவிரப்படுத்தியது. இந்தத் துணை இராணுவக் குழுக்களால் தமிழர் தாயகம் வன்முறைக் குருதிக் களமாக மாறியது.

கல்விமான்கள், அரசியல்த் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களுக்கு அமைவாக, சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது போராளிகள் மேற்கொண்டு வந்த அரசியற் பணிகளை நிறுத்தவேண்டிய நிலைக்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். இதன்காரணமாக எமது மக்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொடூரப் பிடியில் தனித்து விடப்பட்டார்கள். இறுதியில் சுனாமி புனர்வாழ்விற்கென அது கையொப்பமிட்ட பொதுக்கட்டமைப்பினைக்கூட சந்திரிக்கா அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது. சிங்கள பேரினவாத போதனைகளுக்குள் இருந்து வெளிவரமுடியாத உச்ச நீதிமன்றம் ஒற்றையாட்சி அரசியலமைப்பினைக் காரணங்காட்டி, முற்றிலும் மனிதாபிமானம் நோக்கங்கொண்ட இந்த உடன்படிக்கையினை நிராகரித்தது.

இந்த நேரத்தில்தான் சிங்கள தேசம் தங்களது புதிய ஜனாதிபதியாக ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது. கடந்த காலச் சிங்களத் தலைவர்களைப் போலவே இவரும் இராணுவ வழித் தீர்விலேயே நம்பிக்கை கொண்டுள்ளார். தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு கடந்த மாவீரர் தின அறிக்கையில் நாம் விடுத்திருந்த இறுதி வேண்டுகோளை அவர் நிராகரித்தார். மாறாக, எமது இயக்கத்தினை அழிக்கும் நோக்கோடு ஒரு வளத்தில் போரை முடுக்கி விட்டிருக்கும் அவர், மறுவளத்தில் அமைதிவழித் தீர்வினைக் காண்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார். போரும் சமாதானமும் என்ற இந்த அணுகுமுறை அடிப்படையில் தவறானது. எந்த அமைப்புடன் பேசித் தீர்வு காணவேண்டுமோ அந்த விடுதலை அமைப்பினை ஓரங்கட்டி அழித்துவிட்டு தீர்வினைக் காண்பது என்பது சாத்தியமற்றது. இது சிங்களத் தலைவர்களின் முட்டாள்தனமேயாகும்.

தனது படைபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கலாம் என ராஜபக்ச அரசு எண்ணுகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து, அரைகுறைத் தீர்வை தமிழர்மீது திணிப்பதற்கு அது விரும்புகின்றது. ராஜபக்ச அரசின் இந்தத் தந்திரோபாயத்தினால்தான், யுத்தநிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துபோய்க் கிடக்கின்றது. எமது நிலைகள் மீது தாக்குதல்களை நடாத்துவோம் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, நடாத்திவரும் ராஜபக்ச அரசு இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குரிய ஈமக்கிரிகைகளை செம்மையாகச் செய்திருக்கின்றது.

ராஜபக்ச அரசின் தாக்குதல்கள் தரை, கடல், வான்தாக்குதல்கள் வரை விரிவடைந்துள்ளன. ராஜபக்ச அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களுக்கு அவை விரும்பியவாறு யாரையும் கொல்வதற்குரிய சுதந்திரத்தினை வழங்கியிருக்கின்றது. தூரநோக்குடன் மாவிலாறில் இருந்தும் சம்ப+ரில் இருந்தும் நாம் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கல்களை சிங்கள இராணுவம் தவறாக மதிப்பிட்டது. தமிழர் நிலப்பரப்புக்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு பெருமளவு ஆயுத பலத்தினைப் பயன்படுத்தி பாரிய வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்தது. இதனால் தமிழர் நிலம் இரத்தபூமியாக மாறியது.

இந்நிலையில்தான் சிங்கள அரசிற்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்குத் தீர்மானித்தோம். கிளாலி மற்றும் முகமாலைய+டாக முன்னேற முயன்ற சிங்களப் படைகள்மீது எமது படைகள் மின்னல் வேகத்தாக்குதல்களை நடாத்தின. கடுமையான இழப்புக்களைச் சந்தித்த எதிரி, தனது படை நடவடிக்கையினைத் தற்காலிகமாகக் கைவிடவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இருப்பினும், தனது இராணுவத் திட்டங்களை சிங்கள அரசு கைவிடவில்லை. தனது இராணுவ வழியினையே அது தொடர்ந்தும் பின்பற்றுகின்றது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ்மக்களை இன அழிப்புச் செய்துவருகின்ற அதேவேளையில், இந்த இன அழிப்பிலிருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்காக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற எமது இயக்கத்தினைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து வருகின்றது. எமது இயக்கத்தின்; மீது அவப்பெயரினை ஏற்படுத்துவதற்கான மோசமான பிரச்சாரத்தினை அது கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது. எமது மக்களது ஏகோபித்த எதிர்ப்பினையும், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஆட்சேபனையினையும் உதாசீனப்படுத்திவிட்டு, ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களுக்குச் இசைந்து எமது அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன. எங்களை விரும்பத்தகாததோராகவும், வேண்டத்தகாதோராகவும் அவர்கள் ஒதுக்கி ஓரங்கட்டினர்.
நீதி, நியாயங்களைப் பற்றிச் சிந்திக்காது அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசுடன் எமக்கிருந்த சம பங்காளி மற்றும் படைவலுச் சமநிலையினை இது கடுமையாகப் பாதித்தது. சிங்கள அரசு கடும்போக்கினைக் கடைப்பிடிக்க இது ஊக்கப்படுத்தியது. இது இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினைப் பலவீனப்படுத்தியதுடன், சிங்கள அரசின் போர்த் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது. சமாதான முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில நாடுகள், சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனஅழிப்புத் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியது மட்டுமன்றி, சிங்கள அரசின் போர்த் திட்டங்களுக்கு ஆதரவாக இராணுவ மற்றும் நிதியுதவிகளையும் செய்துவருகின்றது. இந்த புறநிலைகள்தான் ராஜபக்ச அரசாங்கம் தமிழர் நிலங்கள் மீது முழுத் திமிருடன் தனது கொடூரமான படை நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தினைக் கொடுக்கின்றன.

தனது இராணுவப் போக்கில் நம்பிக்கை கொண்டிருப்பதன் காரணமாக ராஜபக்ச அரசு சமாதானப் பேச்சுக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சமாதான முயற்சிகளில் அதற்குள்ள அக்கறையின்மை காரணமாக இரண்டு ஜெனீவாப் பேச்சுக்களும் ஆக்கப+ர்வமானதாக அமையவில்லை. முதலாம் கட்டப் பேச்சுக்களில் இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் கூட்டுச்சேர்ந்து செயற்படுவதை ஆதாரங்களோடும் புள்ளிவிபரங்களோடும் சம்பவக் கோர்வைகளோடும் பேச்சுமேசையில் சமர்ப்பித்தோம். இச்சான்றுகளை மறுக்கமுடியாத சிறிலங்கா அரசு ஒட்டுக் குழுக்களை தமிழர் தாயகத்தில் இருந்து அகற்றி யுத்த நிறுத்த சரத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டது. எவ்வாறெனினும் முதலாவது ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் ஒரேயொரு மாற்றம் மட்டுமே ஏற்பட்டது. அரச மற்றும் ஒட்டுப்படைப் பயங்கரவாதம் தமிழர் தாயகத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டது.

இரண்டாவது ஜெனீவாப் பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடைந்தன. எமது மக்கள் எதிர்நோக்கிய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு இப்பேச்சுக்களில் முன்னுரிமை கொடுத்த நாம் யு-9 பாதை திறக்கப்பட வேண்டும் எனவும், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மேலாக தனது இராணுவ நலன்களை முன்னிலைப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம் இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்தது.

இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இரங்க மறுத்த சிங்கள அரசாங்கம் தானே திட்டமிட்டு, ஏற்படுத்திய மனிதாபிமானப் பிரச்சினையினைக்கு ஒருபோதுமே தனது நிலையில் இருந்து மாறப்போவது கிடையாது. ஒரே நேரத்தில் போரும் செய்வோம் அமைதிப் பேச்சுக்களையும் நடத்துவோம் எனக் குதர்க்கம் பேசுவோர் பேச்சுக்குழுவில் இருக்கும்போது எப்படி அமைதிப் பேச்சுக்கள் முன்னகரும்? எப்படி நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்? எப்படிச் சமாதானம் வரும்?

தன்னை ஒரு அமைதிப் புறாவாகக் காட்டிக்கொள்வதற்காக சனாதிபதி ராஜபக்ச போலியான ஒரு அனைத்துக் கட்சி மாநாட்டினை அரங்கேற்றினார். எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க முடியாமல், கவனம் திசை திரும்பும் வரை நேரத்தினை இழுத்தடிக்க விரும்பினால் விசாரணைக் குழுக்களையோ, பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களையோ அமைத்தல் அல்லது அனைத்துக் கட்சி மாநாடுகள் அல்லது வட்ட மேசை மாநாடு என்பவற்றைக் கூட்டுதல் என்பனவே சிங்களத் தலைவர்கள் காலங்காலமாக மேற்கொண்டுவரும் பெயர்போன அரசியற் பாரம்பரியமாகும். இதனைத் தான் தற்போது ராஜபக்சவும் செய்துகொண்டிருக்கின்றார். தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைக் காணுமாறு நாங்கள் விடுத்த அழைப்பினை நிராகரித்து, அனைத்துக் கட்சி மாநாடு என்ற போர்வைக்குள் அவர் பதுங்கிக்கொண்டுள்ளார். இருட்டறையொன்றுக்குள் கறுப்புப் ப+னையினைத் தேடியலைவதைப் போல, கடந்த பத்து மாதங்களாக இந்த அனைத்துக் கட்சிக்குழு தமிழர் பிரச்சினையினைத் தேடிக்கொண்டிருக்கின்றது.

அனைத்துக் கட்சி மாநாடு தோற்றுப் போனதும், சனாதிபதி ராஜபக்ச இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற தனது அடுத்த துருப்புச் சீட்டினைக் கையிலெடுத்திருக்கின்றார். தென்னிலங்கை மீது ஆட்சி செய்யும் பலத்தினைக் கொண்டிருக்கின்ற இந்த இருபெரும் கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளே. தமிழர்கள் மீது இனஅழிப்பினை மேற்கொள்வதில் ஒன்றையொன்று போட்டிபோட்டு முந்திக்கொள்ளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினூடாக உருவாகியிருக்கும் கட்சிகளே இவை. அமைதிவழித் தீர்வினைக் காணுமாறு சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால், சரிந்துசெல்லும் பொருளாதார நிலைமையினால், அரசியல் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பினால் ஏற்படும் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக ராஜபக்ச அரசால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக சந்தர்ப்பவாத நகர்வே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேர்மையான நோக்கம் எதுவுமே கிடையாது. இந்த இரண்டு கட்சிகளும் தமிழர் பிரச்சினைக்கு நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கப்போவதில்லை. மேற்கூறிய விடயங்களுடன் நின்றுவிடாது, உலகினை ஏமாற்றுவதற்காக ராஜபக்ச அரசு அனைத்துக் கட்சி மாநாட்டினைச் சாகவிடாது நடாத்துவதில் தொடர்ந்தும் அக்கறையினைக் காட்டும்.

எனது அன்பான மக்களே,
நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம்.
தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம்.

இடம்பெயர்ந்து உலகம் பூராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
நன்றி>புதினம்.

No comments: