மட்டக்களப்பு வாகரையில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சபையில் பெரும் இழுபறி, கலகம் ஏற்பட்டது.
இதன் உச்ச கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மேல் அங்கியை கழற்றி எறிந்து விட்டு சபை நடுவே நின்று பெருத்த குரலில் ஆக்ரோசமாக கத்தினார். இதனால் சபையில் பெரும் அமளி-துமளி ஏற்பட்டது.
எனினும், சிவாஜிலிங்கம் கழற்றி எறிந்த மேலங்கியை எடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அதனை ஒருவாறு மீண்டும் சிவாஜிலிங்கத்திற்கு போட்டுவிட்டார்.
நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான சிறப்பு அறிக்கையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வெளியிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டுமென சபையின் நடுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்பு உடைகளை அணிந்தவாறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சபையின் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே குழம்பின.
இதனையடுத்து காலை 10.10 மணியளவில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே, வாகரையில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புமாறும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் 10 பார ஊர்திகளில் வாகரைக்குச் சென்ற உணவுப் பொருட்களை சிறிலங்காப் படையினர் மாங்கேணியில் திருப்பி அனுப்பியதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர், உடனடியாக இப்போதே வாகரைக்கு உணவுப் பொருட்களை 10 பார ஊர்திகளில் அனுப்ப வேண்டுமென வலியுறுத்தினர். அவ்வாறு அனுப்பாவிடில் சபை நடவடிக்கைகள் தொடர இடமளிக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக கூறினர்.
இதனால், நாடாளுமன்ற விவாதத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
கூட்டமைப்பினரின் இந்த ஆர்ப்பாட்டத்தை மீறி சபை நடவடிக்கைகளை தொடர முடியாமல் போனதால், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பாக உரையாடினார்.
கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டமைப்பினருடன் இடையிடையே சபையின் நடுவே வந்து உரையாடினர்.
இதனையடுத்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அரச மேல் மட்ட உயரதிகாரிகளுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு 3 பார ஊர்திகளில் உணவுப்பொருட்களை அனுப்புவதாக கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.
ஆனால், அதற்கு உடன்படாத கூட்டமைப்பினர் 10 பார ஊர்திகளில் உணவு அனுப்பப்பட்டாலே சபை நடவடிக்கைகளை குழப்ப மாட்டோமென தெரிவித்ததால் மீண்டும் சபையில் அமளி-துமளி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அமைச்சர் ஜெயராஜ் தொலைபேசியில் உரையாடி விட்டு மட்டக்களப்பிலிருந்து 10 பார ஊர்திகளில் உணவை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளதாக கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.
எனினும், ஆர்ப்பாட்டத்தை கைவிடாத கூட்டமைப்பினர், மட்டக்களப்பு அரச அதிபர் ஆர்.புண்ணியமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு 10 பார ஊர்திகளுடனான உணவுப்பொருட்களும் மாங்கேணி படை முகாமை கடந்தபின்னர் தமக்கு இது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்றும் அதுவரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக கூறினர். அமைச்ர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் மட்டக்களப்பு அரச அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார்.
இந்த ஆர்ப்பாட்டம், இழுபறிக்கு மத்தியில் சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியதால் அங்கு பெரும் கலகம் ஏற்படும் நிலை தோன்றியது. கூட்டமைப்பினர், சபாநாயகரை நோக்கி பாய்ந்து சென்று அவரது மேசையில் தட்டி சபை நடவடிக்கைகளை குழப்பினர். சபாநாயகரை நோக்கி கூட்டமைப்பினர் பாய்ந்ததையடுத்து ஜே.வி.பி.யினரும் அவ்விடத்திற்கு சென்றதால் இழுபறி ஏற்பட்டது.
இந்நிலையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மேல் அங்கியை கழற்றி எறிந்து விட்டு ஆவேசமாக காணப்பட்டார்.
இத்தனைக்கும் மத்தியில் சபை நடவடிக்கைகள் நடைபெற்றன.
இறுதியில், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய (நேற்று) ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சபை நடவடிக்கைகள் அமைதியாக நடந்தன.
ஆதாரம்: வீரகேசரி.
Saturday, November 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment