தலைகள் கவலை தெரிவிக்க, வால்கள் கண்டனம் செய்கின்றன. வாகரை இனப்படுகொலையோடு, மாமனிதர் நடராஜா ரவிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதலானது, சர்வதேச சமூகத்தை நிலை தடுமாற வைத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினூடாக கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றது மேற்குலகம்.
இவர்களால் இதற்குமேல் ஒரு அடிகூட நகரமுடியாது. இவ்வளவு காலமும் நடந்த இன அழிப்பிற்கு சாட்சியாக இருந்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டினால் உசுப்பேற்றி விடப்பட்ட மகிந்தர், எல்லை மீறிச் செயற்படுவதாக சர்வதேச சமூகம் கவலையடைகின்றது.
மகிந்தரின் கட்டுமீறிய அராஜகச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளின் அடுத்த நகர்விற்கு, எழுதப்படாத அங்கீகாரத்தை வழங்கிவிடுமோ என அச்சமடைகின்றார்கள்.
தமது முன்னிலையில் எழுதப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஒருபுறம் மூட்டை கட்டிவைத்து, நடக்கும் சர்வதேச அங்கீகாரமற்ற சமர்களின் மூலம் விடுதலைப் புலிகளும், மக்களும் பலவீனமடைவார்கள் என்று போட்ட கணக்கு தப்பாகிப் போவதை இப்போது இவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
எதிர்வரும் டிசம்பருக்குள் யாழ். குடநாட்டிற்கான பொருளாதார முற்றுகை, பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
இந்நிலையில் குடாநாட்டு மக்களை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க, விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் மீது வலிந்த தாக்குதல்களைத் தொடுத்தால், விடுதலைப் புலிகள் மீது கண்டனம் தெரிவிக்க எவ்விதமான நியாயப்பாடுகளும் அற்றுப் போகலாம் என சர்வதேசம் கவலை கொள்கின்றது.
அதேவேளை, விடுதலைப் புலிகளைச் சினம் கொள்ளச் செய்ய, அடுக்கடுக்கான இன அழிப்புக்களை மேற்கொண்டாலும், இராணுவ இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயத்தினை மகிந்தர் விரும்பவில்லை.
பதிலடி நடவடிக்கையாக, விடுதலைப் புலிகள் எதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்த்தாரோ, அது நடக்கவில்லை.
ஆதலால் தனது இன அழிப்பு நடவடிக்கைகளை மென்மேலும் அதிகரிக்க முயல்கின்றார். உலகத் தடைகள் மூலம் பெற்ற உற்சாகத்தால், ஆரம்பித்து வைக்கப்பட்ட படுகொலைகள் தற்போது அதியுச்ச நிலையை அடைந்துள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் திடமாகக் கூறியது போன்று, இந்த சர்வதேசத்தின் கவலைகளும், கண்டனங்களும் இனப்படுகொலைகளை நிறுத்த முடியாது.
சிறிலங்கா இராணுவம், தமிழ்ச் சிறார்களை பலவந்தமாக தமது படையணிகளில் இணைத்து வருகின்றார்கள் என்று ஐ.நா. சபையின் பிரதிநிதி திடுக்கிடும் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மகிந்தர் மேற்கொள்ளும் சிறார் படைச்சேர்ப்பு விவகாரத்திற்கு எதிர்வினையாக இது அமைந்துவிட்டது.
மகிந்தரை சுற்றிப் போடப்படும் இவ்வகையான மனித உரிமை மீறல் வியூகங்கள், அவரின் அதீத இனவெறிச் செயற்பாடுகளை தணியச் செய்யும் என சர்வதேசம் எதிர்பார்க்கின்றது.
உடனடியாக வேகத்தடை போடாவிட்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் விபரீத விளைவுகளை உருவாக்கலாம். அது குறித்தான தயக்கமே இப்போது சர்வதேசத்தின் வெளிப்பாடாக உள்ளது.
மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலையானது சர்வதேச கண்டனங்களுக்குள்ளான வாகரைப் படுகொலைகளை திசை திருப்பும் மகிந்த சிந்தனையாக இருக்கலாம்.
இனி நடக்கப்போகும் எதிர்விளைவுகளை கவலையுடன் மௌனமாக கண்காணிப்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாக இருக்கப்போகின்றது.
இவ்வாறான அசைவற்ற நிலைக்கு சர்வதேசம் தள்ளப்பட வேண்டும் என்பதையே விடுதலைப் புலிகளும் எதிர்பார்த்தார்கள்.
இனி பொது எதிரியை கையாள்வது சுலபமாக அமையலாம்.
நன்றி>புதினம்.
Tuesday, November 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment