Tuesday, November 21, 2006

விடுதலைப்புலிகள் உண்மையான விடுதலைப்போராட்ட வீரர்கள்.

"சிலிங்கோ" லலித் கொத்தலாவல.

தமிழீழ விடுதலைப் புலிகள் உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று சிறிலங்காவின் பிரபலமான "சிலிங்கோ" கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

துபாய்க்குச் சென்றிருந்த போது "கல்ஃப் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல் விவரம்:

ஆழிப்பேரலை ஏற்பட்டிருந்த பொதுமக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் எமது காப்புறுதி நிறுவனம் பல பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. நாம் அந்த மக்களை கைவிடமாட்டோம் என்று தெரிவித்திருந்தோம். ஒவ்வொரு நகரத்துக்கும் நாங்கள் சென்றோம். வடக்கு கிழக்குக்கும் சென்றோம். தமிழீழ் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு அழைக்கப்பட்டேன். நான் அனுமதிக்கப்பட்டேன் அல்லது அவர்களது வீடுகளில் வரவேற்பளித்தனர். நாங்கள் உட்கார்ந்து பேசினோம்.

ஆழிப்பேரலையின் போது 100 மீற்றர் கடல் வலய பாதுகாப்புச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டு வந்தது. அது தவறானது. அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன். அரசாங்கத்தின் சட்டத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையிலும் சட்டத்தை மீறித்தான் நாம் வீடுகளை கட்டியுள்ளோம். அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஒரு நல்ல செயலைத்தானே செய்கிறோம்.

ஆழிப்பேரலையானது அமைதி முயற்சிகளை மேற்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக அரசாங்கத்துக்குக் கிடைத்தது. சர்வதேசம் அளித்த பெரும் நிதியானது சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட செயற்பாடுகளால் விடுதலைப் புலிகளைச் சென்றடையவில்லை. வடக்கு - கிழக்கானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

சிறிலங்காவின் அரசியலில் தற்போது இரு பிரதான கட்சிகளும் இணைந்திருப்பது நன்மை தரக்கூடியது. அந்த இரு கட்சிகளும் நாட்டின் 80 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்டவை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தின் அணுகுமுறையிலும் மாற்றம் வர வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களின் மக்களுக்கு பாரிய சேவையாற்றுகின்றனர். அவர்களை நீங்கள் முற்றாக பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது. அவர்கள் உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்கள். சுய அரசாங்கத்துக்கு அப்பாலான ஒரு கட்டமைப்பு குறித்து விவாதிக்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கையானது இஸ்ரேலிய கொள்கையாகும். அது சரியல்ல. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்றால் உலகம் முழுமையும் கண்ணற்றோராகவும் பல்லற்றோராகவும்தான் இருப்பர் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். நாம் அவர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. நாம் அதிகாரப் பகிர்வு அல்லது கூட்டரசு அல்லது சுயாட்சி பற்றி பேச வேண்டும்.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராக நான் இருந்தபோதும் சிறிலங்காவின் பெரிய நிறுவனத்தை வைத்திருக்கிறோம். எனக்கு பிரச்சனைகள் வந்துள்ளன. மத மாற்றம் செய்வதாக என் மீது குற்றம்சாட்டப்பட்டது. பௌத்த இனவாதிகளால் பல முறை நான் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: