Sunday, November 05, 2006

அடுத்த கட்ட பேச்சுக்கு ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும்:

அமைதிப் பேச்சுக்கள் அடுத்த கட்ட நிலையில் நடைபெற வேண்டுமெனில் ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழாக்கம்:
கடந்த காலங்களின் அனுபவங்களிலும் இருநாட்கள் நடைபெற்ற அண்மைய ஜெனீவாப் பேச்சுக்களினூடாகவும் சிறிலங்கா அரசாங்கமானது எதுவித தெளிவான, உறுதியான திட்டமிடல்களுடன் பேச்சுகு வரவில்லை. ஜெனீவா-2 பேச்சுக்களில் நாம் எதனையும் புதிதாக முன்வைக்கவில்லை. முன்னைய ரணில் அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரதான சரத்தான ஏ-9 பாதையைத் திறக்க வேண்டும் என்று கோரினோம். ஏனெனில் யாழ். குடாநாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ எதுவித விளக்கம் தராமல் அல்லது ஏ-9 பாதை மூடப்பட்டமைக்கான நியாயமான காரணங்களைக் கூறாமல் ஒரு இறுக்கமான நிலையையே கடைபிடித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏ-9 பாதை திறக்கப்படவில்லை என்று சிறிலங்கா தரப்பினர் தெரிவித்தனர். இருப்பினும் கண்காணிப்புக் குழுவினருக்கான பாதுகாப்பு உத்திரவாதங்களை வழங்க நாம் முன்வந்தோம். ஆகையால் ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும். ஏ-9 பாதையையே திறக்க மறுக்கும் சிறிலங்கா தரப்பினால் எப்படி இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை உருவாக்க முடியும்? என்பதுதான் எமது சந்தேகம்.
முதல்நாள் பேச்சுக்களின் போதே நாம் அரசியல் தீர்வுக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறிலங்கா அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து சிறிலங்கா தரப்பு தெரிவித்தது. அதனை நாம் வரவேற்றோம்.
எமது நல்லெண்ண வெளிப்பாடுகளை நாம் வெளிப்படுத்திய போதும் மனிதாபிமான பிரச்சனைகளை முன்வைத்தோம். யாழ்ப்பாணத்தில் 6 இலட்சம் மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினோம். அவர்களுக்கு அரிசி மற்றும் மா மட்டுமே வழங்கப்பட்டு வருவதையும் கூறினோம். ஆனால் அரசாங்கத் தரப்பினரோ கப்பல்கள் மூலம் உனவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்தனர். இதர தமிழ் மாவட்டங்களில் வாழும் உறவுகளுடன் யாழ். மக்கள் தொடர்பு கொள்வது முக்கியமானது. அது பாரிய சமூகப் பிரச்சனை. தந்தை ஓரிடத்திலும் மகன் ஓரிடத்திலுமாக உள்ள நிலையில் உறவுகளின் தொடர்பு அவசியமானது என்றும் விளக்கினோம். ஆனால் ஏ-9 பாதை மூடப்பட்டமை குறித்து எதுவித காரணத்தையும் அரசாங்கம் கூறவில்லை.
பொதுமக்கள் ஏ-9 பாதையை கடந்து செல்வதில் பாதுகாப்புதான் பிரச்சனை எனில் முன்னரங்க காவலரண் பகுதிகளில் எதுவித வன்முறையும் நிகழாத வகையிலான 100 விழுக்காடு பாதுகாப்பை கண்காணிப்புக்குழு மற்றும் அனுசரணையாளர்களுடன் இணைந்து நாம் வழங்குவதாக தெரிவித்தோம். ஆனால் அரசாங்கத் தரப்பில் குறிப்பாக நிமல் சிறிபால டி சில்வா எம்மீது குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்.
அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கான நாட்கள் தொடர்பாக நாம் பேசவில்லை. அதனை நாம் அனுசரணையாளர்களுடன் விவாதிப்போம். ஏ-9 பாதை திறக்கப்படும் நிலையில்தான் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கு நாம் தயாராவோம். எமக்கு பாரிய மனிதாபிமான பிரச்சனைகள் உள்ளன. இப்போது அடுத்த கட்டப் பேச்சுக்களை தீர்மானிப்பது அனுசரணையாளர்கள்தான்.
சிறிலங்கா அரசாங்கத்திடம் இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் ஏதுமிருப்பின் அதனை பேச்சு மேசையில் முன்வைக்கட்டும். இது தொடர்பில் நாம் கேள்வி எழுப்பும்போது அனைத்துக் கட்சி மாநாடு நடைபெறுவதை சுட்டிக்காட்டுகின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் குறித்து வல்லுநர்கள் குழு ஆராய்வதாகக் கூறினர். அந்த விவாதங்களும் மாநாடும் முடிவடைந்த பின்னர் அது பற்றி பேசுவோம் என்று நாம் தெரிவித்துள்ளோம். தென்னிலங்கை கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதால் நிலைமைகள் மாறிவிடாது. என்னுடன் கை குலுக்குவதும் உதவாது. தமிழரின் வரலாற்றில் இப்படியாக பல கை குலுக்களை சிறிலங்கா தரப்பினருடம் நாம் மேற்கொண்டுவிட்டோம். நடைமுறை ரீதியாக அவர்கள் செயற்பட வேண்டும்.
இலங்கைத் தீவில் இப்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் எறிகணைத் தாக்குதல்களும் வான்குண்டுத் தாக்குதல்களும் நாளாந்தம் நடத்தப்படுகின்றன. ஏ-9 பாதையை சிறிலங்கா தரப்பு திறக்க மறுப்பதே நிச்சயமாக பாரிய யுத்த நடவடிக்கைக்காகத்தான். எமது முன்னரங்க நிலைகள் தாக்கப்பட்டால் நாம் பதில் தாக்குதல் நடத்துவோம். யார் வலிந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பதை அறிய கண்காணிப்புக் குழுவினரை சிறிலங்கா தரப்பு அனுமதிப்பதில்லை.
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான சிறிலங்கா அதிஉயர் நீதிமன்றத் தீர்பானது மகிந்த சிந்தனையின் வெளிப்பாடுதான்.
சிறிலங்காவின் ஒவ்வொரு தலைவருக்குமே நாம் சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறோம். யாழில் பாரிய மனித அவலம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் எமது தேசியத் தலைவரின் வருடாந்த கொள்கைப் பிரகடன உரையில் அது பாரதூரமான விடயமாக இருக்கும். மகிந்த ஒரு யதார்த்தவாதியா அல்லது எதிரானவரா அல்லது கடந்த கால சிறிலங்கா தலைவர்களைப் போன்றவரா என்று எமது தேசியத் தலைவர் நவம்பர் 27 ஆம் நாள் தெரிவிக்க உள்ளார் என்பதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

No comments: