பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் இலங்கைக்குச் சென்று இலங்கைத்தீவின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முயற்சி எடுக்கின்றனர். சிக்கலை உருவாக்கியவர்களே அதற்கான முயற்சியை எடுப்பது நல்லதுதான், ஆனால் இலங்கையின் வரலாற்றையும், அங்கு வாழும் இனங்களின் வாழ்வியல்
வேறுபாட்டையும், குறிப்பாக சிங்களத்தின் உளவியலையும் புரிந்துகொள்ளாது தீர்வினைத் தந்ததாக எண்ணிக்கொண்டு, மிகச்சிறந்த சனநாயக அரசமுறையை, அதற்குரிய அரசியல் அமைப்பைத் தயாரித்துக் கொடுத்துள்ளோம் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடன் பிரித்தானியப் பிரதிநிதி சோல்பெரி அவர்கள் 1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்துச் சென்றார்.
மேற்கூறியவாறு வரலாற்றையும், வாழ்வியல் வேறுபாட்டையும், சிங்களத்தின் உளவியலையும் கவனிக்கத்தவறிய அத்தீர்வுத்திட்டத்தால் கடந்த 58 வருட காலத்தில் 24 வருடங்கள் “அவசரகால நிலமையின் கீழ் ஆட்சி நடைபெற்றதும், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதும், 8 இலட்சம் தமிழர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியதும் 1956 – 1983 ற்கு இடைப்பட்ட காலத்தில் பெரும் அளவிலான தமிழின அழிப்புக்கள் 5 தடவைகள் நிகழ்ந்ததும் போன்ற இன்னோரென்ன பல … ஒரு புறமும்,
தமிழ் இனத்தை மேலும் சிறுபான்மையாக்கி அதன் குரலை அடக்கியொடுக்கத் தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றத்தினை முன்னெடுத்துத் தமிழர் தாயகத்தை ஐந்து துண்டுகளாக்க இன்னோர் புறத்தில் நடவடிக்கையும்,
பிரித்தானியாவால் வழங்கப்பட்ட சோல்பெரி அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு இருந்த பாதுகாப்பை உதாசீனம் செய்து (சரத்து 29) சட்டங்களை இயற்றியதுடன் 1972ல் அந்த அரசியல் யாப்பையே அகற்றியதன் மூலம் சட்டத்தின் போர்வையையும், சனநாயத்தின் போர்வையையும் போர்த்துக்கொண்டு மேலும் இன அடக்குமுறையையும் அழிப்பு முறையையும் இன்றுவரை செய்து வருவது மேலும் ஒரு புறமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இத்தகைய பல இனஅழிப்பு நிகழ்வுகளை இலங்கைத்தீவில் சனநாயக அரசு என்ற போர்வையில் சர்வதேசத்தின் ஆதரவுடன் இன்றுவரை சிங்களம் றிறைவேற்றவும் இலங்கைத்தீவில் சுதந்திரமான நாட்டையும், அரசையும் கொண்டிருந்த தமிழினம் நிரந்தரமாக ஆழப்படும் இனமாகவும் சிங்களம் ஆழும் இனமாகவும் மாறக்கூடியதாகவும் பிரித்தானியா தந்த அரசியல் அமைப்பு முறை இருந்துள்ளது என்பதுடன் அதுவே இன்றைய சிக்கலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதனையும் இன்றைய பிரித்தானிய பிரதிநிதிகள் அறிந்து கொள்ளவேண்டும்.
பிரித்தானிய பிரதிநிதிகள் அறிந்துகொள்ள வேண்டிய இன்னோர் பக்கமும் உண்டு. 1948ல் பத்து இலட்சம் இந்திய வம்சாவழியினரின் வாக்குரிமையைப் பறித்தது, 1956ல் தனிச்சிங்களச்சட்டம், 1972ல் குடியரசு (புதிய அரசியல் யாப்பு) போன்ற அரசியல் யாப்பி;ற்குப் புறம்பான சட்டங்களை இயற்றும் வல்லமை கொண்டது சிங்கள அரசு என்பதனையும் கொண்டு மனதிற் கொள்ளல் வேண்டும்.
சிங்களத்தின் மேற்கூறிய சகல நடவடிக்கைகளின் போதெல்லாம் தமிழர் பிரதிநிதிகள் சனநாயக வழியில் நடத்திய போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் எதுவித பயனும் அழிக்காத நிலையில் 1970 ஆனியில் சிங்களவர் கொழும்பு நவரங்காலில் கூடியது போன்று. 1977 வைகாசி மாதம் தமிழர் வட்டுக்கோட்டையில் கூடி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக “தமிழீழத் தனிஅரசை” அமைக்க 1977ல் பொதுத்தேர்தலில் தமிழ்மக்களிடம் வாக்குக்கேட்டு 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆதரவைப் பெற்று “தமிழீழ அரசை” அமைப்பதற்காக மக்களின் ஆணையைப் பெற்றுள்ளனர்.
இப்பிரகடனத்தில் தமிழீழக்குடியரசு, தமிழீழ நிலப்பரப்பு, தமிழீழக்குடிகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
மக்களின் இச்சனநாயகத் தீர்வின் அடிப்படையிலேயே ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இன்று தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் தாம் ஏற்றுள்ளதை பலமுறை உலகிற்கு ஈழத்தமிழ் மக்கள் காட்டியுள்ளனர், இருப்பினும் குறிப்பாக 2004 சித்திரை மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதனைத்தமிழர் கூட்டணியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வைத்து தமிழ்மக்களின் ஆணைக்கு விட்டனர் அதிலும் 90 வீதத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர்.
எனவே சனநாயகத்தை மதிக்கும் மேற்குலகம் 1977ல் தமிழீழத்திற்காகத் தமிழர்கள் சனநாயக வழியில் தெரிவித்த தமது உடன்பாட்டையும், 2004ல் அதன் அரசாக விடுதலைப்புலிகளையும், தலைவராக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனை ஏற்றுக் கொண்டுள்ளதையும் விளங்கிக் கொள்ளல் அவசியமாகிறது.
எனவே இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டத்தை நோக்கும் எவரும் இலங்கையில் இரண்டு நாடு, இரண்டு அரசு இருந்தன என்பதையும்,
1977லும், 2004லும் தமிழ் மக்கள் சனநாயகவழியில் தெரிவித்த தமது ஆணையைப் புறந்தள்ளிவிட்டு ஆராய்வதோ, முன்னெடுப்பதோ ஒருபோதும் நிரந்தரத்தீர்வைத் தராது என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஈழத்தமிழர் இறைமைக்கான போராட்டம் இன்று சர்வதேச மயமாகிவிட்ட நிலையில் எமது மக்களின் சனநாயக வழித் தீர்மானத்தை (1977லும், 2004லும் மக்கள் அளித்த தீர்ப்பை) உலகிற்குப் பிரகடனப்படுத்தும் பொறுப்பு விடுதலைப்புலிகளிடம் உண்டு.
இலங்கைத்தீவில் கடந்த 50 வருடத்தில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கொலை செய்யப்பட்டமை, பல ஆயிரக்கணக்னான வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டமை, பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்செயலிற்கு ஆளாக்கப்பட்டமை போன்ற பலவகைப்பட்ட இன அழிப்புகளுக்கு எதிராக எவரையும் தண்டிக்காத ஒரு அரசு எவ்வாறு தமிழ்மக்களையும் தமது குடிமக்களாகப் பார்க்கும்? அவ்வாறான பார்வை இருந்திருப்பின் மலையகத்தமிழர்களின் குடியுரிமை பறித்தது முதற்கொண்டு தமிழ் இனத்தினத்திற்கு எதிரான பல சட்டங்களை எவ்வாறு இயற்றும்? 1970 – 1972ல் குடியரசுக்கான யாப்பை எழுதும்போது தமிழர் பிரதிநிதிகள் கொடுத்த ஒரு திருத்தத்தைத் தானும் ஏற்கவில்லையே!
சிங்களத்தின் வெறும் வார்த்தைகள் தமிழர் வாழ்வியலைத் தராது என்பதை உணர்ந்தே தமிழர் ஆயதப்போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனை வன்முறை என்று பார்க்கும் உலகநாடுகள் சிங்கள அரசு தமிழினத்தின் மீது இன்றுவரை மேற்கொண்டுள்ள சகல நடவடிக்கைகளையும் எவ்வாறு பார்க்கிறது?
நன்றி>மட்டக்களப்பு ஈழ நாதம்.
Thursday, November 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதிவு நன்றி.
Post a Comment