Wednesday, November 15, 2006

ஐ.நா. வின் குற்றச்சாட்டை கண்காணிப்புக்குழு உறுதி செய்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் வெளியிட்ட அறிக்கையை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃப்ஸ்டொட்டிர் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நா. பிரதிநிதி வெளியிட்ட கருத்து சரியானது. சிறிலங்கா அரச படையினர், தமிழ்ச் சிறார்களைக் கடத்தும் சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை நாங்களும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதனை உறுதிப்படுத்த, கண்காணிப்புக்குழுவிடமும் போதிய ஆதாரங்கள் உள்ளன. கடந்த யூன், யூலை, ஓகஸ்ட் மாதங்களில் மிக அதிகமான சிறார் கடத்தல்களில், சிறிலங்கா இராணுவமும் கருணா குழுவும் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறார்களைக் கடத்தியதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இவற்றில் பல கடத்தல்களின் பின்னணியில் கருணா குழுவும், சிறிலங்கா அரச படையினரும் தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கருணா குழுவுடன் சிறிலங்காப் படையினர் நேரடியாகச் தொடர்புபட்டுள்ளதற்கு பெருமளவு ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. கருணா குழுவுடன் சிறிலங்காப் படைகள் இணைந்து செயற்படுகின்றன.

கருணா குழுவினர், சிறிலங்காப் படையினரின் முகாம்களுக்குள் செல்வதும், வெளியேறுவதும், அரச படைகளின் தடைகளைத் தாண்டி நடமாடுவதும், மிக சாதாரணமாக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கடத்தல் மற்றும் கொலைகளுக்குப் பின்னணியில் கருணா குழு இருப்பதையும், அதற்குத் துணையாக அரச படைகள் செயற்படுவதையும் நேரடியாக அவதானிக்கவும் உறுதிப்படுத்தவும் முடிந்துள்ளது.
கருணா குழுவினர் நடமாடுகிறார்கள் என்று தெரிந்திருந்தும், அரச படையினரும் காவல்துறையினரும் அவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ முன்வரவில்லை.

கடந்த வாரத்தில்கூட, எட்டுக் கொலைகளும், மூன்று சிறார்கள் உட்பட, 17 ஆட்கடத்தல்களும் இடம்பெற்றுள்ளன. உண்மையான தொகை இதைவிட மிக மிக அதிகமாக உள்ள போதிலும், உயிருக்குப் பயந்து, பெற்றோர் தகவல் தர மறுத்து வருகின்றனர் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: