Tuesday, November 14, 2006

கனடிய அரசியலில் ஈழத்தமிழர்கள் நுழைவு.

நொவம்பர் 13ம் திகதி இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இவை தவிர, பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக, யோர்க் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டிருந்தார்.

மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு:
மார்க்கம் நகரசபை உறுப்பினராக, 7ம் வட்டாரத்தில் போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள், 33.54 வீத வாக்குகளைப் பெற்று, கவுன்சிலர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.
அதே நகரசபையில், 7ம் 8ம் வட்டாரங்களில், கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட நீதன் சண்முகராஜா, 68.39 வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியுடன் தெரிவாகியிருக்கிறார்.

மார்க்கம் நகரசபையின் 5ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட பாலா பாலசுப்ரமணியம் வெற்றிபெறவில்லை.

மார்க்கம் பிரதேசத்தை உள்ளடக்கியதான யோர்க் பிரதேச சபையில், பிரதேசசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கலாநிதி.இலகு இலகுப்பிள்ளை அவர்கள், 16,246 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜிம் ஜோன்ஸ் என்ற வேட்பாளர், 29,514 வாக்குகளைப் பெற்று, அங்கு முதலிடத்தில் உள்ளார்.

ரொறன்ரோ நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு:
26ம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகப் போட்டியிட்ட டேவிட் தோமஸ், 6.53 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

41ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட தட்சா நவரத்தினம் சுமார் 12 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலுள்ளார்.

42 ஆவது வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகப் போட்டியிட்ட குமார் நடராஜா சுமார் 26 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலுள்ளார்.

17ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினர்களாக இரு தமிழர்கள் போட்டியிட்டனர். சூரியகுமாரன் நவரட்ணம், கேதீஸ் வரன் ஆகிய இருவரும் வெற்றிபெறவில்லை.
20ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட வரன் கனகரட்ணம் வெற்றிபெறவில்லை.

21ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினர்களாக இரு தமிழர்கள் போட்டியிட்டனர். ஆறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ள ஷண் தயாபரன், வெற்றிபெறும் வாய்ப்பை சிறிய வாக்கு வித்தியாசத்தில் தவற விட்டுள்ளார். இதே வட்டாரத்தில் கணேஸ் குலசேகரம்பிள்ளை என்பவரும் போட்டியிட்டிருந்தார்.
மிசிசாகா நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு:
4ம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராக சதீஸ் பாலசுந்தரம் போட்டியிட்டார்.
9ம் 10ம் வட்டாரங்களில் கல்விச்சபை உறுப்பினராக ராம் செல்வராஜா போட்டியிட்டார். இருவரும் வெற்றிபெறவில்லை.

மார்க்கம் தொகுதியில், கவுன்சிலராகப் போட்டியிட்ட லோகன் கணபதியும் கல்விச்சபை வேட்பாளராகப் போட்டியிட்ட நீதன் ஷண்ணும், கனடிய அரசியலில் உத்தியோகபூர்வமாக நுழைகின்ற முதல் ஈழத் தமிழர்கள் என்ற பெருமையைப் பெறுகின்றனர்.
புதினம் செய்தித்தளம், இவர்கள் இருவருக்கும், ஏனைய வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது.
நன்றி>புதினம்.

No comments: