Saturday, November 04, 2006

யாழ். குடாவில் கொடூர மனித அவலம்!!!

யாழ்ப்பாணத்தின் கொடூர மனித அவலங்கள் குறித்து யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி விளக்கம் அளித்துள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரிரிஎன்) இடம்பெற்ற "வாராந்த அரசியல் கண்ணோட்டம்" நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:
யாழ். குடாநாட்டில் தற்போது 6 இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் 144015 சதுர கிலோ மீற்றரில் எங்கள் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு முழுமையாக சிறிலங்கா இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இது நடந்துள்ளது.
மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் 34 விழுக்காடு நிலப்பரப்பில் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது.
யாழ். குடா நாட்டில் 15 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ளது.
யாழ். குடா நாட்டு மக்களை பிற பிரதேசங்களுடன் இணைத்து வாழ்நிலை தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஏ-9 பாதை மூடப்பட்டு மக்கள் ஒரு இராணுவ முற்றுகைக்குள் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒக்ரோபர் 17 ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தினராலும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யினரால் 611 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 454 அப்பாவி பொதுமக்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். மக்கள் மத்தியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மரணபீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏ-9 பாதை திறப்பு காலத்தில் நாள் ஒன்றுக்கு 200 லொறிகள் எடுத்துச் சென்றன. இன்று பாதை மூடப்பட்ட நிலையில் கடல் வழியாக கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களோ 10 விழுக்காடுதான் வழங்கப்படுகிறது. இதர அனைத்துமே இராணுவத்தினரே பயன்படுத்திக் கொள்கின்றனர். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் மக்கள் வரிசைகளில்தான் காத்திருக்கின்றனர். அங்கு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் நின்றும் கூட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களைப் பெற முடியவில்லை. பொருட்களின் விலையும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
நாளாந்த கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.
40 ஆயிரம் வரையான விவசாயக் குடும்பங்கள் விவசாய தொழிலை மேற்கொள்ள இயலவில்லை. அதே நேரத்தில் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தவும் முடியாத நிலை உள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் உரும்பிராயில் உற்பத்தி செய்த பொருட்களை தென்மராட்சிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தென்மராட்சியில் உற்பத்தி செய்த பொருட்களை யாழ்ப்பாணத்துக்கும் தீவகத்துக்கும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீவக மக்களின் நிலத்தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி மற்றும் சுகாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதான மருத்துவமனைகள், ஆதார மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்களில் மக்களுக்கான மருந்துகளைப் பெற முடியாத நிலை உள்ளது. நோயாளர்களின் அவதி அதிகரித்து வருவதோடு நோய்த் தடுப்பை மேற்கொள்வதற்கான சுகாதார நடைமுறைகளையும் செயற்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஒட்டுமொத்தமாக மக்கள் முடங்கி நிற்கும் சூழ்நிலை உள்ளது.
அப்படி வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும்
சிறிலங்கா இராணுவத்தினரால் யார்- எவர் என்ற கேள்வியின்றி பால், வயது வேறுபாடின்றி- படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பாரிய மனித அவலம் ஏற்பட்டுள்ளது என்றார் இளம்பரிதி.
நன்றி>புதினம்.

No comments: