இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்,
ஏ.பி. வெங்கடேசுவரன் புகழ்மாலை.
வினா: இலங்கையில் நிலவும் தற்போதைய நிலை குறித்து உங்கள் கணிப்பு என்ன?
விடை : நான் சார்ந்திருக்கும் ஆசியா மய்யம் என்ற நிறுவனமும் பாதுகாப்புத் துறை ஆய்வு நிறுவனமும் இணைந்து இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அண்மையில் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். பொதுவான கணிப்பு என்னவெனில் நிலைமை மோசமாக இருக்கிறது. மேலும் மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசு, அதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்குப் பிறகும் ஒரு அமைதியான தீர்வைக் காணுவதற்கு முயற்சிக்கவில்லை எனத் தோன்றுகிறது. மற்றொரு புறம், விடுதலைப் புலிகள் இயக்கம் அவர்கள் போக்கில் விடப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளில் அழுத்தமான தலையீட்டினை செலுத்தக் கூடிய இந்தியாவோ விலகியே நிற்கிறது. இந்தியா ஏதாவது ஒரு வகையில் இலங்கையின் நிலைமைக்குப் பதிலளிக்க வேண்டும். 1987இல் இராசீவ் காந்தி இலங்கை அரசுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டு இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பினார். இலங்கையில் ஒரு உள்நாட்டு யுத்தம் நடைபெறுகிறது இந்தியப் படைகளை அங்கு அனுப்புவது சரியானது அல்ல. ஏனெனில் இந்தியப் படைகளின் நோக்கம் இந்தியாவின் நலனைப் பாதுகாப்பதே அன்றி ஒரு வெளிநாட்டுத் தலைவரின் நோக்கங்களுக்கு இரையாவது அல்ல என இராசீவுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் இலங்கையின் அப்போதைய அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனேவின் நோக்கம் இந்தியாவை எப்படியும் இலங்கை சிக்கலில் தலையிட வைப்பதாகவே இருந்தது. தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனாவும் வடக்கே விடுதலைப்புலிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்தனர். அதனால் அவர், இராசீவ் காந்தியிடம்.. இந்தியா தனது உதவிக்கு வரவில்லையெனில் தனது அரசாங்கமே கவிழ்ந்து விடும் என்று கூடக் கோரினார்.
இறுதியில் இந்திய அமைதிப்படை மரியாதைக் குறைவான முறையில் திரும்ப அழைக்கப்பட வேண்டி வந்தது. ஜெயவர்த்தானவிற்குப் பின் வந்த பிரேமதாசா, இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போரிட விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கூட அளித்தார். ஒருவேளை அதனால்தான் இந்தியா இப்போது இலங்கையை விட்டு விலகி நிற்கிறதோ. ஆனால் மனித தேவைகளும், இன்னல்களும் ஒதுக்கப்பட முடியாதவை. இன்று இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஆதரவின்றி விடப்பட்டிருக்கின்றனர். நார்வே போன்ற அரசுகள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசால் வடக்கே புதிதாகத் தொடங்கப்பட்ட போரில் மிக மோசமான மனித உரிமை மீறல்களும் கொலைகளும் நடைபெறுவதாகக் கூறுகின்றன.
வினா : இந்தியா என்ன மாதிரியான நிலை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
விடை : அதைச் சொல்வது மிகக் கடினம். ஏனெனில் புது தில்லியில் குறிப்பிட்ட சில மாநிலங்களின் நலன்கள் முழுமையாக பரிசீலிக்கப்படுவதில்லை. இது போன்ற ஒரு வார்த்தை என்னிடமிருந்து வருவது விநோதமாகத் தோன்றுவது புரிகிறது. நான் தில்லியில் வேலை பார்த்திருக்கிறேன். அப்போதே.. ஒரு சில குழுக்களின் நலன்களை விட வேறு சில குழுக்களின் நலன்கள் தில்லியில் முடிவு எடுப்பதில் அதிக கவனத்தை ஈர்ப்பதைக் கண்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் மொழிவழி மாநிலப் பிரிவினைக் குழு அமைக்கப்பட்ட போது அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கே. எம். பணிக்கர், மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் மூன்று சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என தனது கருத்தைக் கூறினார். ஆனால் அந்தக் கருத்து எடுபடவில்லை. ஏனெனில் முடிவு எடுப்பவர்கள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
வினா : உங்களை 1980களுக்கு என்னால் அழைத்துச் செல்ல முடியுமானால், இராசீவ் காந்தி ஒருவேளை உங்கள் பேச்சைக் கேட்டு இந்திய அமைதிப் படையை அனுப்பாமல் இருந்திருந்தால், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இலங்கையில் வரலாறு மாறியிருக்கும் என நினைக்கிறீர்களா?
விடை : நான் நிச்சயமாக நினைக்கிறேன். சொல்லப்போனால், இராசீவ் காந்தி இன்றும் பிரதமராக இருந்திருப்பார். அன்று அவர் இளைஞராக இருந்தார். அவரது வாழ்க்கை குறுக்கப்பட்டது. அவரது கொலைக்குப் புலிகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் அந்தக் கொலையைச் செய்ய முடிவெடுத்தாரா அல்லது வேறு யாரேனும் வெளியேறிய குழுக்களா என எனக்குத் தெரியாது. அது இந்தியாவின் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களை இந்தச் சிக்கலை விட்டு மேலும் விலக்கிவிட்டது.
வினா : இலங்கைச் சிக்கலில்தான் நீங்கள் இராசீவுடன் கருத்து மாறுபாடு கொண்டீர்கள். நீங்கள் ஒரு ஆமாம் சாமியாக இருந்திருந்தால் ஒருவேளை வெளியுறவுத் துறைச் செயலாளராகத் தொடர்ந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?
விடை : நானும் அவ்வாறு கற்பனை செய்கிறேன். ஆனால் இராசீவுடன் நான் கருத்து மாறுபட்டது இலங்கைச் சிக்கலில் மட்டுமல்ல. வேறு சிலதும் இருந்தன. ஆனால் அவற்றைப் பற்றி நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை.
வினா : ஆனால், இலங்கை குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக நீங்கள் எப்போதாவது வருந்தியதுண்டா?
விடை : நிச்சயமாக இல்லை. அரசை விட்டு வெளியேறியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எனது நேர்மையான கருத்துக்களைக் கூறினேன்.
வினா : மீண்டும் ஒப்பந்தத்திற்குப் போவோம். அப்போது நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்த்தால் இந்தியா தனது அரசியல் நலன்களைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டதுபோல் தெரிகிறது. தமிழரைப் பற்றிய எந்தக் கேள்வியும் இல்லை.
விடை : நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஒப்பந்தத்தின் சரத்தில் ஒன்று அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனத்தின் ஒலிபரப்பு மய்யம் அமைப்பதைக் குறித்து நேரடியாகப் பேசுகிறது. இன்று தென்னாசிய அரசியல் நிலையே மாறியிருக்கிறது. நாம் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இதே அமெரிக்கா 1974இல் தாராப்பூர் அணு மின் நிலையத்திற்கு எரி பொருள் அளிப்பதற்குப் போடப்பட்ட அணு ஒப்பந்தத்தில் வாக்குத் தவறியிருக்கிறது. அதனால் கடந்த காலத்தை அதிகமாகத் தோண்டுவது சிரமமானது. சவக் குழிகளைத் தோண்டுவதில் எந்த பயனும் இல்லை.
வினா : எதிர்காலத்தை நோக்கினால், அதிபர் இராஜபக்சே, இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு நோக்கிச் செல்வதாக உங்களுக்கு தோன்றுகிறதா?
விடை : நிச்சயமாக அப்படித்தான் தோன்றுகிறது. கடந்த டிசம்பரில் அதிபர் இராஜபக்சே தில்லி வந்திருந்தபோது அவரது அமைதி முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவர் இலங்கை மக்களில் ஒரு பகுதியினருக்கான அதிபராக இல்லாமல் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமான அதிபராகத் தன்னை உணர்ந்தால் நிச்சயம் அவர் வெற்றி பெறக் கூடும் என நான் அவரிடம் கூறினேன். ஆனால் அவரது தொடர்ந்த நடவடிக்கைகள் அனைவருக்குமான என்ற மனநிலையிலான தீர்வு நோக்கி அவர் செல்லவில்லை என்பதையே காட்டுகின்றன.
வினா : இந்திரா காந்தி காலத்தில், தமிழர்கள் மீதான அனுதாபத்துடன் இந்தியா இருந்ததாகத் தோன்றியது. ஆனால் .இராசீவ் பிரதமரான பிறகு ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு இந்தியாவின் அரசியல் நலன்கள் மீதான பார்வை காரணமா அல்லது ஆலோசகர்கள் காரணமா?
விடை : நீங்கள் இராசீவ் மீது கொஞ்சமும் நியாயமற்று நடந்து கொள்கிறீர்கள். அவர் இந்திய அமைதிப்படையை அனுப்ப முன் வந்தது, அவரே கூறியது போல, தமிழ் மக்களைக் காப்பதற்காக. விடுதலைப் புலிகளுடன் போரிட அவர் இந்திய அமைதிப்படையை அனுப்பவில்லை. ஆரம்ப மாதங்களில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் ஒரு நல்ல நட்புணர்வு இருந்தது. பின்னர் பல காரணங்களுக்காக, இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு முறிந்தது.
வினா : ஆனால், அவர் சிக்கலுக்குரிய இரு தரப்பினரையும் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (இந்தியாவும் இலங்கையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குப் பதில்)
விடை : இது மிக நியாயமான கேள்வி. அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்திருக்கக் கூடாது. அது இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கையெழுத்திட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம். இந்தியா ஒருவேளை ஒரு நலன் விரும்பியாக பக்க பலமாக நின்றிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் இரு அரசுகளுக்கு இடையில் போடப்பட்டது. விடுதலைப் புலிகள் அதில் நேரடியாகக் கொண்டு வரப்படவில்லை. இது பரிதாபத்திற்குரியது. ஆனால் இதெல்லாம் காலம் கடந்த சிந்தனை. ஆனால்.. நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்.. இந்தியா -இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்.. நான் வெளியுறவுத் துறைச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய போதும் தில்லியில்தான் இருந்தேன்.
ஒரு மாலை.. நான் இந்து பத்திரிகை ஆசிரியர் என். இராமைச் சந்தித்தேன். நான் அவரிடம், ஒப்பந்தம் மிக மோசமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறினேன். ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் அப்போதே வெளிவந்துவிட்டது. விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினராக ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் கருதினேன். அதோடு இந்திய அரசு இலங்கை அரசுடன் நேரடியாக ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்றும் கருதினேன். ராம் ஓரிருவாரம் நடக்கவிருந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதற்குக் காலம் கடந்து விட்டது எனக் கூறினார். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செல்லும் பிரதமருடன் அவரும் கொழும்பிற்குப் பயணப்பட இருந்தார். அதற்குப் பிறகு நடந்தவை வரலாறு.
வினா : இறுதியாக, விடுதலைப் புலிகள் பற்றி உங்கள் கருத்தைக் கூறுங்கள்.. ஏனெனில் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இலங்கையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்களுக்கு எதிராக இனப் பாகுபாட்டை நிலைநிறுத்தும் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்த ஒரு சிக்கலான காலக்கட்டத்தில் பிரபாகரன் வரலாற்று நாயகராக வெளிப்பட்டார்.
விடை : நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன. பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கர்கள் தங்கள் விடுதலை அறிவிக்கையில் கையெழுத்திட்டதைக் குறித்த கதை அது. இந்த அறிவிக்கை 1776ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அந்த அறிவிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரும் மிகவும் மதிக்கப்பட்ட தலைவருமான பெஞ்சமின் பிராங்ளின் 13 மாநிலங்களிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளை நோக்கி, "நாம் அனைவரும் இனி ஒற்றுமையாக, ஒன்றாக இருக்க வேண்டும்.. இல்லையெனில் அனைவரும் தனித்தனியே தூக்கிலிடப்படுவோம் என்று கூறினார். ஒருவேளை அமெரிக்கர்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தில் தோல்வியுற்றிருந்தால், பிரிட்டிஷார் அவர்கள் அனைவரையும் துரோகிகள் எனத் தூக்கி
லிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வென்றனர். அதனால் அன்று ஒரு நாடு உதயமானது. அது இன்று உலகிலேயே மிக வலிமையான நாடாக இருக்கிறது. அதனால் நிகழ்வுகளை முதன்மைப்படுத்துவது முக்கியமல்ல. மாறாக வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதே முக்கியம்.
- நன்றி தெகல்கா
மொழியாக்கம் : பூங்குழலி
நன்றி>தென்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஆழமான கருத்துக்கள், ஆயினும் புரிய வேண்டியவர்களுக்கு புரியவேண்டும்.
ந்ல்ல பதிவு.
can u give thekalka link?
that may useful??
Anonymous said...
can u give thekalka link?
that may useful??
12:43 AM
http://www.thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Current&newsCount=11
மிக்க நன்று.
நல்ல பதிவு.
தேவையான விளக்கங்கள்.
சீரிய உழைப்பு.
என்றென்றும் எனது ஊக்கங்கள்.
தமிழர்கள் நல்வாழ்வு பெற அனைத்து முனைகளிலும் பாடுபடுவோம்.
Post a Comment