ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது வலிந்து ஒரு போரைத் திணிக்கத் தயாராகின்றது. போர்தான் அரசின் நிலை என்றால் அதனை எதிர்கொள்ளப் புலிகளும் தயாராகவே உள்ளனர். தங்கள் மீது திணிக்கப்படுகின்ற ஆயுத வன்முறையை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகப் போராட வேண்டிய கட்டாயத்தினுள் தமிழ்மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாள ரும், பேச்சுக்குழுவின் தலைவருமாகிய சு.ப.தமிழ்ச்செல்வன்.
ஜெனிவாவில் பேச்சுகள் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:
ஸ்ரீலங்கா இனவாதத் தலைவர்களால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தமிழ்மக்கள் இனப்படுகொலைக்கு உள் ளாக்கப்பட்டபோதுதான் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் கட்டத்துக்கு வந்தார்கள்.
ஆயுத வன்முறைகள் எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட நிலையில்தான் தற்காப்பு நிலையில்தான் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகியது.
ஸ்ரீலங்கா அரசு ஒரு கொடிய யுத்தத்தை எமது மக்கள் மீது திணித்திருக்கின்றபோது, எமது மக்கள் ஒன்றும் செய்யமுடியாத நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தங்களைத் தற்காத்துக்கொள்ள போராடவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்; தள்ளப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்.
ஆகவே, அமைதி வழியில் ஒரு சமாதானத்தீர்வை அடைய முயன்றாலும் இலங்கை அரசு அனைத்து வழிகளையும் மூடி மீண்டும் எமது தேசத்தின் மீதும் மக்கள் மீதும் ஒரு கொடிய யுத்தத்தைத் திணிக்கவே முயல்கின்றது.
ஆகவே, விரும்பியோ விரும்பாமலோ அதை எதிர்கொண்டேயாக வேண்டும். தமிழ்மக்கள் தற்காத்துக் கொள்வதற்கு வேறு மாற்றுவழி இல்லை என்றே கருதுகின்றேன்.
ஒரு சிறிய மனிதாபிமானப் பிரச்சினைக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகளை நிராகரித்து உதாசீனப் படுத்தி மீண்டும் போர்ச் சூழலை எமது தேசத்தின் மீது திணிக்க எம்மீது திணிக்க ஸ்ரீலங்கா அரசு முயன்று கொண்டிருக்கின்றது.
பெரிய போர் நடவடிக்கைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதை அனுசரணையாளர்களுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்து விளக்கியுள்ளோம். ஆகவே, எம்மீது திணிக்கப்படும் போரை எதிர்கொள்வதைத்தவிர எமக்கு மாற்றுவழி இல்லை. சர்வதேசத்தால் முடிந்தால், சர்வதேசத்தின் பேராதரவுடன் கொண்டுவரப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்தி கண்காணிப்புக் குழுவை செயற்படவைத்தும் வன்முறைகளுக்கு முடிவுகட்டி சமாதான முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர முடியும்.
ஜெனிவா மையம் மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனிவாப் பேச்சுக் களத்தைப் பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனிதாபிமான மையமான, மனித உரிமைகளின் மையமான ஜெனிவாவின் மையத்தில் நின்று கொண்டு எம்மக்களினது மனிதாபிமான வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். அந்த வகையில் எம்முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவுக்கு நாங்கள் வரும்போது தெட்டத்தெளிவாக எம்கருத்தை முன்வைத்துவிட்டுத்தான் வந்தோம். தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய எந்த ஒரு சிறு விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ள ஸ்ரீலங்கா அரசு ஒத்துழைக்கும் என்று நாம் நம்பவில்லை. முழுமையாக சர்வதேச சமூகத்தை நம்பியே அவர்களினது அழைப்புக்கு மதிப்பளித்து நாம் வந்தோம் என்று கூறியிருக்கிறோம். ஸ்ரீலங்கா அரசு ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். அது இங்கே நிரூபணமாகியிருக்கிறது. தனது முகத்தை ஸ்ரீலங்கா அரசு அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீலங்கா அரசு தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் தெளிவாகப் புரிந்திருக்கும்.
சர்வதேச சமூகம் எம்மை ஒரு நம்பிக்கையோடு அழைத்துக் கொண்டுவந்தது. ஆனால் ஸ்ரீலங்கா அரசு முரண்டுபிடித்து தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டி எங்களுடைய மக்களின் பேரவலத்துக்கு தீர்வேற்படுத்தும் ஒரு மிகச் சிறிய நடவடிக்கையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே உள்ள நடைமுறையான 6 லட்சம் மக்களுக்கான முக்கிய தரை வழிப்பாதையாகவுள்ள ஏ9 பாதையைத் திறப்பதை மறுத்துவிட்டது. இதனால் இந்தப் பேச்சு முயற்சியை முடக்கியிருக்கின்றார்கள். இந்தப் பழியை ஸ்ரீலங்கா அரசே ஏற்கவேண்டும்.
இருநாட்கள் நாங்கள் எடுத்த முயற்சிகளில் எந்தவிதமான இணக்கப்பாட்டுக்கும், விட்டுக்கொடுப்புக்கும் ஸ்ரீலங்கா அரசு முன்வரவில்லை. ஸ்ரீலங்கா அரசு அமைதி வழியில் எமது மக்களுடைய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கோ, அரசியல் கோரிக்கைகளுக்கோ, அரசியல் தீர்வு முயற்சிகளுக்கோ எந்த விதத்திலும் அனுசரித்துப் போகும் தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் யுத்த வெறிப்போக்கையும் ஒரு வன்முறைச் செய்தியாகத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கும் இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குமான ஒரு வெளிப்பாட்டைதான் காட்டிக்கெண்டுள்ளனர். நிச்சயமாக இது தமிழ் மக்களை மட்டுமல்ல ஸ்ரீலங்காவையே ஒரு பேரழிவுக்குள் தள்ளுகிற முயற்சியாக ஸ்ரீலங்கா பேரினவாத தலைமைகள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.
சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஸ்ரீலங்கா அரசின் அநீதியான கொடூரமான செயற்பாடுகளை முறியடிக்க முன்வரவேண்டும். உலகம் இதனை வெகுவிரைவில் புரியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசு தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்; எடுக்கும் நிலை உருவாகும்.
சிங்கள இனவாதத் தலைவர்களை ஒருவழிக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் பெருமுயற்சி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. பேச்சின்போதும் தாக்குதல் முயற்சி வலிந்த தாக்குதல்களை இரு தரப்பும் மேற்கொள்ளாது என்று நோர்வே அனுசரணையாளர்கள் சொல்லியிருந்தனர். ஆனால், பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே பேச்சு அரங்கில் இருக்கும்போதே தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வலிந்த தாக்குதல் முயற்சிகளை நாம் எடுத்துக்கூறினோம். ஆனால், இதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
ஸ்ரீலங்கா அரசானது கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டைப் பொய்யான காரணங்களைக் கூறி முடக்கிவிட்டு மீண்டும் மீண்டும் எமது மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடத்தான் முயற்சிக்கிறது. இதிலிருந்து எமது மக்கள் விடுதலைபெற சுதந்திரத்துக்கான போராட்டத்தைத் தொடர எமது தலைவரின் வழியில் நின்று போராடுவார்கள்.
புலம்பெயர் வாழ் எம்மக்கள் என்றுமில்லாத வகையில் முழுமையான ஆதரவை வழங்குவர். ஏனெனில், மனிதாபிமானம் பேசப்படுகிற ஜெனிவாவின் தலைநகரில் நாங்கள் வந்துநின்றுகொண்டு எம்மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையை முன்வைத்தோம். அது நிராகரிக்கப்பட்டிருப்பது எம்மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது. அவமானப்படுத்தியுள்ளது. ஆகவே, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அணிதிரள வைக்கின்ற ஏற்பாட்டையே இப்போது ஸ்ரீலங்கா அரசு ஜெனிவாவிலில் வந்து செய்துவிட்டுப் போகிறது.
தமிழ் மக்களை அனைத்து வகைகளிலும் அழித்தொழிக்க, கொன்றொழிக்க ஸ்ரீலங்கா அரசு முயன்று கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கை, கொடிய பயங்கரவாத நடவடிக்கை, எம்மக்களைத் தாங்கிநிற்கும் புலம்பெயர் மக்கள் அளிக்கின்ற உதவிகளை கொண்டு சேர்க்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி முடக்கம் ஆகியவற்றின் மூலம் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்த ஸ்ரீலங்கா அரசு முயற்சிக்கிறது. தாயகத்திலே சர்வதேச மனிதாபிமான அமைப்புகளைக்கூட முடக்கியுள்ளனர். அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பலவீனப்படுத்தியுள்ளனர். இதனை சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளன. ஸ்ரீலங்கா அரசின் கொடூரங்கள் இது மட்டுமல்ல. இனியும் வரும். தலைமைப் பீடமே உத்தியை வகுக்கும்
எங்களுடைய மக்களுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் தேவையும் சூழலையும் கருதி எங்களது உத்திகளை தலைமைப்பீடம் எடுக்கும். எமது தேசியத்தலைவரின் வருடாந்த கொள்கைப்பிரகடனமானது மிக மிக முக்கியமானது. மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்பார்க்கப்படும் விடயமாக உள்ளது. ஸ்ரீலங்கா அரசின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும், சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், எமது மக்கள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் எமது தேசியத்தலைவரின் அந்தக் கொள்கைப்பிரகடன உரை வரும் என்று நினைக்கின்றேன். நிச்சயமாக நாங்களும் அந்த உரையை ஆவலாக எதிர்பார்க்கிறோம்.
ஸ்ரீலங்கா அரசானது பேச்சுகளுக்கான நாட்கள் தீர்மானிக்கப்பட்ட நிலையிலும் மிகப் பிரமாண்டமான ஒரு படையெடுப்பை எமது தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதனை எம் மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது உலகறிந்த உண்மை.
எமது மக்களின் நெற்றியிலே துப்பாக்கிகளை நீட்டி வைத்துக்கொண்டு எங்களை அழிக்க ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியைத் தவிர வேறு வழியில்லை.
ஆகவே, ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்களை எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்ள தங்களைப் பாதுகாக்க தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் வழிதான் தமிழ் மக்களுக்கான வழி. அந்த இறுதிக்கட்டத்தைப் புறந்தள்ள முடியாது. போர் மீது எம் மக்கள் விருப்பமின்றி இருந்தாலும் துரதிஷ்டவசமாக மக்கள் எதிர்கொள்வர். நீதியும், நியாயமும், தர்மமும் எம் பக்கமே உள்ளது. அதுவே வெற்றி பெறும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி>லங்கசிறி.
Tuesday, October 31, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment