Tuesday, October 17, 2006

இந்தியப் பஞ்சாயத்து ராஜ்ஜும், சிறிலங்காவின் அறிவும்.

இலங்கைத் தீவில் தீவிரமாக அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது "அதிகாரப் பரவலாக்கல்" என்ற சொற்றொடர்.
அதுவும் இந்த அதிகாரப் பரவலாக்கலில் "இறக்குமதி" முறை இருக்கிறதே- ஆம். இந்தியா போன்ற வெளிநாடுகளின் அதிகாரப் பரவலாக்கல் எனில் அதைப் பற்றி கதைப்பதானது சிங்களவர்களுக்கு ஒருவித "அறிவுஜீவி"தனம் போல்..

இந்த "அதிகாரப் பரவலாக்கல்" காய்ச்சலில் நகைச்சுவையான கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் (செப்ரெம்பர் 27) இந்திய மத்திய அரசாங்கத்தின் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யர், சிறிலங்காவின் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் நிபுணர் குழு அங்கத்தவர்களை சிறிலங்கா சமாதான செயலகத்தில் சந்தித்தார்.

இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளும் இச்சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற விவகார அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அங்கத்தவருமான பேராசிரியர் விஸ்வா வர்ணபால இந்திய அமைச்சரை வரவேற்றார்.

பஞ்சாயத் ராஜ் அமைப்பு மற்றும் அது இந்தியாவில் செயற்படும் விதம் பற்றி இந்திய அமைச்சர் மணி சங்கர் தனது உரையில் விளக்கினார்.

இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு என்பது சிறிலங்காவின் உள்ளுராட்சி (இந்தியாவின் உள்ளாட்சி) ஒத்தது.

அதாவது தெரிவு செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்வதானது என்பதனை இந்தியாவில் "பஞ்சாயத்து" தேர்தல் அல்லது "உள்ளாட்சித் தேர்தல்" அல்லது "பஞ்சாயத்து ராஜ்" என்று அழைக்கிறார்கள்.

இந்த உள்ளுராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்புக்களுக்கான உறுப்பினர்களையும் தலைவர்களையும் மக்கள் வழமையான தேர்தல் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த "அதிகாரப் பரவலாக்கல்" என்பதும்

தென்னிலங்கையின் அனைத்துக் கட்சி நிபுணர் குழு- பிரதிநிதிகள் குழு விவாதிக்கும் "அதிகாரப் பரவலாக்கல்" என்பதும் அடிப்படையில் வெவ்வேறானது.

அனைத்துக் கட்சி நிபுணர் குழு- பிரதிநிதிகள் குழு விவாதிக்கின்ற "அதிகாரப் பரவலாக்கல்" என்பது இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு இனக்குழுமத்துக்கு ஏற்கெனவே உள்ள கட்டமைப்பிலிருந்து அதன் அரசியல் யாப்பை மாற்றி அதிகாரங்களை பரவலாக்கிக் கொடுப்பது. இது ஒரு தேசிய இனத்தின் வாழ்வுரிமை தொடர்பு கொண்டது. சுயநிர்ணய உரிமை தொடர்பிலானது.

இந்திய அமைச்சர் மணிசங்கர் வந்து வகுப்பெடுத்துவிட்டுச் சென்ற "அதிகாரப் பரவலாக்கல்" என்பது "நிறுவனமயமாக்கப்பட்டு விட்ட" அல்லது நிறுவப்பட்டுவிட்ட ஒரு கூட்டரசு அல்லது ஒற்றையாட்சியின் "நிர்வாக" மட்டத்திலேயான அதிகாரங்களை மட்டுமே பகிர்ந்தளிக்கின்ற "அதிகாரப் பரவலாக்கல்".

எதற்காக நாம் வகுப்பெடுக்கிறோம் இப்போது? ஏன் என்று கேட்கிறீர்களா?

கடந்த ஒக்ரோபர் 11 ஆம் நாளன்று

"இந்தியாவின் பஞ்சாயத்து முறை பற்றி சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு ஆய்வு!"

என்ற தலைப்பில் சிறிலங்கா அரசாங்கத் திணைக்களம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட விளக்கங்களை உள்வாங்கிக் கொண்டு. அந்தச் செய்தியை படிக்கவும்.

எதுவித திருத்தமும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே அதனை இணைக்கிறோம்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வே தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்தியாவின் அரசியலமைப்பில்; கிராமத்து பஞ்சாயத்து முறை தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானித்துள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைக்காக சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரன தெரிவித்தார்.

இதற்கான அழைப்பை இந்திய அமைச்சர் மணிசங்கர் விடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார். இதுபற்றி அமைச்சர் மேலும் கூறியதாவது,

அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இந்தியாவில் கிராம மட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கம் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

சர்வ கட்சி மாநாட்டுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு பிரதி வாரமும் கூடி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்கிறது. அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இக்குழுவின் ஆலேசனைகள் சிறந்த பங்களிப்பினை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

- என்று சிறிலங்கா அரசாங்கத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி அறிக்கை வெளியாகி உள்ளது.

ஒரு அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரப் பரவலாக்கத்தையும்

ஒரு இனக்குழுமத்தின் வாழ்வுரிமை அதிகாரப் பரவால்லக்கத்தையும்

வேறுபடுத்திப் பார்க்காமல்

"இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வே தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்தியாவின் அரசியலமைப்பில் கிராமத்து பஞ்சாயத்து முறை"யை ஆராயப் போவதாக சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரன கூறியிருப்பதைக் கண்டு நாம் என்ன சொல்வது?
பானைக்குள் இருப்பதுதானே அகப்பையில் வரும்.

சிங்களவர்களுக்கு என்றுதான் விடிவு பிறக்குமோ?
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

Ceylon Govt try to pull India. This is a Dirty Tricks of Ceylon Govt. Cho and Hindu Ram support.