Saturday, October 28, 2006

ஜெனீவாப் பேச்சுக்கள் தொடங்கின.




ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை தொடங்கியது.
ஜெனீவாவின் வரம்பே மாநாட்டு மண்டபத்தில் சுவிஸ் நேரம் காலை 8.45 மணிக்கு தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதியான கொலின் அம்மையார் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், "சிறிலங்காவின் மனிதப் படுகொலைகள் என்பது ஒருபுறமிருக்க இராணுவ நடவடிக்கைகள் இன்னொரு புறமிருக்க ஒரு சமூகம் அல்லது இனம் ஒரு மூலையில் தன்னுடைய எதிர்பார்ப்புக்களை இழந்து அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தமிழர் தரப்பு விரும்புகிறது. அதே நேரத்தில் இராணுவ நடவடிக்கைகள் கைவிடப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தமிழர்களுக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று மற்றொரு சமூகம் கூறுகிறது" என்றார்.

அதன் பின்னர் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹ்யெம் ஆற்றிய தொடக்க உரை:
இலங்கையில் இரண்டு தரப்பினாரலும் நடத்தப்படுகின்ற மனிதப் படுகொலைகள்- இராணுவ ரீதியான நடவடிக்கைகள் துர்ப்பாக்கியகரமானது. இதனை சர்வதேச சமூகம் ஒருபோதும் அனுமதிக்காது. அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட இத்தகைய பேச்சுக்களின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை இரண்டு தரப்பினரும் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. நீங்கள் எதைப் பற்றிப் பேசப் போகிறீர்கள் என்பதற்கு அப்பால் தமிழ்-சிங்கள-முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சனையான மனித உரிமைகள் பற்றியும் ஒரு இனம் அல்லது சமூகம் அல்லது மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை எவ்வாறு அனுமதிக்க வேண்டும் விரும்புகிறார்களோ அதைப் பேசுவதுதான் சிறப்பாக இருக்கும்.

புனர்வாழ்வு, மேம்பாடு, மீள்நிர்மானத்துக்கான உதவிகளை இருதரப்புக்கும் வழங்க சர்வதேச சமூகம் தயாராக உள்ளது. இருதரப்பினரும் தங்கள் தரப்பின் அவலங்களைப் புரிந்துகொண்டு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் தீர்வுகளுக்கு இருதரப்பும் ஒத்துழைப்பை வழங்காதுபோனால் இத்தகைய பேச்சுக்கள் துர்ப்பாக்கியமானதாக அமையும்.

லெபனான் படுகொலைகள்- பாலஸ்தீன முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு தீர்வு காணும் சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயான பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில்தான் சர்வதேச சமூகம் விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கிறது.

ஒரு சமூகம் எதை எதிர்பார்க்கிறது- மற்றொரு சமூகம் அந்த எதிர்பார்ப்புக்கேற்ப எதனை வழங்க உள்ளது என்கிற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை அமையுமேயானால் அடுத்தகட்ட பேச்சுக்கான சமிக்ஞையாக இருக்கும் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.

எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றிய பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா பேச்சுக் குழுவினரை கைலாகு கொடுக்கச் செய்து ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதன் பின்னர் இருதரப்பினரும் பேச்சுக்களைத் தொடங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழர் தாயக மனித அவலங்களை விளக்கி உரையாற்றினார்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது தொடக்கம் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுக்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு இணக்கப்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவில்லை.

8 மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஜெனீவாப் பேச்சுக்களின் போதும் இணக்கம் காணப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு பாரிய மனித அவலங்களை தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

ஏ-9 பாதையை மூடி யாழ். குடாநாட்டின் 5 இலட்சம் மக்களை பட்டினிச் சாவு நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தற்போது தள்ளியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஜெனீவாப் பேச்சுவார்த்தையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அளிக்கப்படுகிற இறுதிச் சந்தர்ப்பம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எற்கெனவே தெரிவித்திருந்தார்.
இருப்பினும் மனிதாபிமானப் பிரச்சனைகளை பேச மறுத்து அரசியல் விவகாரங்களையே முதன்மையாகப் பேச வேண்டும் என்று சிறிலங்கா அரச தரப்பு பிடிவாதம் பிடித்து வந்தது.
ஆனால் தமிழர்களின் மனிதாபிமான பிரச்சனைகளைப் பேச வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழு வலியுறுத்தியது.

இதனால் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டது.
அதன்பின்னர் இதரப்பினரும் தங்களது அறிக்கைகளை சமர்பித்து முதலில் உரையாற்ற நேற்று பின்னிரவு இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இருதரப்பினரிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சோவியத் ரஸ்யாவின் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஸ்யாவின் மிக்கேல் கொர்ப்பச்சேவ் மற்றும் அமெரிக்காவின் பில் கிளிண்டன் ஆகியோர் சந்தித்துப் பேசிய மாநாட்டு மண்டப இடத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

1 comment:

Muthu said...

நார்வே தூதரின் கருத்து நன்று