Friday, October 13, 2006

சிங்கள இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் பாதிப்பு:




கடந்த ஒக்ரோபர் 11 ஆம் நாள் முற்பகல் 11.00 மணிக்கு இராணுவம் வெளியிட்ட செய்தி:
முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்கப் பகுதிகளில் இன்று காலை ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆர்ட்டிலறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிறிலங்கா விமானப் படை மற்றும் கடற்படையினர் உதவியுடன் எதிர்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஓக்ரோபர் 11 ஆம் நாள் மாலை 03.17:16 மணிக்கு இராணுவம் வெளியிட்ட செய்தி:
முகமாலை மோதலில் இன்று பிற்பகல் வரை 22 இராணுவத்தினர் உயிரிழந்துவிட்டனர். 113 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் "வன்முறைக"ளுக்கு எதிராக தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.

(இந்த அறிக்கை வெளியாகும் நேரத்தில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்றும் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியானது.)

இப்படியாக இந்த தாக்குதலில் தமது தரப்பு இழப்புக்களை குறைத்து வெளியிட்ட இராணுவத் தரப்பு கட்டம் கட்டமாக இழப்பு விவரங்களை அதிகரித்து வெளியிட்டது.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் மனித உரிமைகளை மீறி விட்டார்கள் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவர்களுக்கு பாரதூரமான அதிர்ச்சியை இத்தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவம் எத்தகைய மன உறுதியற்ற நிலையில் உள்ளது என்பதை பி.பி.சி. தமிழோசைக்கு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அளித்த நேர்காணலில் கேட்க முடியும்.

அந்த நேர்காணலின் முழு வடிவம்:
(பி.பி.சி. தமிழோசையின் ஒலிப்பதிவில் 8.44 முதல் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேர்காணல் தொடங்குகிறது)

தொடக்கத்தில் பிரசாத் சமரசிங்கவின் ஆங்கில பேச்சு ஒலிபரப்பாகிறது....
அதனைத் தொடர்ந்து பி.பி.சி. குழுமம் அவரது நேர்காணலை தமிழாக்கம் செய்கிறது.
"யாழ். குடாநாட்டில் கிளாலி மற்றும் முகமாலை முன்னரங்க காவலரண்களில் இன்றும் கூட சண்டை நடைபெற்று வருகிறது. மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இருதரப்பினரும் மிக அருகில் நின்று சண்டையிடவில்லை. விமானப் படையின் உதவியுடன் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகிறோம். விடுதலைப் புலிகள் நேற்று பாதுகாப்புப் படையினரின் முன்னரங்க தற்காப்பு நிலைகள் மீது தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து தீவிரமான கடுமையான சண்டை நடைபெற்றது. படையினர் மற்றும் முன்னரங்க காவலரண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் படையினரும் புலிகளும் மிக அருகில் நின்று சண்டையிட்டனர். இந்தத் தாக்குதலில் 55 படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 283 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் இருக்கிறார்கள். இது தவிர 78 படையினரைக் காணவில்லை. ஒரு சிப்பாய் தங்கள் வசம் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். படையினரின் 74 சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர் என்றார் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.

சரி.. வருகின்ற தகவல்களைப் பார்க்கின்ற போதும் பாதுகாப்புத்தரப்புத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீங்கள் நுழைந்திருப்பது போல் தெரிகிறது அல்லவா என்று கேட்டதற்கு இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க,
(பிரசாத் சமரசிங்கவின் ஆங்கில ஒலி தொடர்கிறது)

அதன் தமிழாக்கமாக பி.பி.சி குழுமம் தெரிவித்தது:
முதலில் விடுதலைப் புலிகள் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பெரிய சண்டை மூண்டது. இலங்கைப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவலரண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கடுமையான தீவிரமான சண்டை நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இராணுவம் போகவே இல்லை. இருதரப்பு முன்னரங்க காவலரண்களுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் தீவிரமான சண்டை நடைபெற்றது. எதிர்தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் நடைபெற்றன என்றார் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.

சரி, பிரிகேடியர், இலங்கைப் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையவில்லை என்கிறீர்கள். அப்படியானால் இலங்கைப் படையினரின் 74 பேரின் உடல்கள் தங்களிடமிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுகிறார்களே? இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி முடி
(பிரசாத் சமரசிங்கவின் ஆங்கில ஒலி தொடர்கிறது)

அதன் தமிழாக்கமாக பிபிசி குழுமம் தெரிவித்தது:
அதாவது, முன்னரங்க காவலரண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இலங்கை இராணுவத்தின் ஒரு கொம்பனி பதில் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது விடுதலைப் புலிகள் அவர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். இந்தக் காவலரண்களுக்கு இடைப்பட்ட தூரம் என்பது சில இடங்களில் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரம்தான் இருக்கும். சில இடங்களில் 800 மீற்றர் தூரம்தான் இருக்கும். இராணுவத்தின் ஒரு கம்பெனி சூழப்பட்ட நிலையில் அவர்களைப் பாதுகாக்க மற்ற தரப்பினர் எதிர்த்தாக்குதலை நடத்தினர். விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட படையினரை அவர்கள் கொண்டு சென்றிருக்கலாம் என்றார் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.
அண்மைய காலமாக சில இராணுவ வெற்றிகளை இலங்கை இராணுவம் பெற்றிருந்த நிலையில் குறிப்பிட்ட இந்த இராணுவ நடவடிக்கை நீங்கள் எதிர்பார்த்தது போல் செல்லவில்லை. இது திட்டமிடுவதிலும் செயற்படுத்துவதிலும் தவறு நடந்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு பதிலளித்த பிரசாத் சமரசிங்க,
(ஆவேசப்பட்ட நிலையில் பிரசாத் சமரசிங்கவின் ஆங்கில ஒலி தொடர்கிறது)
அதன் தமிழாக்கமாக பிபிசி குழுமம் தெரிவித்தது:

இது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. ஏன்னா நான் இராணுவப் பேச்சாளர் மட்டும்தான். களமுனைத் தளபதி கிடையாது. எந்த ஒரு இராணுவ நடவடிக்கையையும் எப்படி திட்டமிட்டுச் செயற்படுத்துவது என்பது அந்தந்த களமுனைத் தளபதியைப் பொறுத்தது. நாங்கள் எதிர்த்தரப்பை நோக்கி படையெடுப்பை எதனையும் நடத்தவிலை. இது ஒரு தற்காப்பு இராணுவ நடவடிக்கை மட்டும்தான். எனவேதான் இந்த இடத்தில் விடுதலைப் புலிகள் கூடுதலான துருப்புகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கனரக ஆயுதங்களையும் நிலை நிறுத்தியிருந்தாங்க. அதனால்தான் எங்களின் முன்னரங்க காவலரண் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என்றார் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க. (12.27 நிமிடத்தில் முடிகிறது)

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது என்று "ராவய" வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் நாமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புதினத்தில் நாம் ஏற்கெனவே பிரசுரித்திருந்த செய்தியை மீள இதனில் இணைக்கிறோம்.
ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது.
விடுதலைப் புலிகளின் பொறிக்குள் இராணுவம் உள்நுழைந்துவிட்டது. பரந்த வெளியில் இராணுவத்தை நுழையவிட்டு வளைத்து எறிகணைத் தாக்குதலின் மூலம் வீழ்த்தியிருக்கின்றனர். தங்களது போரிடும் ஆற்றல் குறைந்து விடவில்லை என்பதை விடுதலைப் புலிகள் நிரூபித்திருக்கின்றனர்.
இருப்பினும் வான் தாக்குதலை புலிகளால் எதிர்கொள்வதற்கு இப்போதும் முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு தங்களுடைய எல்லைகள் எது என்று தெரியும். தேவைப்படும் போது விலக்கிக் கொண்டு மீளவும் கடுமையாகத் தாக்குவார்கள். அதனைத் தான் நேற்று செய்துள்ளனர் என்றார் அவர்.
இதனிடையே சிறிலங்காவின் அமைச்சர்களை இராணுவத்தினர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு மகிந்த ராஜபக்ச அனுப்பியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் சிறிலங்கா விமானப் படையின் ஓய்வுபெற்ற தளபதி ஹரி குணதிலக்க கூறியதாவது:
முகமாலை மோதலின் மூலம் பேச்சுக்களுக்கான சந்தர்ப்பம் குறைந்து வருகிறது. சிறிலங்கா இராணுவம் தன் சொந்த பரப்புரைக்கே பலியாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகளை அண்மைய மாதங்களில் ஏற்படுத்தி விட்டோம். விடுதலைப் புலிகள் தோற்று ஓடுகிறார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டன.
இந்தத் தாக்குதல் மூலம் நாம் பேச்சுக்களுக்கு அப்பால் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.

பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா இராணுவத்துக்கு கடும் இழப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூக்கில் இரத்தம் தோய்ந்திருக்கிறது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. முகமாலை சமர் பாரிய தவறு. சரியாகத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்றார் என ஏ.எஃப்.பி செய்தி தெரிவித்துள்ளது.
இதற்கு அப்பால் களமுனையில் இன்னமும் எடுக்கப்படாத நிலையில் நடுநிலைப்பகுதியில் பெருமளவிலான சடலங்கள் கிடக்கின்றன.
விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர்கள் பலவீனப்பட்டுவிட்டனர் என்று சிறிலங்கா அரசு மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட பரப்புரைகளுக்கு மாறாக இராணுவத்துக்கு விழுந்த அடி மிக மோசமான அடி என்றும் அரசுக்கும் இராணுவத்துக்கும் சிங்கள மக்கள் மத்தியில் கரி பூசப்பட்டுள்ளதாக கொழும்பு ஆய்வாளர்களும் முன்னாள் இராணுவ தளபதிகளும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடுகள் பகுப்பாய்வுகள்-புலனாய்வுகள் எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

படங்கள்: தமிழீழ தேசிய தொலைக்காட்சி

No comments: