Sunday, October 29, 2006

பாரிய அளவில் இராணுவம் குவிப்பு: இளந்திரையன் எச்சரிக்கை!!!

யாழ். வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கான தயாரிப்புக்கள் மற்றும் ஒத்திகைகளை மேற்கொண்டிருப்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் நாள் பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்பாக ஊடகவியலாளர்களிடம் இளந்திரையன் கூறியதாவது:
ஆத்திரமூட்டும் நடவடிக்கையின் மூலமாக சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறும் பேச்சுக்களிலும் அது எதிரொலிக்கும்.
சிறிலங்காவின் வலிந்த தாக்குதல்கள் மற்றும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமையால் உருவாக்கப்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் இணைத் தலைமை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழைப்பை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகள் குழு ஜெனீவா வந்துள்ளது.
இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பால் மனித அவலங்கள் தொடர்பில் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் யாழ். மக்களினது வாழ்க்கையை மேலும் சீர்குலைக்கும் வகையில் சிறிலங்கா இராணுவம் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. கொழும்பின் இராணுவ நடவடிக்கைக்கு இப்போது சர்வதேச சமூகம்தான் சாட்சியாகும் என்றார் இளந்திரையன்.
பலாலி இராணுவத் தளத்திலிருந்து மேலதிகமான துருப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வடபோர்முனை முன்னரங்க நிலைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பலாலி, தொண்டமனாறு நீரேரி, வளலாய் மற்றும் வடமராட்சிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று சனிக்கிழமை இரவு முழுவதும் பாரிய பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் திடீர் யாழ். வருகையைத் தொடர்ந்து இந்த பயிற்சி நடவடிக்கைகளும் மேலதிக இராணுவக் குவிப்பும் நடைபெற்றுள்ளது.
பலாலி இராணுவ தளத்துக்கு நேற்று சென்ற சரத் பொன்சேகா, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் 51, 52, 53 ஆம் படையணிகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் பலாலி இராணுவ முகாமிலிருந்து நடத்தப்பட்டு வரும் யாழ். பண்பலை (FM) வானொலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வரணி, உசன், கச்சாய், நாவற்காடு, எழுதுமட்டுவாள், கொடிகாமம், மீசாலை கிழக்கு, அல்லாரை மற்றும் தனங்கிளப்பு ஆகிய தென்மராட்சி பிரதேசங்களில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வடபோர்முனை பகுதியில் இருதரப்பு ஆர்ட்டிலறி மற்றும் மோர்ட்டார் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சிக்கான தொலைபேசித் தொடர்புகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.
நன்றி>புதினம்.

No comments: