தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசாங்கக்குழுவின் பேச்சுவார்த்தை இன்று ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது தொடக்கம் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுக்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு இணக்கப்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இதனால் தமிழர் தாயகத்தில் பாரிய மனித அவலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஏ-9 பாதையை மூடி யாழ். குடா நாட்டின் 5 இலட்சம் மக்களை பட்டினிச் சாவு நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தற்போது தள்ளியுள்ளது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள ஜெனீவாப் பேச்சுவார்த்தையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அளிக்கப்படுகிற இறுதிச் சந்தர்ப்பம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எற்கெனவே தெரிவித்திருந்தார்.
இருப்பினும் மனிதாபிமானப் பிரச்சனைகளை பேச மறுத்து அரசியல் விவகாரங்களையே முதன்மையாகப் பேச வேண்டும் என்று சிறிலங்கா அரச தரப்புக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இன்றைய பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா குழுவினருடன் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் மற்றும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தனித்தனியே நேற்று ஆலோசனை நடத்தினர்.
இன்றைய பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றுகிறார். அடுத்து சுவிஸ் பிரதிநிதி உரையாற்றுவார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
நாளை ஜெனீவா நேரம் மாலை 4.30 மணியளவில் பேச்சுக்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஜெனீவா சென்றுள்ள விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோகர் விஸ்வநாதன் உருத்திரகுமார் தலைமையில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேன், இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், மகளிர் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தமிழ்விழி, சமாதான செயலகத்தைச் சேர்ந்த செல்வி ஆகியோர் விடுதலைப் புலிகளின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் அமைச்சர்களான ரோகித போகொல்லாகம, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, பேரியல் அஸ்ரப், சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோகன்ன, முன்னாள் காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment