Sunday, October 29, 2006

படுதோல்வியில் முடிந்தது பேச்சுவார்தை?

ஏ-9 பாதை திறக்கப்படுமாயின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
ஜெனீவா பேச்சுவார்த்தை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் றோயல் நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒக்ரோபர் 28, 29 ஆகிய திகதிகளில் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இப்பேச்சுக்களுக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் அனுசரணை வழங்கியது.
இணைத்தலைமை நாடுகள், 2006 ஓகஸ்டில் வெளியிடப்பட்ட தமது அறிக்கையில், இரண்டு தரப்பும் உடனடியாக வன்முறைகளை நிறுத்தி, இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கும்படியும், சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும்படியும் இரண்டு தரப்பையும் கேட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் தமது தொடக்க உரையின்போது, சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதன் பாதுகாப்புப் படைகளாலும் ஏற்படுத்தப்பட்ட அவசர மனிதாபிமானப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். யுத்தநிறுத்த உடன்பாட்டினை 100 வீதம் அமுல்படுத்துவதும், யுத்தநிறுத்தக் கண்காணிப்பக்குழுவினைப் பலப்படுத்துவதும் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையினைக் கொண்டுவரும் என்றும், சமாதான முயற்சிகளில் ஒரு திருப்திகரமான தீர்வினை எட்டுவதற்கு உதவும் என்றும் தன் ஆரம்ப உரையில் விடுதலைப் புலிகள் தெரிவித்தார்கள்.

மக்களுடைய துன்பங்களை பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டினார்கள். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் வாழ்ந்து வந்த ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை, அறுபதாயிரம் சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழும் நிலைக்குள் கொண்டுசென்றுள்ளது என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

இப்பாதை மூடப்பட்டதானது புதிய பேர்ளின் சுவரினைத் தோற்றுவிக்கின்றது என விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டினர். மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான உரிமையை மீறுகின்ற நடவடிக்கையாக ஏ-9 பாதையை மூடியமையானது அமைவதுடன் அது யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறுவது மட்டுமன்றி அது குடும்ப உறவினர்கள் பிரிவதற்கும் மனித அவலத்திற்கும் வழிவகுத்தது.

உணவை மட்டும் வழங்குவது சிறைக்கைதிகளுக்கு உணவளிப்பது போன்றதென விடுதலைப் புலிகள் குறிப்பிட்டனர். ஏ-9 பாதையை மீளத் திறப்பதற்கு மறுப்பதற்குத் திருப்திகரமான காரணங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. ஏ-9 பாதை 1994-2002 வரை மூடப்பட்டிருந்ததை சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலேயே அவ்வாறு நடைபெற்றதென்பதைச் சுட்டிக்காட்டிய விடுதலைப் புலிகள், மக்களை மீண்டும் போர்ச்சூழலுக்குள் தள்ளி, ஒரு மனிதப் பேரவலத்தைத் தோற்றுவித்து, ஓர் அடக்கப்பட்ட மக்களுடன் பேச்சுக்களை நடாத்துவதற்கே சிறிலங்கா அரசாங்கம் விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பினர்.
விடுதலைப் புலிகள் யுத்தநிறுத்த உடன்படிக்கை மற்றும் ஜெனீவா - 1 ஆகியவற்றை அமுல்படுத்துவது பற்றியும் கண்காணிப்புக்குழுவின் பங்களிப்பை வலுப்படுத்துவது பற்றியும் வலியுறுத்தினர். எவ்வாறிருந்தும், சிறிலங்கா அரசாங்கம் மேற்குறிப்பிட்ட விடயத்தில் மிகக்குறைந்தளவே கவனம் செலுத்தியது. தமது அதிருப்தியை வெளிப்படுத்திய விடுதலைப் புலிகள் இரண்டு தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதான முயற்சிகள் இடம்பெறுவதற்கு அத்திவாரமாக அமைந்த யுத்தநிறுத்த உடன்படிக்கை தவிர்ந்த வேறொரு ஆவணம் இருப்பின் அதை இனங்காட்டும்படி கேட்டனர்.
இரு பிரதான சிங்களக் கட்சிகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை விடுதலைப் புலிகள் வரவேற்றனர். இனப்பிரச்சினை தொடர்பாக தெற்கிலுள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் அரசியல் பேச்சுக்களில் ஈடுபடுவதற்குத் தாம் தயாராக இருப்பர் என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட்டு, ஒரு உகந்த சூழ்நிலை தோற்றுவிக்கப்படும் என விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கின்றனர்.
கலந்துரையாடலின் போது, சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தில் சனநாயகம் மற்றும் பன்மைத் தன்மைபற்றிய விடயங்களை எழுப்பியது. சிறிலங்கா அரசாங்கத்தைவிடத் தாம் சனநாயகக் கோட்பாடுகளுக்குத் தம்மை அர்ப்பணித்திருப்பதாகக் கூறிய விடுதலைப் புலிகள் இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகக் கட்டமைப்பிற்கான வரைபை உதாரணமாக எடுத்துக்கூறினர்.

சனநாயகம் மற்றும் பன்மைத்தன்மை ஆகியவற்றில் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்து முகமாக சிறிலங்கா அரசாங்கம் ஆறாவது திருத்தத்தை அகற்ற முடியுமா என விடுதலைப் புலிகள் சவால் விட்டனர். சனநாயக வழிமுறையூடாக தனிநாட்டை அமைப்பதைத் தடுக்கும் சிறிலங்கா அரசியலமைப்டபின் ஆறாவது திருத்தத்தையும் விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டினர். தமிழ் மக்களின் அபிலாசைகளை நிரூபிப்பதற்கு தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரை அகற்றி சர்வதேச கண்காணிப்பாளர் முன்னிலையில் ஒரு கருத்துக்கணிப்பை நடாத்துவதற்கும் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.
அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கு முன்னர் ஏ-9 பாதை திறக்கப்படுமாயின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்தற்குத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். எவ்வாறிருந்தும், சிறிலங்கா அரசாங்கம் இதற்கு சாதகமாகப் பதிலளிக்கவில்லை. அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்பதற்கு முன்னர் ஏ-9 பாதையைதத் திறப்பதற்கு நோர்வே ஏற்பாட்டாளர்களும் கண்காணிப்புக்குழுவும் தமது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

சிங்களத்துக்கு புரிந்த பாசை அடிதான், அடியைப்போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்.