Tuesday, October 17, 2006

"புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையம் மீது விமான தாக்குதல்."

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையமானது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.


புலிகளின் குரல் தமிழீழ வானொலி ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொக்காவிலில் உள்ள அதன் மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும், றொக்கெற் குண்டுகளையும் ஏவின.

புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம், இரண்டு கலையகங்கள் ஆகியவற்றின் மீதும் அதன் சுற்றாடல் மீதும் 25 வரையான ரொக்கெட் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன.

இக்குண்டுத்தாக்குதலில் புலிகளின் குரலின் ஒலிபரப்புக் கோபுரம் முற்றாக அழிந்தது.

ஒலிபரப்பு நிலையம் மற்றும் அதிலிருந்த உயர்வலு ஒலிபரப்புச் சாதனம் மற்றுமொரு ஒலிபரப்புச் சாதனம், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியன அழிக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட உபகரணங்களின் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

சிங்கள அரசின் திட்டமிட்ட இத்தாக்குதலின் போது ஒலிபரப்பில் ஈடுபட்டிருந்தோர் உடனடியாக தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன. சுரேந்தர் (வயது 23) மற்றும் கரிதாஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இத்தாக்குதல் மூலம் புலிகளின் குரல் ஒலிபரப்பு மையத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின்குரல் ஒலிபரப்பு மையம் மற்றும் அதன் ஒரு கிலோமீற்றர் சுற்றாடல் பிரதேசம் கிபிர்த் தாக்குதலில் முற்றாக அழிவுற்றுக் காணப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான புலிகளின் குரல் வானொலி நிலையப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார்.

அமைதிப் பேச்சுகள் நடைபெறும் நிலையில் தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதற்கான தாக்குதல் இது என்றும் இருப்பினும் புலிகளின் குரல் வானொலியின் சேவை தொடர்ந்து ஒலிபரப்பாகும் என்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறினார்.

http://www.tamilwin.com/article.php?artiId=512&catId=&token=dispNews

1 comment:

Chandravathanaa said...

தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதற்கான தாக்குதல்