Thursday, October 26, 2006

ஏ-9 பாதை திறப்புக்கு ஜெனீவாப் பேச்சில் முன்னுரிமை.

யாழ்ப்பாணத்தில் பாரிய மனித அவலத்துக்கு காரணமாக உள்ள ஏ-9 பாதை மூடப்பட்டதை திறக்க ஜெனீவாப் பேச்சுக்களில் வலியுறுத்த வேண்டும் என்று தமிழீழ பேச்சுக்குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

யாழ். குடாநாடு பாரிய மனித அவலத்தை எதிர்நோக்குகின்றது. ஏ-9 வீதி மூடப்பட்டது முதல் மனித அவலங்கள் பெருகி வருகின்றன. இந்த ஒரு வீதியே யாழ். குடாநாட்டை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைக்கின்றது.

ஒருபுறம் விற்பனைப் பொருட்களை கொண்டுவர முடியாமையால், வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். மறுபுறம் மீன்பிடித் தொழிலுக்கு முற்றாக விதிக்கப்பட்டுள்ள தடையால் மீனவர் சமூகம் நிராதரவான நிலையில் விடப்பட்டுள்ளது. வர்த்தகம் தேக்கநிலையை அடைந்துள்ளது.

இலங்கை அரசாங்க ஆயுதப்படைகளால் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளினாலும் விவசாய உற்பத்திகள் இல்லாமையினாலும் விவசாயமும் தடைப்பட்டுவிட்டது. இதனால் யாழ். மாவட்ட மக்களை ஒட்டுமொத்தமாக உதவிகளை எதிர்பார்த்து வாழவேண்டிய அவல நிலைக்கு தள்ளியுள்ளது.

இவ்வளவையும் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கான அவசிய உதவிகளையும் தடைசெய்துள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதே அரசசார்பற்ற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜீவோனோபாயத்துக்கான அத்தியாவசிய பங்கீட்டுப் பொருட்களுக்கும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ். குடாநாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகை 653,755 ஆகும். குடும்பங்களின் எண்ணிக்கை 188, 266 ஆகும். வறுமைக்கோட்டின் கீழ் உழலும் குடும்பங்களின் எண்ணிக்கை 125,465 ஆகும். இவற்றின் மக்கள் தொகை 431,516 ஆகும்.

இந்த வறிய குடும்பங்களின் எண்ணிக்கையில் 53,615 வறிய குடும்பங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து பங்கீட்டு அட்டைகள் மூலம் உலர் உணவுகளை பெறவேண்டிய நிலையில் உள்ளன. இக்குடும்பங்களை சார்ந்தோரின் எண்ணிக்கை 125,675 ஆகும்.
யாழ். குடாநாட்டில் 17,000 குடும்பங்கள் அன்றாட வாழ்க்கை ஓட்டத்திற்கு முற்று முழுதாக மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளன. இக்குடும்பங்கள் ஒரு லட்ம் பேரை உள்ளடக்கியுள்ளன. தற்பொழுது சிறிலங்கா அரசாங்கம் மீன் பிடித் தொழிலுக்கு முற்றாக தடை விதித்துள்ளது. இதுவரை இவற்றில் எந்தவொரு குடும்பத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

42,000 குடும்பங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளன. யாழ். குடாவுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மொத்த உணவுப் பொருட்கள் 11,000 மெற்றிக் தொன்கள் இவற்றில் 8,000 மெற்றிக் தொன்கள் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் அடங்கும். கடந்த மூன்று மாதங்களில் 14,000 மெற்றிக் தொன்கள் வகையிலான உணவுப் பண்டங்களே கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 19,000 தொன்கள்.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருட்கள்
- மண்ணெண்ணெய் 1500,000 லீட்டர்
- பெற்றோல் 8000,000 லீட்டர்
- டீசல் 3,298,000 லீட்டர்

தற்போது எரிபொருட்கள் கிடைத்தாலும் மொத்த தேவையை நிறைவு செய்வதாக இல்லை. உத்தியோகபூர்வ எண்ணிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் உண்டு. யாழ். குடாநாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால் மக்கள் மைல் கணக்கில் வரிசைக் கிரமமாக காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாலை நான்கு மணிக்கே மக்கள் வரிசை ஆரம்பமாகிவிடுகின்றது. சிறுவர்களும் வரிசைகளில் மாறி மாறி நிற்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களால் பாடசாலைக்கு செல்லமுடிவதில்லை. சமாளிக்க முடியாதவாறு பொருட்களின் விலைவாசிகள் அபரிதமாக ஏற்றம் கண்டுள்ளன

ஆகையால் வடக்கு-கிழக்கின் இந்த நிலைமைகள் தொடர்பில் பேச்சு மேசையில் முதன்மைப்படுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும். ஆகையால் ஜெனீவாப் பேச்சுக்களில் ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமான பிரச்சனைகளை முதன்மைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: