"சிறிலங்கா இராணுவம் வெற்றியும் பெறவில்லை- எதனையும் இழக்கவில்லை" என்று முகமாலை தோல்வி குறித்து மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:
கடந்த வாரம் நடந்த போர்க்களத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றியின் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களில் கடும்போக்கை புலிகள் கடை பிடிக்கக்கூடும்.
"அப்படி நடந்தால் அது இரட்டைப் பின்னடைவு" என்று நன்கறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
கடந்த புதன்கிழமை நடந்த அவமானகரமான தோல்வியைக் குறிப்பிட்டு கூறிய அந்த வட்டாரம், "முகமாலைக்கு முன்னர் நாம் உயர்நிலையில் இருந்தோம். யூலை மாதம் முதல் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நன்கு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். எதிர்பாரதவிதமாக நம்பிக்கை மற்றும் வலிமை குறித்து உணர்கின்றனர். இதனை பேரழிவாகக் கருதுகின்றனர்" என்றார்.
மாவிலாறு, மூதூர் மற்றும் யாழ். நடவடிக்கைகள் மோசமானது அல்ல. அரசாங்கத்தின் வலிமையை குறிப்பிட்ட அளவு அதிகரித்திருக்கிறது. இதன் பின்னணியில் வெளிநாட்டில் பேச்சு நடத்துவதற்கான நாள் குறிக்கப்பட்டது.
நோர்வே அனுசரணையில் ஒக்ரோபர் 28 ஆம் மற்றும் 29 ஆம் ஆகிய நாட்களில் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
அரசாங்கத்தின் உத்தியில் எதுவித மாற்றமும் இருக்காது என்று அமைதி முயற்சிகளுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "அவர்கள் வலுவான நிலையிலிருந்து பேசுவதற்கு முற்படுகின்றனர்" என்றார் அவர்.
இராணுவத்தினருக்கும் தலைமைக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இருந்திருந்தால் முகமாலை பின்னடைவைத் தவிர்த்திருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
134 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையும் 230 பேர் படுகாயமடைந்ததையும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் 40 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப் புலிகள் கூறப்படுவதை இராணுவம் நிராகரித்துள்ளது.
முகமாலையில் 6 யுத்த கவச வாகனங்கள் இழந்ததையும் இராணுவம் விருப்பமின்றி ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தத் தோல்வியை தோல்வியாகக் கருதக்கூடாது என்று கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். "இராணுவம் வெற்றியும்பெறவில்லை- எதனையும் இழக்கவில்லை" என்று அமைதிப் பேச்சுக்கான குழுவினரிடம் மகிந்த கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு புதிய ஆயுதங்கள், தளபாடங்கள் கிடைத்துள்ளமை பற்றியும் மகிந்த கூறியுள்ளார். இருந்த போதும் எப்படி கிடைத்தது என்பதை குறிப்பிடாத மகிந்த ராஜபக்ச, அவர்கள் ஆயுதங்களைப் பெற்றிருப்பதான தோற்றம் உருவாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவால் விடுதலைப் புலிகளின் அன்ரன் பாலசிங்கம் பேச்சுக்கு வராத நிலையில் முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதி, விடுதலைப் புலிகளின் குழுவுக்குத் தலைமை வகிக்கக்கூடும்.
"தங்களது நிலையை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை" உள்ளது என்று ஒரு அதிகாரி கூறினார். "பசுபதி அதற்கு நல்ல தெரிவாக இருப்பார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த சட்டத்தரணி வி.உருத்திரகுமாரனும் விடுதலைப் புலிகளின் குழுவுக்குத் தலைமை வகிக்கக் கூடிய நபராக இருப்பார் என்று கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Sunday, October 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment